உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்து முதலிடம்- 112-வது இடத்தில் இலங்கை

‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி அதனை அறிக்கையாக வெளியிடுவதை ஐ.நா. வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் தற்போது வெளியான அதன் அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையும், அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பிய நாடான பின்லாந்து தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க் 2-வது இடத்தையும், ஐஸ்லாந்து 3-வது இடத்தையும், இஸ்ரேல் 4-வது இடத்தையும், நெதர்லாந்து 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்வீடன், நோர்வே, ஸ்விட்சர்லாந்து, லக்செம்பர்க், நியூசிலாந்து முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.

கனடா 13-வது இடத்தையும், அமெரிக்கா 15-வது இடத்தையும், ஜெர்மனி 16-வது இடத்தையும், இங்கிலாந்து 19-வது இடத்தையும், பிரான்ஸ் 21-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் 25-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 26-வது இடத்தையும், சவூதி அரேபியா 30-வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஜப்பான் 47-வது இடத்தையும், பிரேசில் 49-வது இடத்தையும், சீனா 64-வது இடத்தையும், நேபாளம் 78-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும், இலங்கை 112-வது இடத்தையும், மியான்மர் 117-வது இடத்தையும், வங்கதேசம் 118-வது இடத்தையும், இந்தியா 126-வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இடமான 137-வது இடத்தை ஆப்கனிஸ்தான் பிடித்துள்ளது.