Tamil News
Home செய்திகள் மலேசியாவின் மொத்த விற்பனை சந்தையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த வெளிநாட்டினர் கைது 

மலேசியாவின் மொத்த விற்பனை சந்தையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த வெளிநாட்டினர் கைது 

மலேசியாவின் கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பணியாற்றி வந்த 8 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த குடியேறிகளை கடத்தி வந்ததாக அறியப்பட்ட மலேசிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் துணை காவல்துறை தலைவர் யாஹயா ஓத்மன் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் எனக் கூறியுள்ள அவர்,“இவர்கள் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்,” எனக் கூறியுள்ளார்.

இந்த கைது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் துணை அமைச்சர் ஜலாலுதீன் அலியாஸ், அமலாக்க முகமைகளுடன் இணைந்து வணிக பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்திருக்கிறார்.

“இந்த நடவடிக்கையில், மொத்த விற்பனை சந்தையில் உள்ள மூன்று கடைகள் வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்களால் நடத்தப்பட்டு வந்ததற்காக சீல் வைக்கப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

அத்துடன், வணிகர்கள் எவரும் சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டினரை வேலைக்கோ அல்லது அவர்களுக்கு கடைகளை வாடகைக்கோ விட வேண்டாம் என  மலேசிய அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

Exit mobile version