Tamil News
Home செய்திகள் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்வை நிம்மதியாக கழிக்க வேண்டும்- சட்டவாளர் சிவகுமார்

விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்வை நிம்மதியாக கழிக்க வேண்டும்- சட்டவாளர் சிவகுமார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகிய  6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.  

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்த மே 18ம் திகதி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர்  மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விடுதலை ஆகும்  நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின் இலங்கைக்கு திரும்பிச் செல்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்வை நிம்மதியாக களிக்க வேண்டும் என எழுவர் விடுதலை வழக்கில் தொடர்ந்து செயற்பட்டு வந்த சட்டவாளர்  சிவகுமார் இலக்கு  ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி……

கேள்வி : 30 வருடங்களாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் பேரறிவாளனின் விடுதலையைத் தொடர்ந்து  தற்போது  இந்திய உச்ச நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது.  இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:

குறிப்பாக பேரறிவாளன் வழக்கு நீண்ட நாட்களாக நடந்திருந்தது. அதில பல்வேறு கோணங்களில்    இருக்கக்கூடிய நியாயங்களை, விடுதலைக்கான காரணங்களை நீதிமன்றத்தில்  தொடர்ந்து சுட்டிக்காட்டியிருந்தோம். அவர் குறித்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்து   கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து  பேரறிவாளன் வழக்கில இருக்கக்கூடிய விடயங்கள்  ஏனைய அறு  பேருக்கும் பொருந்தும்  என்பது எமது கருத்தாக இருந்தது. இந்நிலையில் ஏனைய  ஆறுபேரும்  சிறையிலிருந்த காலத்தை   எப்படிப் கழித்தார்கள், அவர்களின் மேற்படிப்புக்கள், மற்றும் அவர்களின் நன் நடத்தைகள் இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தற்போது உச்சநீதி மன்றம் பேரறிவாளனைப்போன்று இவர்களுக்கும் விடுதலை வழங்கியுள்ளது.

இது காலந்தாழ்ந்த விடுதலை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.   ஆனால் இன்றைக்காவது அவர்கள் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இது  உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி. இது உலக அரங்கில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஊக்கத்தைக் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகத் தான் நான் பார்க்கிறேன்.

கேள்வி :  பேரறிவாளின் விடுதலையின் பின் ஆறு மாத கால இடைவெளியில்   குறித்த ஆறு பேருக்கும் தற்போது விடுதலை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கா?

பதில்: அரசியல் பின்னணி எதுவுமே இல்லை. இவ்வளவு ஆண்டு காலம் கடந்து விடுதலை என்கின்ற  போது இது தாமதம் என்று தான் நாங்கள் பாக்க முடியும்.  நளினி மற்றும் ரவிச்சந்திரன் தொடுத்திருந்த வழக்கில், எங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தனர்.   உடனே   தமிழக அரசு சார்பிலுயும் ஆறு பேரின் விடுதலையில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.   மேலும் அவர்களை  மாநில அரசு  தான் அவர்களுடைய  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஆக  அவர்களை  சமூகத்தில் கலக்கலாமா இல்லையா என்ற முடிவை எடுப்பது  மாநில அரசு தான் என்பதை வழக்கில்  தெளிவாக   குறிப்பிட்டதினால் இன்று  நீதிமன்றத்தின் இந்த விடுதலை அறிவிப்பில்  அரசியல் இருக்கின்றமாதிரி எதுவும் இல்லை.

கேள்வி: இந்த தீர்ப்பினுடைய முக்கியத்துவத்தை நீங்கள் எப்பிடிப் பாக்கின்றீர்கள்?

பதில்: ஏற்கனவே குறிப்பிட்டது போல்   சிறையில் இருந்த எழுவருமே   மிகச் சாமான்யர். இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்குரிய நபர்  இந்தியாவினுடைய பிரதமராக இருந்தவர்.  ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு சாமான்யனுக்கு  எளிதில் நியாயம் நீதி கிடைத்துவிடும்  என்று சொல்ல முடியாதில்லையா?  இந்த வழக்கில் இருப்பவர்களை விடுதலை செய்வதற்காக   மிகக் கடுமையான போராட்டம்.  மேலும்  இந்த வழக்கினுடைய தன்மை, குற்றப்பின்னணி எல்லாமே  பெருமளவு  வலுச்சேர்த்தது.  குறித்த எழுவர் விடுதலைக்காக தோழர் செங்கொடி தனது உயிரை தியாகம் செய்திருந்தார். அதனூடாகத் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் இயக்கங்கள், பொதுநல இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள்  அனைனவருமே அணிதிரண்டு, அவர்களுடைய விடுதலைக்காகத் தொடர்ந்து குரல்  கொடுத்தார்கள். பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். அரசு தீர்மானமே நிறைவேற்றியது.    எனவே இவையாவும் இந்த விடுதலையின்    பின்னணியில்  இருக்கின்றது.

கேள்வி : தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள குறித்த ஆறுபேரில் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களுடைய நாட்டுக்கு செல்ல முடியுமா?  மேலும் அவர்களுடைய வாழ்க்கை முறை இனி எவ்வாறு இருக்கும்?

பதில்:    எங்களுடைய  கோரிக்கை  என்றவென்றால் அவர்களை இலங்கைக்கு  அனுப்ப வேண்டாம் என்பது தான்.  அவர்கள் ஏற்கனவே தமிழ்நாட்டை நம்பி  வந்தவர்கள். அவர்களுக்கு  ஒரு தாயுள்ளத்தோடு தான் முதலமைச்சர் அணுகுவார் எனற ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. நிச்சயமாக அப்படித் தான் அணுகுவார். ஏனென்றால் திமுக    ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த ஏழு பேர் விடுதலையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியுமே எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.   முலும் குறித்த நான்கு பேரையும் இலங்கைக்கு தமிழக அரசு அனுப்ப முயற்சிக்காது என்றுதான் நினைக்கின்றேன். அனுப்பவும் கூடாது.

மேலும் குறித்த நான்கு பேரும்  இலங்கைக்கு அனுப்ப்படுவார்களா என்பது குறித்தும் விடுதலை செய்யப்பட்டவர்கள் குறித்தும்   மாநில அரசோடு பேசவுள்ளோம்.  விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்கள் நான்கு பேரின்  விருப்பங்களைக் கேட்டு    அந்த விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி, அதாவது சட்டத்துக்கு உட்பட்டு, அவர்களுடைய எஞ்சிய வாழ்வை அவர்கள் நிம்மதியாகக் கழிப்பதற்காக அந்த நால்வரும் என்ன கேக்கிறாங்களோ அதைக் கொடுப்பது தொடர்பாக மாநில அரசுடன்  பேசுவோம்.

ஏற்கனவெ விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் நிறுவுனர் திருமாவளவன்  அவர்களை  இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று கூறியிருக்கின்றார்.   அதே கோரிக்கை தான் அனைவருக்கும்  இருக்கின்றது.  இந்த வழக்கு தொடர்பில் திமுக ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு மிக நேர்மையாகச்  செயற்பட்டிருக்கிறார்கள்.

Exit mobile version