பாதிப்புற்று வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்!

இலக்கு மின்னிதழ் 145 இற்கான ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்: 30.08. 2021 அன்று வலிந்து காணாமலாக்கப் பட்டமையால், பாதிப்புற்றவர்களின் ஐக்கிய நாடுகள் சபையின் பத்தாவது அனைத் துலகத் தினம்.

வலிந்து காணாமல் ஆக்கப்படல் என்பது, சமுதாயத்தில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான தந்திரோபாயம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் கருத்து.

இந்தச் செயற்பாட்டால் உணரப்படும் ‘பாதுகாப்பின்மை’ என்கிற உணர்வு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்பத்தினர்க்கு மட்டுமல்ல, அவர்கள் வாழும் சமூகத்திற்கும், அவர்களுடைய சமுதாயத்திற்கும் ‘பாதுகாப்பின்மையை’ ஏற்படுத்துகிறது.

அரசியல் எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குதல் என்பதே வலிந்து காணாமல் போகச் செய்வதைப் போக்காகக் கொண்ட அரசாங்கங்களின் தலைமை நோக்காக உள்ளது.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் விளைவுகள் என்பன பாதிப்புற்றவர்களின் குடும்பப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், அவர்கள் வாழும் சமுதாயத்தின் பிரச்சினையாக மட்டுமல்ல, உலகின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் பங்கம் விளைவிக்கும் அனைத்துலகப் பிரச்சினையாகவும் உள்ளது.

இதனால் ‘வலிந்து காணாமலாக்குதல்’ என்னும் செயற்பாடு  நடந்து முடிந்த குற்றச்செயல் அல்ல. நாளாந்தம் மக்களை இனங்காணக் கூடிய அச்சத்துள் வைத்து, அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் அரச தந்திரோபாயம்.

ஆகவே, இதனைச் செய்யும் எந்த அரசாங்கத்தையும் அனைத்துலக நாடுகளும், அமைப்புக்களும் ‘பொறுப்புக்கூறல்’ வழி நீதியை நிலைநிறுத்திப் பாதிப்புற்றவர் களுடைய புனர்வாழ்வையும், புனரமைப்பையும் உறுதி செய்யுமாறு வற்புறுத்தும் நாளாகவே 2011 முதல் இன்று வரை பத்து ஆண்டுகள் இந்த அனைத்துலக நாள் திகழ்ந்து வருகிறது.

அதிலும் சிறப்பாக 2017ஆம் ஆண்டின் இந்நாளில் “காணாமலாக்கப்பட்டோருக்காக எழுந்து நில்லுங்கள்” என ஐக்கிய நாடுகள் சபை உலக மக்களை பகிரங்கமாக அழைத்தது.

வலிந்து காணாமலாக்கப்படுதல் என்னும் இந்த மனித உரிமைகள் வன்முறைப் படுத்தல் “எந்த நேரத்திலும் வரலாம் – பெரும்பாலும் அடையாளத் தகடு இல்லாத வாகனத்தில் வரலாம் – சாதாரண உடை அணிந்தவர்களால் ஏற்படுத்தப்படலாம்.” என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் விபரித்துள்ளனர்.

இதனைப் படிக்கும் எந்த ஈழத்தமிழருக்கும், ஈழத்தில் சிறீலங்கா அரசாங்கம், இந்த ‘வலிந்து காணாமலாக்குதல்’ என்னும் அரச தந்திரோபாயத்தை, ஈழத்தமிழின அழிப்புச் செயற்பாட்டின் ஒரு அங்கமாக, 1970களில் அரசியல் விழிப்புணர்வுள்ள ஈழத்தமிழ் இளையவர்களை தனது பொலிசாரையே இராணுவத்திற்கான செயற்பாடுகளைச் செய்யப் பணித்து, கைதாக்கி,  ‘வலிந்து காணாமலாக்கலை”த் தொடங்கியது முதல்  இன்று வரை, அரை நூற்றாண்டு காலம் தொடர்ச்சியாகச் செயற்படுத்தி வருவது நினைவுக்கு வரும்.

இந்த மனிதாயத்திற்கு எதிரான குற்றச் செயலில் இருந்து ஈழத்தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காகத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் 1978 முதல் அரசு நோக்கிய அரசாக தம்மை வெளிப்படுத்தினர்.  பாதுகாப்பான அமைதியில் வளர்ச்சிகளுடன் வாழ்வதற்கான தங்களின் இந்த முப்பத்தொரு ஆண்டுகால அரசு நோக்கிய அரசு மூலம், இரு அரசுகளை ஒரு தீவில் இயல்பாகவே கொண்டதாக இலங்கை பிரித்தானியக் காலனித்துவக் காலம் வரை இருந்து வந்த வரலாற்றையும் மீள் உறுதிப்படுத்தினர்.

இந்த ஈழத் தமிழர்களின் அரசு நோக்கிய அரசையே சிறீலங்கா 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தனது படைபலத்தால் ஆக்கிரமித்து, இன்று வரை 12 ஆண்டுகள் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதியையோ பாதிப்புற்றவர்களின் குடும்பத்தினர்க்கான பாதுகாப்பான அமைதி வாழ்வையோ, வளர்ச்சியையோ அனுமதிக்க மறுத்து வருகிறது.

மாறாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் மனிதாயத்திற்கு எதிரான மனித உரிமைகள் வன்முறை, யுத்தக் குற்றச் செயல்களைச் செய்தவர்கள் என விசாரிக்கப்பட வேண்டுமெனப் பட்டியலிட்ட சிறீலங்காப் படையினரை மக்களை ஆளும் நிர்வாக அதிகாரிகளாக நியமித்து, யுத்தம் முடிந்த பின்னரே பெரும்பாலும் காணாமாலாக்கப்பட்டோரை யுத்தகால விளைவுகள் என விசாரணைகளை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் சிறீலங்கா இன்றைய அரச அதிபர் கோத்தபாய ராஜபக்ச அனைத்துலகச் சட்டங்களை மீறும் குற்றவாளியாகத் தன்னைப் பகிரங்கப்படுத்தி வருகிறார்.

ஆயினும் இந்த மனிதாயத்திற்கு எதிரான குற்றச் செயலைத் தொடரும் சிறீலங்காவை ஐக்கிய நாடுகள் சபையோ, உலக நாடுகளோ இதுவரை வற்புறுத்தல் இல்லாத மென்மையான போக்கின் வழியாகவே பொறுப்புக் கூறுமாறு வேண்டி வருகின்றன.

இதனால் ஊக்கமடைந்து வரும் சிறீலங்கா, தங்களுடைய கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது எனப் பாதிக்கப்பட்டவர்கள் 2009 முதல் இன்று வரை பன்னிரு ஆண்டுகள்  நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு, எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையுமே இதுவரை செயலில் செய்யாது, உரிமைக்காகப் போராடி வரும் இவர்களில் பலரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி நிற்கிறது.

இந்தச் சூழலில்தான் 2021ஆம் ஆண்டுக்கான அனைத்துலக வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நாள் 30.08. 2021 இல் இடம்பெறுகிறது. இந்நாளில் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழக உடன்பிறப்புகளும் ஈழத்தமிழர்களில் வலிந்து காணாமலாக்கப் பட்டமையால், பாதிப்புற்று கடந்த 12 ஆண்டுகாலமாக வலிசுமந்து வாழ்ந்து வருபவர்களுக்காக எழுந்து நில்லுங்கள்; துணிந்து நில்லுங்கள்; தொடர்ந்து குரல் கொடுங்கள் என இலக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021