காற்றின் தரம் குறித்த கண்காணிப்பு , அறிக்கையிடலுக்காக 3 இலட்சம் யூரோவை மானியமாக வழங்கும் பிரான்ஸ்

France Supports Effective Air Quality Monitoring And Reporti... | MENAFN.COM

இலங்கையில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கு ஆதரவளிக்கும் 300 000 பிரான்ஸ் யூரோ மானிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரெடா சொயுர்ஜி  மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்  அனில் ஜாசிங்க ஆகியோரால், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரசென்ஸ் மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர்  நசீர் அஹமட் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை (30) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள பல முக்கிய நகரங்களைப் போலவே கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களுக்கும் காற்று மாசுபாடு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. டெல்லி மற்றும் டாக்கா போன்ற சில பிராந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை இன்னும் சிறந்த காற்றின் தரக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

இருப்பினும், ஆண்டுதோறும் காற்றின் தரம் பாரிய பிரச்சினையாக மாறி வருகிறது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு ஆண்டும், இலங்கை பருவகால காற்று மாசினால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் தூய்மையற்ற காற்று மற்றும் உள்நாட்டு நடவடிக்கைகளால் இது அதிகரித்து வருகிறது.

இவ்வாண்டில் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆபத்தான நிலைகளை அடிக்கடி காண்பித்தன. கோவிட்-19 பயணக் கட்டுப்பாடு மற்றும் 2022 இல் ஏற்பட்ட மிக சமீபத்திய எரிபொருள் நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக நகர்புறம் வாழ் மக்களுக்கு சிறந்த காற்றைக் சுவாசிப்பதற்கான அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

காற்றின் தரம் ஒரு முக்கியமான அபிவிருத்தி குறிகாட்டியாகும். உண்மையில், காற்று மாசுபாடு அதிக பொருளாதார மற்றும் சமூக செலவுகளைக் கொண்டுள்ளது. நகர் புற மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முதலாவதாக இது ஆஸ்துமா, நுரையீரல் நோய் மற்றும் பல்வேறு சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இது அதிக மனித செலவுடன் வருகிறது. இது சுகாதாரத் துறையில் பொருளாதாரச் சுமையை உருவாக்கி, பொது மக்களின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனைக் குறைக்கிறது. நல்ல காற்றின் தரம் ஒரு நகரத்தின் கவர்ச்சியின் ஒரு முக்கிய குறிகாட்டியாகும்.

அந்த வகையிலேயே இலங்கையில் காற்றின் தரம் குறித்த கண்காணிப்பிற்கும் , அது குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கும் மானிய உதவியை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.