கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ: ரஷியா அமைதிப்படையை அனுப்புகிறது

கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ

கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ: கஜகஸ்தானில் மக்கள் புரட்சி, வன்முறையாக மாறியது. அதிபர் மாளிகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த ரஷியாவில் இருந்து அமைதிப்படை  செல்லவதாக கூறப்படுகின்றது.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று, கஜகஸ்தான். இது சோவியத் ரஷியாவில் இருந்து உடைந்து வந்த நாடு. எண்ணெய் வளமிக்க அந்த நாட்டில் எல்.பி.ஜி. என்று சொல்லப்படுகிற திரவ பெட்ரோலிய வாயுவில்தான் பெரும்பாலான வாகனங்கள் இயங்குகின்றன. இந்த நிலையில், புத்தாண்டையொட்டி எல்.பி.ஜி. விலையை அந்த நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தியது.

இது அநியாயம், ஏற்க முடியாது எனக்கூறி விலை உயர்வுக்கு எதிராக அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் புரட்சி வெடித்தது.

இதையடுத்து அந்த நாட்டின் முக்கிய நகரமான அலமாட்டியில் மக்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பதவி விலகியது.  கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் அலமாட்டியில் அதிபர் மாளிகைக்கும், மேயர் அலுவலகத்துக்கும் போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தீ வைத்துள்ளனர்.

இப்படி நாடு முழுவதும் வன்முறை பற்றி எரிகிறது. வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாத கும்பல்கள் பிரச்சினையின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் காசிம் ஜோமார்ட் டோகோயேவ் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலைமையில் மாற்றம் இல்லை எனக் கூறப்படுகின்றது. இதனால் ரஷியாவில் இருந்து கஜகஸ்தானுக்கு அமைதிப்படை  செல்லவதாக கூறப்படுகின்றது.

Tamil News