Tamil News
Home செய்திகள் இலங்கை-வெளிவிவகார செயலாளர் பதவி விலகல்- இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கை-வெளிவிவகார செயலாளர் பதவி விலகல்- இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

எனினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள 08 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

போக்குவரத்து , பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், நீர்வழங்கள் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர பதவி​யேற்றுள்ளார். கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரணவும், புத்தசாசன,மத விவகாரங்கள் மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கான அமைச்சராக விதுர விக்ரமநாயக்கவும் பதவிப் பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றாடல் அமைச்சராக நஷீர் அஹமட் பதவியேற்றுள்ளதுடன், நீர்பாசன , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளார். இதையடுத்து முழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version