Home ஆய்வுகள் இலங்கை – சீன உறவுகளில் ‘இடைவெளி’ வளர்கிறதா? – அகிலன்

இலங்கை – சீன உறவுகளில் ‘இடைவெளி’ வளர்கிறதா? – அகிலன்

இலங்கை சீன உறவுகளில் இடைவெளி

அகிலன்

இலங்கை சீன உறவுகளில் இடைவெளி வளர்கிறதா? இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் உருவாகியுள்ள ‘இடைவெளி’ மேலும் வளர்கிறதா என்பதுதான் இராஜதந்திர வட்டாரங்களில் கடந்த வாரம் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி. கொழும்பு வந்த சீன உரக்கப்பலால் உருவான சிக்கல்களையிட்டு, இந்தப் பகுதியில் முன்னர் பார்த்திருந்தோம். இப்போது, மற்றொரு புதிய அறிவிப்பை கடந்த வாரம் சீனா அறிவித்திருந்தது. இதனையடுத்தே இந்தக் கேள்வி எழுகின்றது.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பு இலங்கையை மையப்படுத்திய வல்லரசுகளின் போட்டி அரசியலின் பிந்திய நிலைமையை வெளிப்படுத்தியது.

யாழ்ப்பாணத்தின் தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் சீனாவால் உருவாக்கப்படவிருந்த காற்று, கடலலைகள் என்பவற்றின் மூலம் மின்சாரம் பெறும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்படுகின்றது என்பதுதான் சீனத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு.

குறிப்பிட்ட மூன்று தீவுகளையும் சீனாவுக்கு வழங்குவதற்கான இணக்கப்பாடு இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே சில மாதங்களுக்கு முன்னதாக எட்டப்பட்டிருந்தது. இதுகூட இரகசியமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கைதான். இது குறித்த தகவல்கள் கசிந்த போது தமிழ்க் கட்சிகள் அதனை கடுமையாக ஆட்சேபித்திருந்தன. இந்தியாவின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தல் என்ற ரீதியில், தமிழ்க் கட்சிகளின் அறிக்கைகள் அமைந்திருந்தன.

இந்தியாவும் இராஜதந்திர வழிமுறைகளில் இதற்கு தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின் தென்பகுதியில் சீனா பெருமளவுக்கு துறைமுக அபிவிருத்தித் திட்டங்களின் மூலமாக ஊடுருவியிருக்கும் நிலையில், வடக்கில் – குறிப்பாக யாழ்ப்பாணத் தீவுகளில் சீனா கால்பதிப்பது என்பது இந்தியாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில்தான் தென்னிந்தியா உள்ளது. தீவுப் பகுதிகளிலிருந்து இந்தியாவின் கடல் போக்குவரத்தை தெளிவாகக் கண்காணிக்க முடியும். இது நிச்சயமாக இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகக்கூடியது.

இந்தப் பின்னணியில் அதனைத் தடுத்து நிறுத்தக்கூடியதான காய்நகர்த்தல்கள் சிலவற்றை இந்தியா முன்னெடுத்திருந்தது. சர்வதேச அரங்கில் – குறிப்பாக மனித உரிமைகள் பேரவை போன்றவற்றில் டில்லியின் ஆதரவு இல்லாமல் இலங்கையால் சமாளிக்க முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது அவர்களுக்குள்ள ஒரு துரும்புச் சீட்டு!

இலங்கை விடயத்தில் கடுமையான அணுகுமுறை ஒன்றை முன்னெடுக்கத் தவறினால், நிலைமைகள் இந்தியாவின் கைகளை மீறிப்போகலாம் என்ற வகையில், நரேந்திர மோடி அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர் விவகாரத்ததில் இந்தியா மீண்டும் அதிகளவு அக்கறை காட்டத் தொடங்கியது இந்தப் பின்னணியில்தான்.

சீனாவின் திட்டம்

சேதனப் பசளை கப்பல்

‘சேதனப் பசளை கப்பல்’ விவகாரத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்தது. தீவுப் பகுதித் திட்டங்களை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்திருப்பது இந்த இடைவெளியை மேலும் அதிகப்படுத்துவதாக இருக்கலாம். இந்தியாவும், அமெரிக்காவும் எதிர்பார்த்ததும் அதனைத்தான்!

இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, நிதி உதவி கோரி புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த தருணத்தில்  சீனத் தூதரகம் வெளியிட்ட இந்த அறிவிப்பு, சீனாவின் முக்கியமான ஒரு அணுகுமுறை மாற்றத்தை வெளிப்படுத்தியது.

இந்தியத் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தால் இலங்கைக்குள்ள நெருக்கடியை உணர்ந்துகொண்ட ஒரு நிலையில்தான் யாழ். தீவுப் பகுதி திட்டங்களை இடைநிறுத்துவதாக சீனா அறிவித்தது. சீனாவைப் பொறுத்தவரையில் நிலத்தைக் கொடுத்தால்தான் அவர்கள் கடன்களைக் கொடுப்பார்கள் என்ற நடைமுறை ஒன்றுள்ளது. அதனால், சீனாவிடமிருந்து புதிதாக நிதி உதவிகளை எதிர்பார்க்க முடியாது என்பது சீனாவின் இந்த அறிவிப்பின் மூலம் உணர்த்தப்பட்டிருக்கும் செய்தி!

யாழ். தீவுகளைக் கைவிட்டாலும், அதற்கு மாற்றாக மாலைதீவுகளை சீனா பயன்படுத்தப் போகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள, ருவிட்டர் பக்கத்தில் மேற்படி நிர்மாணத் திட்டத்தைத் தாம் இடைநிறுத்துவதாகத் தெரிவித்துள்ள அதேவேளையில், அத்திட்டத்தை மாலைதீவிலுள்ள 12 தீவுகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீடு காரணமாகவே தாம் இந்த முடிவுக்கு வரவேண்டியிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் தரப்பு என அவர் குறிப்பிடுவது இந்தியாவைத்தான் என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான்!

ஆனால், யாழ்ப்பாணத்தில் தமது திட்டத்தை சீனா இடை நிறுத்தினாலும், அதனை ஈடுசெய்யக்கூடிய வகையில் மாலைதீவை பயன்படுத்தப் போகின்றது. மாலைதீவும் சீன சார்பான ஒரு அரசாங்கத்தைக் கொண்ட நாடாக இருப்பதால், சீனாவைப் பொறுத்தவரையில் பாதிப்பு பெரிதாக இருக்கப்போவதில்லை.

இந்தியா வருமா?

இலங்கையை மையப்படுத்திய பிராந்திய அரசியலில் உருவாகியுள்ள ஒரு மாற்றத்தை இது காட்டுகின்றது. தீவுப் பகுதிகளில் காற்றாலை மின்நிலையங்களை அமைக்கும் விருப்பத்தை இந்தியா ஏற்கனவே தெரிவித்திருந்தது. தமிழ் அரசியல் கட்சிகள் சிலவும் இந்தியா இதற்கு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே முன்வைத்திருந்தன. இதுகுறித்த தமது பிரதிபலிப்பை இன்றுவரை கொழும்பு வெளிப்படுத்தவில்லை. ஆனால், அதற்கான அழுத்தங்கள் கொழும்புக்கு இந்தியத் தரப்பிலிருந்து கொடுக்கப்படலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

புதுடில்லி விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் பஸில் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்திப்பை மோடி தவிர்த்துக்கொண்டது கொழும்புக்கு இது ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியுடன் புதுடில்லியிலிருந்து புறப்பட்ட பஸிலுக்கு மற்றொரு அதிர்ச்சி கொழும்பில் காத்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு மோடி அழைத்திருக்கின்றார் என்பதுதான் அந்தச் செய்தி.

இலங்கையின் சக்திவாய்ந்த ஒரு அமைச்சராக மட்டுமன்றி, நாட்டின் சார்பில் தீர்மானங்களை எடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டுள்ளவராகவும் பஸில் இருக்கின்றார். நிதி அமைச்சராக உள்ள அவர், பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சந்தர்ப்பத்தில் புதுடில்லி சென்றது அந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை மட்டுமன்றி, அவரது எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியது. அந்தளவு நிதி நெருக்கடிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமையும், பாதுகாப்புச் செயலாளரையும் மட்டும் சந்தித்த நிலையில் பஸில் நாடு திரும்பியிருக்கின்றார்.

பசில் ராஜபக்ஷ

பஸிலுடனான சந்திப்பை மோடி தவிர்த்தமையும், அதேநேரம் கூட்டமைப்பை புதுடில்லிக்கு அவர் அழைத்தமையும் கொழும்புக்கான தெளிவான ஒரு செய்தியாகவே கருதப்படுகின்றது. கூட்டமைப்பு இந்த அழைப்பை ஏன் பயன்படுத்தத் தவறியது என்பது வேறுகதை!

இந்தியா கொடுத்த அழுத்தங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாகவே தெரிகின்றது. சீனாவுடனான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் விரிசல்களும் இந்தியாவுடன் நெருங்கிச் செல்ல வேண்டிய அவசியத்தை ராஜபக்‌ஷக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மாற்றமடையும் இந்த நிலைமைகளை தமிழ்த் தரப்பினர் மீண்டும் சரியாகக் கையாளத் தெரியாமல் கோட்டைவிடப் போகின்றார்களா? அல்லது பயன்படுத்திக் கொள்வார்களா?

Exit mobile version