Home நேர்காணல்கள் பொதுப் பரீட்சைகள் மட்டும் கல்வியியல் ஆகிவிட முடியாது – விரிவுரையாளர் திரு ஆ.நித்திலவர்ணன்

பொதுப் பரீட்சைகள் மட்டும் கல்வியியல் ஆகிவிட முடியாது – விரிவுரையாளர் திரு ஆ.நித்திலவர்ணன்

பொதுப் பரீட்சைகள் மட்டும் கல்வியியல்

பொதுப் பரீட்சைகள் மட்டும் கல்வியியல் ஆகிவிட முடியாது: அனைத்துலக கற்றல் நாளை முன்னிட்டு தமிழ் மாணவர்களின் தற்போதைய கல்வியில் தாக்கம் செலுத்தும் காரணங்கள் தொடர்பாகவும், அதை முன்னேற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பாகவும் யாழ். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ஆ.நித்திலவர்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

கேள்வி :
அனைத்துலக கற்றல் நாள் இந்த வாரம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது?

பதில் :
இலங்கையைப் பொறுத்தவரை அனைத்து மாகாணங்களிலும் தமிழ் மாணவர்கள் இருக்கின்ற போதிலும், வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அதிகமாக தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள். தமிழ்மொழி பேசுகின்ற மாணவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மாணவர்களும் உள்ளடக்கப்படுவார்கள். இலங்கையிலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் பாடசாலைக் கல்வி, பொதுக் கல்வி போன்றவற்றில் வீழ்ச்சி காணப்படுவது தொடர்பாக கல்வியிய லாளர்கள், பத்திரிகையாளர்கள், புலத்திலுள்ளவர்கள் கவலை வெளியிடுகிறார்கள்.

கல்வியின் அளவீடு எது என பார்த்தால், பொதுப்பரீட்சைகள் மட்டும் கல்வியியல் ஆகிவிட முடியாது. மாணவர்களுடைய ஆளுமை, ஒழுக்கம் போன்று பல விடயங்களை உள்ளடக்கியிருக்கும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை முடிவுகளை வைத்துக்கொண்டே கல்வி அடைவுகள் பொதுவாக பேசப்படுகின்றன.

அதே போன்று தமிழ் மாணவர்களின் அடைவுகள் , சிங்கள மாணவர்களின் அடைவு களுடனும் முஸ்லிம் மாணவர்களுடனும் ஒப்பிடப்படுகின்றது. கடுமையாக யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிக்கு பின்னர் தமிழ் மாணவர்களினது பொதுப்பரீட்சை அடைவுகள் வீழ்ச்சியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் எடுத்து காட்டுகிறது.

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையை எடுத்துக் கொண்டால் சித்தியடையும் மாணவர்கள் நோக்கத்திற்கு மாறாக பரீட்சையில் சென்று கொண்டிருப்பது தற்காலத்தில் கவலையை ஏற்படுத்தி யிருக்கிறது. இப் பரீட்சை இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று 6 ஆம் தரத்திற்கு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது. இரண்டாவது வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவது. ஆனால் மாணவர்கள் உளநெருக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள்.

இரண்டு வினாப் பத்திரங்களிலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளுதல் என்ற அடிப்படையில் நோக்கும் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக தமிழ் மொழி பேசும் மாணவர்கள் அல்லது தமிழ் மாணவர்களுடைய அடைவுகள் குறைவாகக் காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்கான காரணம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவற்ற கணிசமான பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அதேபோல் உயர்தரத்திலும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக்கொள்ளுதல் அல்லது மூன்று பாடங்களிலும் சித்தியடைதல்; அதேபோன்று தேசிய ரீதியில் சாதனை படைக்கின்ற மாணவர்கள் வரிசையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெரியளவில் தாழ்ந்துவிடவில்லை. ஆனால் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைவோர் வரிசையில் க.பொ.த உயர்தரத்திலும் பின்னணியில் இருக்கும் மாகாணங்களாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இருக்கின்றன.

சாதாரணதரப் பரீட்சை மிகவும் முக்கியமானதாகவே உள்ளது. குறித்த பரீட்சையில் சித்தியடையாவிட்டால், எதிர்கால கற்றல் நடவடிக்கையையோ, தொழில் வாய்ப்பையோ,  உயர்தரத்தையோ பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

சில மாணவர்களை தேசியத்துடன் ஒப்பிடும் போது தமிழ் மாணவர்கள் சில குறிப்பிட்ட பகுதியினர் திறமைகளை வெளிக்காட்டவே செய்கிறார்கள். ஆனால் வேறுசில அளவீடுகளில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறுதல் அல்லது அடிப்படைத் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ளத் தவறுதல் போன்ற விடயங்களில் தமிழ் மாணவர்கள் பின்தங்கி இருப்பதாகத்தான் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கேள்வி :
முழு இலங்கையுடன் ஒப்பிடும் போது தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்துள்ளதாக கருத்து நிலவுகின்றது அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில் :
தமிழ் மொழி மூலமான பரீட்சை முடிவுகளை, சிங்கள மொழி மூலமான பரீட்சை முடிவுகளுடன் ஒப்பிடுவதிவதிலும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அதேபோன்று வடக்கு கிழக்கில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் தென்பகுதி மாகாணங்களை விட குறைவானது. பரீட்சைக்குத் தோன்றுகின்ற மாணவர்கள் சம அளவில் இருந்தால் ஒப்பிடலாம்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.  தமிழ் மொழி பாட அடைவுகளை சிங்கள மொழி அடைவுகளுடன் வேறுபட்ட இரண்டு மொழி பாட அலகுகளுடன்  ஒப்பிடுவது என்பது விமர்சனத்திற்குரியது. இருந்த போதிலும், அனைத்துப் பாடங்களிலும் சித்தி அடைந்தவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அடிப்படைப் புள்ளிகளைப் பெறத் தவறுதல் போன்ற முக்கிய குறிகாட்டிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்தங்கித்தான் இருக்கின்றன.

இலங்கையில் 33 சதவீதமான மாணவர்கள் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்ற காரணத்தினால் பாடசாலைக் கல்வியில் இருந்து அகற்றப்படுகிறார்கள். இப் பரீட்சை சித்தி விகிதத்தில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்னடைவாகவே இருக்கின்றன. அதேபோன்றே வடக்கு கிழக்கிலுள்ள கல்வி வலயங்களும் பின்னடைவிவாகவே இருக்கின்றன. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள தீவகக் கல்வி வலயம் 99 ஆவது கல்வி வலயமாக இருக்கின்றது.

கேள்வி :
இலங்கையுடன் ஒப்பிடும் போது தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து உள்ளதாகக் கருத்து நிலவுகின்றது. அதற்கான காரணம் என்ன?

பதில் :
பல்வேறு காரணங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். சிலர் பாடசாலை சார்பாகவும், சிலர் மாணவர்கள் சார்பாகவும், சமூகம், அரசியல் இவ்வாறு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதனைக்  காணலாம்.

மாணவர்கள் சார்பான காரணிகள் என்று கூறும் போது, யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் மாணவர்களுக்கான அதிகரித்த பொழுதுபோக்கு வசதிகள், கற்றலின்மை, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாசிப்புக் குறைவு போன்ற விடயங்களைக் கூறுகிறார்கள்.

இன்னுமொரு காரணத்தையும் கூறுகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் தமது சொந்த உறவுகளுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனுப்புகின்ற வசதி வாய்ப்புகளை, இங்குள்ள மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாமல், உல்லாசமாக வாழ்வதுடன், வசதி வாய்ப்புக்களை அனுபவிப்பதுமாக ஒரு சூழல் காணப்படுகின்றது.

இவர்களுக்கு உழைப்பின் வலி, கல்வியினுடைய முக்கியத்துவம் என்பன தெரியாது. பொழுதுபோக்குகள், சிமாட் தொலைபேசி, அதிகரித்த செலவில் மோட்டார் சைக்கிள் இவ்வாறான விடயங்களைப் பலரும் குறிப்பிடுகிறார்கள். அதேபோல் பெற்றோர் சார்பான காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

குடும்ப வன்முறைகள், பாடசாலை தொடர்பான இடைத்தொடர்பின்மை, மதுப் பழக்கம், போதைவஸ்து போன்ற குடும்பசார் காரணிகளும், அதேபோன்று சமூகம் சார் காரணிகளும், யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

வடகிழக்கு மாகாணங்களில் அதிகளவு தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் ஆரம்பக்கல்வி வகுப்புக்களில் கற்பிக்கின்றார்கள். அவர்கள் போதிய பயிற்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான காரணிகள் மாணவர்களின் கற்றலில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அதேபோன்று கல்வி நிர்வாகத்திலும் பல்வேறு குறைபாடுகள் சொல்லப்படுகின்றன. கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் போன்றவர்கள் போதிய நிர்வாகத்திறனைக் கொண்டிருக்கவில்லை. அதுவும் மாணவர்களின் கற்றலில் தாக்கத்தை செலுத்துகின்றது. இதுபோன்று அரசியல் ரீதியான காரணங்களும் சொல்லப்படுகின்றது. வரலாறு போன்ற பாடங்களில் தமிழர் வரலாறு குறைவாக காணப்படுகின்றது.

அதேபோன்று சிங்கள மன்னர்களின் வரலாற்று விடயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை, இதனால் அவற்றை படித்து பாடமாக்குவதில் மாணவர்கள் இடர்ப்படுவதாக குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி கைநூல்கள் கிடையாமை, ஆசிரியர்கள் போதியளவில் பயிற்றுவிக்கப்படாமையும் காணப்படுகின்றது. வடகிழக்கில் பாடசாலை வளங்கள் தற்காலத்தில் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும், பல பாடசாலைகளில் வசதிக் குறைபாடுகள் காணப் படுகின்றன. வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், மலசல கூடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் பின்தங்கிய கிராமபுற பாடசாலைகளில் பூரணப்படுத்தப் படவில்லை. இவையும் மாணவர் அடைவில் செல்வாக்கு செலுத்துகின்றது.

அத்துடன் வடகிழக்கில் முன்பள்ளிக் கல்வி பலவீனமான நிலையில் காணப்படுகின்றது. அதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. முன்பள்ளி ஆசிரியர்கள் முறையாக பயிற்றுவிக்கப் படவில்லை. கணிசமானவர்கள் க.பொ.த சாதாரண உயர்தரம் சித்தியடையாதவர்களாக காணப் படுகின்றார்கள். தொழில் திறமை அல்லது தொழிற்பயிற்சி குறைந்தவர் களாகக் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கான வேதனம் மிகவும் குறைவாக காணப் படுகின்றது. இதனால் முன்பள்ளி கல்வி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. இதனால் காலப்போக்கில் மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு எண் அறிவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இதுவும் பொதுப் பரீட்சைகளில் கணிசமான அடைவுகளை பெற்றுக் கொள்வதில் செல்வாக்கை ஏற்படுத்துகின்றது.

கேள்வி :
தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த என்ன பணி ஆற்ற வேண்டும்?

பதில் :
தனியே ஒரு தரப்பினர் மட்டும் முயன்று  முன்னேற்றிவிட முடியாது. கல்வி வளங்களில் பங்குபற்றுகின்ற அனைத்துப் பங்குதாரர்களும்  மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகம், கல்வி அதிகாரிகள், அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகள் அனைவரும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக  இதை முன்னெடுக்க வேண்டும்.

தற்காலத்தில் நான் ஏற்கனவே சொன்ன தடைகளைத்  தாண்டுவது தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த ஆய்வின் அடிப்படையில் இருக்க வேண்டும். மாணவர்கள் பக்கத்தில் எழுத்தறிவு நுண்ணறிவு  அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்பள்ளிகளின் கட்டமைப்பு  வலுப்படுத்தப்பட வேண்டும். தரமான முள்பள்ளி நிறுவுவதற்கு ஏது நிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதே போன்று  ஒழுக்க விழுமியங்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக விமர்சனங்கள்  எழுகின்றன. அதை தடுப்பதற்குரிய பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். விழுமியக் கல்வி மாணவர்களிடத்தே வலுப்படுத்தப்பட வேண்டும்.  அதே போன்று பயிற்றப்படாமல் இருக்கின்ற ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள்  முறையாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கிராமப்புறப் பாடசாலைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.  அதே போன்று நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றது. மாணவர் பரம்பல் பாடசாலைகளுக்கிடையில் சீர் செய்யப்பட வேண்டும். கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் வலுவூட்டப்பட வேண்டும்.  அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.  அதே போன்று சமூக மட்டத்தில் பெற்றோருக்கான கல்வி வளங்கள் நிகழ்ச்சித் திட்டங்களைச் செய்ய வேண்டும். பெற்றோர்கள் பாடசாலைகளுடன் நல் உறவைப் பேணி, மாணவர் கல்வி தொடர்பாக ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்.

அதே போன்று துரித கற்றல் நிகழ்சித் திட்டங்கள் ஊடாக மாணவர்களுடைய கற்றல் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். கோவிட்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் மாணவர்கள்  தங்களது கல்வியை இழந்திருக்கிறார்கள்.  துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக அதனைச் செய்யவேண்டும்.  அதற்குரிய பொறிமுறைகளை கண்டறிய வேண்டும்.  அதே போன்று அனைத்து மாணவர்களுக்கும் கலைத்திட்டம், மாணவர் நட்புறவாளராக அமைய வேண்டும். அதே போன்று புலம்பெயர் உறவுகளும் எமது பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பாக  கூடிய கரிசனையுடன் செயற்பட்டு அதற்குரிய ஊக்கங்களையும்  செயற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

ஏற்கனவே கோவிட்டுக்குப் பின்னர்  புலம்பெயர் அமைப்புக்கள் பல்வேறு செயற்பாடு களை முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் ஆய்வின் அடிப்படையில் தேவைகள் என்ன இருக்கின்றது எனக் கண்டு  அந்த நலத்திட்டங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாகப் பின்தங்கிய வலயங்களான தீவகம், வலிகாமம் கல்வி வலயம்  கிளிநொச்சி, துணுக்காய், வவுனியா வடக்கு போன்ற கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்கு அனைவரும் கூடிய கரிசனையுடன்  செயலாற்ற வேண்டும்.

 

Exit mobile version