காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெர்மனி கருத்து -இந்தியா கடும் எதிர்ப்பு

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி கடந்த 7-ம் திகதி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றிருந்தார். அங்கு ஜர்தாரியும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்னலினா பார்பாக்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஜர்தாரி கூறும்போது, “காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது.

இது பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச சட்டத்தின்படியும் ஐ.நா. தீர்மானங்களின்படியும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாத வரை தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ வாய்ப்பில்லை” என்றார்.

பின்னர் அன்னலினா கூறும்போது, “காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஐ.நா. தலையிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட ஜெர்மனி ஆதரவு அளிக்கும். மேலும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் அரசியல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, “காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இருதரப்பு பிரச்சினை என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இதில் 3-ம் தரப்பு தலையிடுவதற்கு எவ்வித பங்கும் இல்லை. மாறாக நீண்ட காலமாக காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.