முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ற் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் திருந்தந்தை 16ம் பெனடிக்ற் (Pope Benedict XVI) வத்திக்கானில் உள்ள  தனது வதிவிடத்தில் இன்று காலை 9.34க்குக் காலமானார்.

19 ஏப்பிரல் 2005 இலிருந்து 28 பெப்பிரவரி 2013 வரை எட்டு ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையின் திருந்தந்தையாக இவர் பணிபுரிந்தார். 2005ம் ஆண்டு பெப்பிரவரி 28ம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்து அனைவரையும் அவர் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இவ்வாறு ஒரு திருத்தந்தை இராஜினாமாச் செய்தது 600 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற மிக அரிதான நிகழ்வு என்று செய்தி ஊடகங்கள் அவ்வேளையில் பதிவுசெய்திருந்தன.

திருத்தந்தை 16ம் பெனடிக்ற் அவர்கள் ஜேர்மனி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1951ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் திகதி குருவாகத்திருநிலைத்தப்பட்ட திருத்தந்தை 1977 ஜூன் 27ம் திகதி திருத்தந்தை 6வது சின்னப்பரால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் வத்திக்கானில் உள்ள ’திருச்சபையின் அன்னை’  (Mater Ecclesiae) துறவற இல்லத்தில் தனது ஓய்வுக்காலத்தைச் செலவிட்டு வந்தார்.

அவரது உடல் நிலை மோசமடைந்திருந்திருப்பதாக வத்திக்கானிலிருந்து கடந்த சில நாட்களாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த திருந்தந்தையின் புனித உடல் எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 2ம் திகதி வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.