வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை அழித்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்குங்கள் – அகில இலங்கை இந்துமாமன்றம் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் அகில இலங்கை இந்துமாமன்றம், இத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாட்டுடன் தொடர்புடையவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குமாறும் அந்த ஆலயத்தை அதே இடத்தில் மீண்டும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

வரலாற்றுச் சிறப்புமிக்க, சைமக்களின் முக்கிய தலங்களில் ஒன்றான வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் நாம் எமது ஆழ்ந்த கவலையையும், மிகுந்த கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.

எமது சைவசமயத்தலங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். ஒரு பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக இருப்பதன் காரணம் என்ன? எமது மதரீதியான சுதந்திரத்தைத் தடைசெய்யவேண்டும் என்ற நோக்கம் உள்ளதா? ‘தொல்பொருள் ஆராய்ச்சி’ என்ற போர்வையில் எமது ஆலயங்கள் மற்றும் மத வணக்கஸ்தலங்கள் அழிக்கப்பட்டு, அதே இடத்தில் மாற்று மதத்தின் ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அதற்கு அரசாங்கமும் ஓர் காரணமா? இல்லாவிடின் இன்னமும் அரசாங்கம் ஏன் பாராமுகமாக இருக்கின்றது? நீதிமன்றம் தடைவிதித்த பின்னரும்கூட மாற்று மதத்தினர் ஆலயம் அமைத்துவருவது இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா? அல்லது அரசு சார்ந்த மதப்பிரிவினரின் ஆட்சி நடைபெறுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

எனவே இத்தகைய மதப்பிரிவினரின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்து, அவற்றைத் தடுத்துநிறுத்துவதோடு, அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் அதே இடத்தில் அமைத்து, இந்து சமயத்தவரின் மதவழிபாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டியது மத விவகார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பு என்பதையும் நினைவுறுத்துகின்றோம்.

நாம் எந்தவொரு மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் எமது மத வழிபாட்டைத் தடைசெய்ய எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை இல்லை. எனவே இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.