ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு, தூதரகம் எச்சரிக்கை

Afghan airstrikes 1 ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு, தூதரகம் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபன்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் காபூலில் உள்ள இந்தியத் துாதரகம் இந்தியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் ஆப்கானிஸ் தானிலிருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறியது. இந்நிலையில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கையில்,

“ஆப்கானிஸ்தானுக்கு வருகை தரும், அங்கு வசிக்கும், வேலை நிமித்தமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் தங்களின் பணியிடத்திலும் சரி, வசிப்பிடத்திலும் சரி மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் இந்த அறிக்கை விடுக்கப் படுகிறது.

இந்தியர்கள் அனாவசியமாக வெளியே வருவதைத் தவிர்க்கும்படி வேண்டுகிறோம். சாலையில் பயணம் செய்யும் போது தீவிரவாதிகளின்   தாக்குதல் வாகனங்கள், பாதுகாப்பு வாகனங்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் வாகனத்திலிருந்து மிகுந்த இடை வெளியில் பயணிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

கூட்டம் நிறைந்த சந்தைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், பொது இடங்களை இன்னும் சில காலத்துக்கு தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் அவரவர் ஊழியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

அதே போல், ஆப்கன் மோதல்கள் குறித்து செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகவியலாளர்கள் அனைவருமே தூதரகத்தில் பாதுகாப்புப் பிரிவைத் தொடர்பு தங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் எந்தெந்தப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் செல்கிறார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தப் படுகிறார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021