ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் ஊசலாடும் கருத்துச் சுதந்திரம்- அகிலன்

கொழும்பில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு இங்கு இடமுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் கொடூரமாகக் கொல்லப்பட்டதை எதிர்த்து முன்னிலை சோஷலிசக் கட்சி அமைதியாக நடத்திய கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரால் கடுமையான வன்முறைப் பிரயோகத்துடன் ஒடுக்கப்பட்டது.

சுயாதீன ஊடகவியலாளரும், சிறிலங்கன் விமான நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியுமான ரஜீவ் ஜயவீரவின் உடல் சுதந்திர சதுக்கத்தில் சூட்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இது தற்கொலை எனக் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் மர்மங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. மூன்றாவது சம்பபவத்தில் பிரபல பெண் பத்திரிகையாளர் தரிசா பஸ்தியனுடைய மடிக்கணினி அவரது வீட்டிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனால் அவர் கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருட இறுதியில் இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற போதே கருத்துச் சுதந்திரம் குறித்த அச்சம் வெளியிடப்பட்டது. கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த பலர் அவசரம் அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். சன்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றிய தரிசா பஸ்த்தியனும் சுவிட்சர்லாந்து சென்று அங்கிருந்து லண்டனுக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர் அவரமாகச் சென்றதாலோ என்னவோ தன்னுடைய மடிக்கணினியைக் கொண்டு செல்லவில்லை. அவரது இல்லத்திலேயே அது இருந்துள்ளது. அதனைத்தான் பொலிஸார் இப்போது திடீரென அவரது வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்திக் கைப்பற்றியிருக்கின்றார்கள்.

பொலிஸ் அராஜகம்

அமெரிக்காவில் வெள்ளையினத்தவரான பொலிஸ்காரர் ஒருவர் மே 25 ஜோர்ஜ் பிளாய்ட் என்ற ஆபிரிக்க அமைரிக்கரை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவத்துக்குப் பிறகு இனவெறிக்கு எதிராக உலகில் பரவலாக மூண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் இலங்கை வரையில் பரவியுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அருகாமையில் முன்னணி சோஷலிசக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டு அதில் கலந்துகொண்ட சுமார் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘கோவிட் 19’ வைரஸ் பரவல் காரணமாக சில சட்டமூலங்களை இலங்கை அரசாங்கம் கடுமையாக்கியிருந்தது. அதில் முக்கியமானது ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு. சமூதாய இடைவெளி பேணப்பட வேண்டும், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற இரண்டும் முக்கியமானவை. முன்னணி சோஷலிசக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் இந்த இரண்டும் பின்பற்றப்பட்டது என்பது முக்கியமானது. அமெரிக்க துதாரகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் திடீர்த் தடை ஒன்றை விதித்திருந்த போதிலும் கூட, அவ்வாறான கோரிக்கை எதுவும் தம்மால் முன்வைக்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.625.500.560.350.160.300.053.800.900.160.90 3 ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் ஊசலாடும் கருத்துச் சுதந்திரம்- அகிலன்

சுகாதார பாதுகாப்பினைக் காரணம் காட்டி பேச்சு சுதந்திரம் முடக்கப்படுகின்றது. பொது மக்கள் தங்களின் அரசியல் கருத்துக்களையும், பொது கருத்துக்களையும் சுதந்திரமான குறிப்பிடுவதற்கு அரசாங்கம் தடை விதிக்கின்றது என்ற குற்றச்சாட்டை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட, பல்வேறு அமைப்புக்களும் முன்வைத்திருந்தன. கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு நடந்துகொண்ட முறை இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகவே இருந்தது.

அமைதியான முறையிலும், சமூக இடைவெளியைப் பேணியும்,பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில்தான் இந்தக் கவனயீர்ப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தடுப்பதற்காக அதிகளவுக்குப் பலத்தைப் பொலிஸார் பயன்படுத்தினார்கள். அமைதியாக நடைபெற்ற போராட்ட களம் போர்க்களமாக்கப்பட்டது. 50 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரைக் கைது செய்யும் போது பொலிஸார் செயற்பட்ட முறை கடுமையான கண்டனத்தைப் பெற்றிருக்கின்றது.

பொலிஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமை சட்டப்படி தவறானதாக இருக்கலாம். ஆனால், போராட்டம் அமைதியாகவும், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியுமே நடத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு இந்தளவுக்கு மோசமாகப் பலத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் கலைந்து சென்றிருக்க வேண்டிய ஆர்ப்பாட்டத்தை அநாவசியமாக பொலிஸாரே குழப்பி அமைதியின்மையை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை மறுதலிக்க முடியாதுள்ளது. இது எதிர்ப்புப் போராட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றது.

பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தல்

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை பொலிஸார் கைப்பற்றிய சம்பவம், இலங்கை ஊடகத்துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. மடிக்கணியை அதிகாரிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு, தரிசா துன்புறுத்தல்கள் எதுவுமின்றி தனது பத்திரிகை பணியை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் கொழும்பில் சுவிஸ்தூதரக பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் தொடர்பில் சிஐடி அதிகாரிகள் தரிசா பஸ்டியனின் வீட்டை சோதனையிட்டு அவரது மடிக்கணிணியை எடுத்துச்சென்றுள்ளனர் என அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். நியுயோர்க் டைம்சிற்காக பணியாற்றுபவரும், இலங்கை அரசாங்கத்தின் சண்டே ஓப்சேவரின் முன்னாள் ஆசிரியருமான தரிசா பஸ்டியன் முன்னர் இரு தடவைகள் நீதிமன்ற உத்தரவின்றி தனது மடிக்கணிணியை கைப்பற்ற முயன்றனர், இம்முறை உத்தரவுடன் வந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.02 ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் ஊசலாடும் கருத்துச் சுதந்திரம்- அகிலன்

தூதரக பணியாளரின் கடத்தல் நாடகம் ஒரு திட்டமிட்ட நாடகம் என குற்றம்சாட்டிவரும் இலங்கை அதிகாரிகள், தரிசா பஸ்டியன் தூதரக பணியாளருடன் தொடர்பிலிருந்தார், அவருக்கு இந்த கடத்தல் விவகாரத்துடன் தொடர்புள்ளது என தெரிவிக்கின்றனர். பஸ்டியன் கடந்த நவம்பரிலேயே இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்தவேளையே அங்கு சோதனைகள் இடம்பெற்றுள்ளன.

தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை கைப்பற்றியமைக்கு பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு கடுமையான ஆட்சேபணையை வெளியிடுவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பின் ஆசியாவிற்கான ஆராய்ச்சியாளர் அலியா இப்திஹார் இந்த நடவடிக்கை பத்திரிகையாளரின் செய்தி மூலங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

தரிசா பஸ்டியனிற்கு எதிரான அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது விமர்சனத்துடனான செய்திவெளியிடலிற்கான பழிவாங்கல் நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது. குறிப்பிட்ட மடிக்கணிணி கைப்பற்றப்பட்ட பின்னர் அது மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என ஆராயுமாறு 16 ம் திகதி நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர சதுக்க சடலம்

கொழும்பு சுதந்திர சதுக்கம் பிரதேசத்தில் பகுதிநேர பத்தி எழுத்தாளரும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான ரஜீவ ஜயவீரவின் சடலம் ஜூன் 13 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது. சுதந்திர சதுக்க வளாகத்தில் மரமொன்றிற்கு கீழ் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு அருகிலிருந்து துப்பாக்கியொன்றும், கடிதமொன்றும் போலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரஜீவ ஜயவீர பெரும்பாலும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறுகின்றார். ரஜீவ ஜயவீர உயிரிழப்பதற்கு முன்னர் தனது சகோதரருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக நேற்றிரவு தனது சகோதரனுக்கு எஸ்.எம்.எஸ் ஊடாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாகவேதான் இவ்வாறான தீர்மானமொன்றை எட்டுவதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.Rajeewa Jayaweera E ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் ஊசலாடும் கருத்துச் சுதந்திரம்- அகிலன்

அத்துடன், துப்பாக்கியை கொள்வனவு செய்வதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றுகொண்டுள்ளதாகவும், கோவிட் 19 தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியை வைப்பிலிட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ரஜீவ ஜயவீரவின் மனைவி வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, ரஜீவ ஜயவீர ட்விட்டர் கணக்கில் அதிகளவில் பதிவேற்றங்களை செய்யும் நபர் என்பதுடன், அவர் உயிரிழந்ததன் பின்னர் அவரது ட்விட்டர் கணக்கு செயலிழந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஜீவ ஜயவீர இலங்கையின் பிரபல ஆங்கில இணையத்தளம் உள்ளிட்ட ஊடகங்களுக்கு பகுதிநேர பத்தி எழுத்தாளராக கட்டுரைகளை எழுதுவதுடன், அவர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது மரணம் தற்கொலை எனக் கூறப்படுகின்ற போதிலும். இதில் பல கேள்விகள் பதிலில்லாமல் உள்ளன.