உலகக்கோப்பை உதைபந்தாட்டம் – இறுதிச் சுற்றில் பிரான்ஸ் – ஆர்ஜன்ரீனா

மத்திய கிழக்கு நாடான கட்டாரில் இடம்பெற்றுவரும் உலகக்கோப்பை உதைபந்தாட்ட போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.

ஆபிரிக்கா நாடுகளில் முதலாவதாக அரை இறுதிப் போட்டிவரை முன்னேறிய மொறோக்கோவை இந்த வாரம் பிரான்ஸ் இரண்டுக்கு பூச்சியம் என்ற புள்ளியில் தோற்கடித்ததை தொடர்ந்து பிரான்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 1998 ஆம் ஆண்டும், 2018 ஆம் ஆண்டும் இரண்டு தடவைகள் பிரான்ஸ் உலகக் கோப்பைக்கான போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.

அதேசயம், ஆர்ஜன்ரீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பைக்கான போட்டியில் இரண்டு தடவைகள் வெற்றியீட்டியிருந்தது. அரை இறுதிப்போட்டியில் குரேசியாவுக்கு எதிராக விளையாடிய ஆர்ஜன்ரீனா 3 இற்கு பூச்சியம் என்ற புள்ளியில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியிருந்தது.

இரு தரப்பும் தரமான வீரர்களை கொண்டிருப்பதனால் இறுதிச்சுற்று மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.