விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் வனவளத்துறை

விவசாய நிலங்களை கையகப்படுத்தும்

வவுனியா:செட்டிகுளம் – மெனிக்பாம் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கான உழுந்து பயிர்செய்கை செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை  சேதப்படுத்தி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் வனவளத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

செட்டிகுளம் மெனிக்பாம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பயிரிடப்பட்ட உழுந்து பயிர்களைச் சேதப்படுத்தி எல்லைக் கற்களை நாட்டி காணிகளை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

போரின் பாதிப்புக்களை சுமந்த பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மெனிக்கபாம் கிராமத்தில் 850 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரமாக உழுந்து செய்கையை பல வருடங்களாக செய்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது மேட்டு நிலக் காணி வாழ்வதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என பிரதேச செயலகத்தால் வாய் மொழி மூலம் வழங்கப்பட்ட உத்தரவாத்திற்கு அமைவாக அம் மக்கள் தமது வீடுகளுக்கு பின்னால் இருந்த சிறிய பற்றை காடுகளை துப்பரவு செய்து கடந்த பல வருடங்களாக மேட்டு நிலப் பயிற் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.IMG 0923 விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் வனவளத்துறை

இம்முறையும் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் உழுந்து பயிரிட்டுள்ளனர். குறித்த உழுந்து பயிரிடப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் பூத்துக் காணப்பட்ட உழுந்து செடிகளுக்குள் தமது உழவு இயந்திரத்தை ஓடிச் சென்று  உழுந்து பயிர்களை சேதப்படுத்தி எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர்.

இதனால் பலரது உழுந்து செய்கை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், தற்போதைய பொருளாதார நிலைக்கு ஈடு கொடுக்க முடியாது கடன் பட்டும், வட்டிக்கு பணம் பெற்றும், அடைவு வைத்தும் உழுந்து பயிற்செய்கையில் ஈடுபட்ட பலர் தமது கண் முன்னே உழுந்து பயிர்கள் சேதமாக்கப்பட்டதை பார்த்து கண்ணீர் விட்டு அழுததுடன், வனவள திணைக்கள அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாடு தொடர்பாக கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தமது உழுந்து பயிற்செய்கை நிலங்களை தமது வாழ்வாதாரத்திற்கான மேட்டு நிலப் பயிற்செய்கைக்கு பெற்றுத் தர உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் வனவளத்துறை