Home செய்திகள் மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்: மட்டக்களப்பில் நகருக்குள் பேரணியாக நுழைந்த விவசாயிகளினால் மாநகரத்தில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் முற்றுகையிடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி விவசாயிகள்  பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட உழவு இயந்திரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட உந்துருளிகளிலும்  துவிச்சக்கர வண்டிகளிலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பசளையினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணிகள் மட்டக்களப்பு நருக்குள் நுழைய முற்பட்ட நிலையில்  காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டு உழவு இயந்திரங்கள் செல்வதற்கான அனுமதிகள்   மறுக்கப்பட்டது.

இதன்போது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

இதையடுத்து மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மகஜரையும் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

முற்றுமுழுதாக சேதனப்பசளை திட்டம் என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் 50வீதம் சேதனப்பசளையினை வழங்கினால் 50வீதம்  இரசாயனப் பசளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version