‘இலங்கையில் அடுத்த சில மாதங்களில் உணவுத் தட்டுப்பாடு’ – ஐ.நா எச்சரிக்கை

அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை குடும்பங்களின் போதுமான உணவை வாங்கும் திறனை பாதிக்கின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உள்நாட்டு விவசாய உற்பத்தி மற்றும் சர்வதேச விலை உயர்வு ஆகியவற்றுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைப் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக அடுத்த மாதங்களில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உண்டாக்கி, வீட்டு வருமானத்தை பாதித்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை சிக்கலாக்கி வருவதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tamil News