முன்னோக்கிய நகர்வு-துரைசாமி நடராஜா

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகைதந்து அடுத்த வருடத்துடன் இருநூறு வருடங்களாகின்றன.இக்காலப்பகுதிக்குள் இம்மக்கள் பல்வேறு துன்ப துயரங்களையும் அனுபவித்துள்ள நிலையில் இன்னும் இதிலிருந்தும் மீட்சி பெற்றதாக இல்லை.இதனிடையே இம்மக்களின் இருநூறு வருடகால வாழ்க்கை போக்குகள், எதிர்கொண்ட சவால்கள், முன்னோக்கிய நகர்வுகள்,தேசிய அபிவிருத்தியில் இவர்களின் வகிபாகம்  என்பவற்றை மதிப்பீடு செய்ய வேண்டிய ஒரு தேவை மேலெழுந்திருக்கின்றது.இதனை மையப்படுத்தி அண்மையில் கொழும்பில் புத்திஜீவிகள் கலந்து கொண்ட விசேட ஒன்றுகூடல் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலட்சக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டனர்.இவ்வாறாக குடியமர்த்தப்பட்ட இடங்களுள் நேவிஸ்,அன்ரீல்ஸ், தாஹித்த,நியூ கலிடோனியா, கிரனிடா, பிஜி, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா, அந்தமான், சுமாத்திரா, வியட்நாம் போன்ற பலவும் உள்ளடக்குகின்றன.

இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கும்,அத்துமீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில் உரிமைகள் பலவும் மழுங்கடிக்கப்பட்ட ஒரு நிலைமையே மேலெழுந்து காணப்பட்டது.

அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்ஸிய ஆட்சியாளர்களாலும் , பின்னர் சுதேச ஆட்சியாளர்களாலும், அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்களல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள்,பிற அலுவலர்கள் ஆகிய பலராலும் இம்மக்கள் கொடுமையான சுரண்டல்களுக்கு உள்ளானதாக கலாநிதி க.அருணாசலம் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை மேற்கூறப்பட்ட நாடுகள், தீவுகள் பலவற்றில் வாழும் தமிழ் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் இன்று தமிழ் பேசவோ,எழுதவோ, வாசிக்கவோ தெரியாத நிலையில் காணப்படுகின்றனர் என்பதோடு,அதிகளவில் சுதேச இனத்தவர்களுடன் கலந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தவகையில் இலங்கையின் மலையக பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகியிருந்தது என்பது தெரிந்தததேயாகும்.இம்மக்கள் இங்கு குடியேறிய காலம்முதல் தொடர்ச்சியாகவே அழுத்தங்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வந்துள்ளனர்.

கூலிகள்,தோட்டக்காட்டான்,, கள்ளத்தோணிகள், இந்தியக்காரர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு இம்மக்கள் அவமதிக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்ட மை வரலாற்றில் கறைபடிந்த பக்கங்களாகும்.இத்துன்பத் தொடர்கதை இன்னும் முடிவுக்கு வந்ததாக இல்லை.இலங்கையின் பெருந்தோட்டத்த் துறையின் வரலாறானது இந்திய வம்சாவளி தொழிலாளரின் பொருளாதார,சமூக நீதிகளையும் , அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் மறுப்பதாகவே அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகமுள்ளன.

சுதந்திரத்துக்கு முன்னதாக வாக்குரிமை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று இனவாதிகள் குறியாக இருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்றியமையாதவர்கள்.ஆனால் அரசியல் செயற்பாட்டுக்கு அல்ல என்று இனவாதிகளின் கருத்து வெளிப்பாடுகள் அமைந்திருந்த நிலையில் அடிமைகளுக்கு சமமாகவே அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரஜாவுரிமைச் சட்டம் 1948 ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.இதன்போது இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இச்சட்டங்களின் வகுப்புவாத நோக்கத்தினை வெளிப்படுத்தினர். “எவ்வேலையுமற்ற சிங்களவர் ஒருவர் பிரஜாவுரிமை பெறுவதற்கு தகுதியுடையவரானால் வருமானம் எதுவுமற்ற ஒரு இந்தியருக்கு ஏன் இந்த உரிமை விலக்கப்பட வேண்டும்? இத்தகைய அளவுகோல் மிகவும் மோசமான வகுப்பு வாதச்சார்பு உடையது அல்லவா! “என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம்.பெரேரா வாதிட்டார்.

 அடையாளம் கேள்விக்குறி

வாக்குரிமை பிரசாவுரிமை பறிப்பு, காலத்துக்குக் காலம் இம்மக்கள் மீது.ஏவிவிடப்பட்ட வன்செயல்கள் இதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள், திட்டமிட்ட காணிச் சுவீகரிப்புகள் எனப்பலவும் இந்திய வம்சாவளியினரின் இருப்பை சீர்குலைத்து சின்னாப்பின்னமாக்கி இருந்தன.

அரசியல் உரிமையின்றி நாதியற்ற சமூகமாக இவர்கள் நீண்ட காலம் முடங்கிக்கிடக்க வேண்டிய அவலநிலைக்கும் ஆளாகியிருந்தனர்.அரசியல் உரிமை கிடைத்ததைத் தொடர்ந்து சில பலமான, திருப்தி தரக்கூடிய சாதக விளைவுகளையும் இம்மக்கள் பெற்றுக் கொண்டமை மகிழ்ச்சிக்குரியதேயாகும்.

அரசதுறை தொழில் வாய்ப்புகள், வீடமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம்,சமூக நிலைமைகள் போன்ற பலவற்றிலும் இம்மக்களின எழுச்சி ஓரளவு காத்திரமாக அமைந்தது.தேசிய வருமானத்தில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தினர்.

தேயிலைத் தொழிற்றுறை, ஆடைத் தொழிற்றுறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.இவற்றின் ஊடாக அதிகரித்த வருவாயை இலங்கை பெற்றுக் கொண்டது.இது இம்மக்களால் ஏற்பட்ட சாதக விளைவுகளுக்கு அடித்தளமான நிகழ்வுகளாகும்.

இதேவேளை இந்திய வம்சாவளி சமூகத்தினர் இந்நாட்டில் எதிர்கொண்ட சவால்களின் வரிசையில் பொருளாதார சவால் முக்கியமானதாக கருதப்படுகின்றது.வருவாயீட்டலின் கீழ்நிலைத் தன்மையானது இம்மக்கள் ஏனைய இனங்களோடு போட்டியிட்டு முன்னேறுவதற்கு ஒரு தடைக்கல்லாக இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.இனவாதம், பாமரத்தன்மை போன்ற பலவும் ஏனைய சவால்களுள் உள்ளடக்குகின்றன.

இந்திய வம்சாவளி மக்களின் பலம், பலவீனம் என்று நாம் நோக்குகின்றபோது பல்வேறு விடயங்களையும் இனங்கண்டு சுட்டிக்காட்ட முடியும்.இவைகளை இம்மக்களின இருநூறு வருடகால வரலாற்றினைக் மீட்டிப்பார்க்கும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வது மிகவும் பொருத்தமானதாகும் என்றே கருதுகின்றேன்.இது இம்மக்களின அடுத்தகட்ட நகர்விற்கு உந்துசக்தியாக அமையும் என்பதோடு இந்தப் பதிவுகள் மேலும் பல நன்மைகள் ஏற்படவும் வழிசமைக்கும்.

இந்த வகையில் மேற்படி விடயம் தொடர்பில் திறந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஷ் பல விடயங்களையும் தெளிவுபடுத்தியிருந்தார். தென்னாப்பிரிக்காவில்1860 இல்குடியேறிய இந்தியர்களைப்பற்றி 2010 இல் ஒரு ஆராய்ச்சி மகாநாடு இடம்பெற்றது.இதுபோல அமெரிக்காவில் குடியேறிய கறுப்பினத்தவர்கள் பற்றிய ஆவணங்கள் பலவும் தயாரிக்கப்பட்டன.அவர்கள் வெள்ளையர்களால் அடிமைபடுத்தப்பட்டுள்ளார்களா? அமெரிக்காவில் அவர்களின் நிலை எத்தகையது?அவர்களுக்கான   வாய்ப்புகள் எவ்வாறுள்ளன? என்பதுபோன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இத்தகைய ஆய்வுகளில் “வேர்கள்” என்ற பெயரிலான நாவல் பிரபல்யம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது. அமெரிக்காவிலுள்ள கறுப்பினத்தவர்கள் தங்களுடைய சிரமங்களை எண்ணி கொதித்தெழுந்து “அமெரிக்காவை உருவாக்கியதில் தமக்கும் பங்குண்டு” என்பதை ஆணித்தரமாக நம்புவதற்கும் அது தொடர்பாக தங்களுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் ஆய்வுகளும் வெளியீடுகளும் மிகவும் தோள் கொடுத்தன.ஜப்பானியர்கள், பிரேஸிலில் குடியேறிய நிலையில் அவர்களைப் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த வகையில் இந்திய தொழிலாளர்கள் பஞ்சம், கொடுமை காரணமாக இங்கு  வருகை தந்திருந்தாலும் இந்த நாட்டுக்கு இந்திய தமிழர்கள் ஒரு நாளும் யாசிக்க அல்லது பிச்சையெடுக்க வரவில்லை.கைகளையும், கால்களையும் நம்பி உழைப்பதற்காகவே வந்தனர்.எனினும் அவர்களின் உழைப்பிற்கு எந்தளவுக்கு அங்கீகாரம் கிடைத்தது?ஏனைய இனத்தவர்களைப் போன்று இவர்கள் மதித்து நடத்தப்பட்டனரா? இவர்களின் இருப்பிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக காணப்பட்டதா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகும்.இந்நிலையில் இம்மக்களின வாழ்வியல் போக்குகள் தொடர்பில் எதிர்வரும் சந்ததிகள் உணர்ந்து கொள்ளவும், இவர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும்  ஆய்வுகள் அவசியமாகின்றன என்கிறார் பேராசிரியர் சந்திரபோஷ்.

“ஆய்வின் மூலம் அபிவிருத்தி’ என்ற விடயம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.ஒரு சமூகத்தின் கடந்தகால மற்றும் சமகால நிலைமைகள் எதிர்கால திட்டமிடலுக்கு வலுசேர்ப்பதாக அமையும்.வரலாற்றை திரும்பிப் பார்த்து முன்னோக்கி செல்லவேண்டும்.

இந்நிலையில் மலையக சமூகத்தின் எழுச்சிக்கான பாதைகளை வகுப்பதற்கும் ஆய்வுகள் மிகவும் அவசியமாகின்றன.இந்த வகையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,கலாநிதிகள்,சட்டத்தரணிகள், ,அச்சமூகத்தை சார்ந்த ஏனைய அரசதுறை தொழில் புரிபவர்கள், வர்த்தகர்கள் போன்ற பலரின் பங்களிப்புடன் கடந்த 27 ம் திகதி கொழும்பில் ஒரு விசேட ஒன்றுகூடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.இலங்கையின் பிரபல தொழிலதிபர் மணிமுத்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

வீரகேசரியின் முகாமைத்துவ இயக்குநர் குமார் நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆவது ஆண்டைக் ஏன் கொண்டாட வேண்டும்??என்று பேராசிரியர் சந்திரபோஷ் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த ஒன்று கூடலில் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இரா.இரமேஷ், ஆசிரியர்கள் என்ற வகையில் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளக்கூடிய இரண்டு வேலைத்திட்டங்களை முன்மொழிந்தார்.மலையக மக்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து ஆங்கிலத்தில் ஒரு நூலை வெளியிட வேண்டும்.

அத்தோடு மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் முப்பது இளைஞர்களுக்கு சமூக ஆராய்ச்சி நுணுக்கங்களைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கினை நடாத்தி அதன் அடிப்படையில் அவர்கள் ஆய்வுசெய்யும் விடயங்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடுவது போன்றன அவ்விரண்டு வேலைத்திட்டங்களுமாகும்.இதுபோன்ற பல விடயங்களும் முன்மொழியப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டினை 200 வருட பூர்த்தி ஆண்டாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.