Home செய்திகள் வவுனியா உக்குளாங்குளம் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் பிரதேச சபை அசமந்தம்: மக்கள்...

வவுனியா உக்குளாங்குளம் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் பிரதேச சபை அசமந்தம்: மக்கள் குற்றச்சாட்டு

உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக உக்குளாங்குளம் பகுதியில் சில வீடுகளுக்குள்ளும், வீட்டு வளவுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தமையால் அங்கு வசித்து வந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர். குறித்த பகுதியில் வீதி திருந்த வேலையின் போது சரியான வடிகால் கட்டமைப்பை கவனியாது வீதி புனரமைக்கப்பட்டமை காரணமாகவே தமது வீடுகளுக்குள் வெள்ளம் வந்துள்ளதாகவும் அப் பகுதி பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவருக்கு தெரியப்படுத்தி, உடனடியாக குறித்த வெள்ள நீரை வழிந்தோடும் வகையில் வெட்டி அகற்றி விடுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரியிருந்தனர். உடனடியாக ஒருவரை அனுப்பி அதனை செய்வதாக பிரதேச சபை தவிசாளர் உறுதியளித்த போதும் நான்கு நாட்கள் கடந்த போதும், இதுவரை குறித்த வெள்ள நீர் வெளியேற்றப்படாமையால் அம் மக்களின் வீட்டு வளவுக்குள் தொடர்ந்தும் வெள்ள நீர் காணப்படுகின்றது. இது குறித்து பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் எஸ்.யோகராசா அவர்களை தொடர்பு பெகாண்ட போதும், அவரது தொலைபேசியில் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் இ.விக்டர்ராஜ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து உக்குளாங்குளம், கூமாங்குளம் பகுதியில் இருந்து எமக்கும் முறைப்பாடு கிடைத்தது. நான் உடனடியாக சில பகுதிகளுப்கு சென்று வெள்ள நிலமையை பார்வையிட்டதுடன், தவிசாளரிடம் ஜேசிபி இயந்திரத்தை வழங்குமாறு அல்லது அதனை அனுப்பி நீரை வெளியேற்றுமாறும் கோரியிருந்தேன்.

சில மணித்தியாலத்திற்குள் செய்வதாக தவிசாளர் தெரிவித்த போதும், இதுவரை குறித்த பகுதிக்கு சென்று அவர் பார்வையிடக் கூட இல்லை. நான் சில பகுதிகளில் மக்களின் மண்வெட்டிகளைப் பெற்று நீரை வெளியேற்றி இருந்தேன். அவர்களது அவசர நிலையில் உதவாது விட்டமை தவறு எனவும், இது தொடர்பில் சபை அமர்வின் போது சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version