இலங்கையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு-90 சதவீத உணவு விடுதிகள் மூடப்பட்டதாக தகவல்

இலங்கையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. மக்கள் மண்ணெண்ணெய் வாங்கவும், பெட்ரோல் நிரப்பவும் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில்,  அடுத்தடுத்து இலங்கையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு காரணமாக தங்கும் மற்றும் உணவு விடுதிகளும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்திலும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் விடுதி தொழில் துறையிலுள்ள சுமார் 5 இலட்சம்பேர் பாதிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சூழலில் பலர் தொழில்களை இழந்துள்ளனர் எனவும், விடுதிகளுக்கான  வாடகைப் பணத்தைகூட செலுத்த முடியாமல், உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் உணவு விடுதி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 90 சதவீதமான விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் நாட்டில் அதிக நேரம் மின்வெட்டும் இடம்பெறுகின்றது. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில்  உள்ளதை அவதானிக்க முடிகின்றது. வரும் நாள்களில் மின்வெட்டு அதிகம் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்படுகிறது.

மேலும் கடன் அதிகமாகி, அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனதால் வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றி வந்த கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தற்போது இலங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொழும்பு நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிபர் மாலிகையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடனை பெற்று வருகின்றது இலங்கை.   சர்வதேச  நாணய நிதியத்திடம் கடன் பெற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News