Home செய்திகள் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவைகளை விரைவில் ஆரம்பம்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவைகளை விரைவில் ஆரம்பம்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவை

காப்புறுதிப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்ட  சிறீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக மாற்றுக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிறீலங்கன் எயார்லைன்ஸின் கொழும்பு -மொஸ்கோ நேரடி விமான சேவைகள் நேற்று (28) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு பறக்கும் சிறீலங்கன் விமானக் காப்புறுதியை இரத்து செய்ய சிறீலங்கன் விமான சேவையின் விமானங்களுக்கு காப்புறுதி செய்துள்ள பிரித்தானிய விமான நிறுவனம் எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம்.

இது இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவல்ல எனவும், சிறீலங்கன் விமான சேவை தனது கட்டுப்பாட்டை மீறிய சம்பவத்தினால் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிறீலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருடம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது. அதன்படி வாரத்துக்கு இரண்டு விமானங்கள் கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையில் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version