நாட்டிற்கு உணவளித்த விவசாயி உண்பதற்கு ஒரு பிடி சோறுமில்லை | அம்பகஹாவத்த

உணவளித்த விவசாயி

கேள்வி :-
ராஜபக்சக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் :-
நாடு இப்போது அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களின் துன்பக்கதை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் இயல்பாக வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத அளவிற்கு நெருக்கடிகள் நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் கடன் சுமைக்கு மத்தியில் எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் எதிர்காலம் இல்லாமல் போகுமோ! என்ற அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. ஊழல்களும் நெருக்கடிகளும் நெருக்குகின்றபோது எங்களால் மௌனமாக இருக்க முடியாது.

நாம் கடந்தகால வரலாறுகளை எடுத்து நோக்குகின்றபோது இது காலவரை தொழிற்சங்கங்கள் தமது தரப்பினரின் குறிக்கோள்களை அல்லது இலக்குகளை அடைவதற்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும் இப்போது இடம்பெறுகின்ற ஆசிரியர் போராட்டமாயினும் சரி அல்லது வேறு எந்த துறையினரின் தொழிற்சங்கப் போராட்டமாயினும் சரி தமது தரப்பினரின் சொந்த நலன்களை மையப்படுத்தி யாரும் போராட்டங்களில் ஈடுபடவில்லை. நாடு இப்போது சகலதுறை இடர்பாடுகளுக்கும் முகம் கொடுத்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான பொதுவான குறிக்கோளைத் தழுவிய போராட்டமே இப்போது இடம்பெறுகின்றது. ராஜபக்ச ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு எமது நாடு முன்செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.  நாட்டை அபிவிருத்திச் பாதையில் இட்டுச் செல்வதாகவும், ஊழல் மோசடிகளை ஒழிக்கப் போவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷாக்கள் உருப்படியாக எதனையும் செய்ததாக இல்லை. நாடு சகல துறைகளிலும் வங்குரோத்து நிலையினை அடைந்துள்ள நிலையில் இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.இப்போது அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து போயுள்ளார்கள்.

இந்தியாவின் தூத்துக்குடியில் உள்ள பிச்சைக்காரர் இலங்கைக்கு உதவி வழங்க முன்வரும் அளவுக்கு இலங்கையின் நிலைமைகள் போய்க் கொண்டிருக்கின்றன. இதனை நினைக்கும்போது ‘இலங்கையர்’ என்று சொல்லிக் கொள்வதற்கு எமக்கு வெட்கமாக இருக்கின்றது. அதைப்போன்றே சீனாவில் உள்ள ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சிலரும் தாம் சேமித்து வைத்த ஐம்பது இலட்சம் ரூபா பணத்தினை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளமையும் தெரிந்ததேயாகும். இந்தளவுக்கு நாட்டை ஆட்சியாளர்கள் பின்நிலைக்கு இழுத்துப் போட்டிருக்கின்றார்கள். எல்லாj; துறைகளுமே முடக்க நிலைக்கு உள்ளாகி இருக்கின்றன. நாட்டில் 520 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.

இதனால் நோயாளிகள் மிகுந்த அச்சத்துடன் வாழவேண்டிய நிலைமை மேலெழுந்துள்ளது. தூரநோக்கில்லாது இரசாயன உரப் பாவனையை தடை செய்ததால் விவசாயம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் நாட்டுக்கு உணவளித்த விவசாயிகள் இன்று தனக்கென ஒருபிடி சோறில்லாது அல்லல்படுகின்றார்கள். தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் பெற்றோர் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு உணவளிக்க வழியின்றி தந்தையொருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமும் இங்கு நடந்தேறியுள்ளது. இதனைச் சொல்லும்போதே நெஞ்சு கனக்கிறது.

உணவளித்த விவசாயிபிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பணமில்லாதுள்ளது. நோயாளிக்கு செலவழிக்க பணமில்லை. இவற்றை யெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் இதற்கு காரணமான ராஜபக்சக்களை வீட்டுக்கனுப்புவதற்கு மக்கள் கொதித்தெழுந் திருக்கின்றார்கள். அவர்களது கொதிப்பில் நியாயத்தன்மை காணப்படுகின்றது. எனினும் ஆட்சியாளர்கள் இப்போராட்டத்தை கண்டு கொள்ளாமல்  ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ இருந்து வருகின்றனர். ஆனாலும் நாம் விடப்போவதில்லை. இலங்கையை நடுத்தெருவில் கொண்டு வந்து  நிறுத்திய  இவர்களை வீட்டுக்கனுப்பும் வரை நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்போம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்த விடயத்தில் ஒருமுகமாகவே செயற்படுகின்றோம். எம்மில் பேதமில்லை. இலங்கை அதிபர், ஆசிரியர்களின் சங்கம் இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.

கேள்வி :-
ராஜபக்சகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்கள் கூடுதலான வகிபாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அப்படியாயின் அதற்கான காரணம் என்ன?

பதில் :-
இந்த நாட்டில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும்  ‘இலங்கையர்’  என்ற பொது வரையறையின் கீழ் நோக்கப்பட வேண்டியவர்களாவர். இந்த வகையில் தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினை என்பது எல்லோருக்கும் பொதுவானது. எல்லா மக்களும் மேற்கண்ட பிரச்சினைகளினால் துன்பப்படுகின்றார்கள். சிங்கள மக்களைப் போல தமிழ் மக்களும் ஏனைய இனத்தவர்களும் பிரச்சினையின் உக்கிரத்தை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கு இனம், மதம், மொழி என்ற பாகுபாட்டிற்கு இடமில்லை. கஷ்டம் எல்லோருக்கும் இருக்கின்றது. எனவே எல்லோரும் ஒன்றிணைத்து போராட வேண்டும்.

வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ளன. இனவாத கண்ணோட்டத்தில் அம்மக்களை நோக்கி புறந்தள்ளாமல் இலங்கையர் என்ற பொது வரையரைக்குள் இருந்து அம்மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். மலையக பெருந்தோட்ட இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தனித்துவமானவையாக காணப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் கூட சரிவர கிடைக்காத நிலையில் அம்மக்கள் தொடர்ச்சியாக அவற்றுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பிடம், குடிநீர், மின்சார வசதி, மலசலகூடம், தொழில், கல்வி எனப் பலவும் இம்மக்களின் தேவைகளில் உள்ளடங்கும். எனவே தமிழ் மக்களுக்கு இவற்றை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு ஆட்சியாளர்கள் தேவையாகவுள்ளனர். இன்றைய ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு இவற்றையெல்லாம் மாற்றியமைக்க முடியுமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

உணவளித்த விவசாயிசமகால அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்ற போதும் அது போதுமானதாக இல்லை. இதேவேளை சில தோட்டங்கள் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காது பின்னடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  இந்நிலையில் உரிய வருமானமில்லாது தொழிலாளர்கள் படும் துன்பதுயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எனவே சிங்கள மக்களைக் காட்டிலும் பெருந்தோட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய முக்கிய தேவை காணப்படுகின்றது. இதுபோன்றே நான் முனகூறியவாறு வடக்கு மக்களும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள அதிகமாகவே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எதனைச் செய்வதற்கும் குடும்ப நலனை மையப்படுத்தாது  மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படும் அரசாங்கம் தேவைப்படுகின்றது.  தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினால் அது சாத்தியப்படாது என்ற நிலையில் இவர்களை வீட்டுக்கனுப்பி புதிய ஆட்சியை தோற்றுவிக்க வேண்டிய தேவைப்பாடு மேலெழுந்துள்ளது. குடிமக்கள் இதனை நன்குணர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வெற்றி இலக்கை அடைவதற்கு இன,மத பேதமின்றி சகலரும் ஐக்கியத்துடன் ஒன்றிணைய வேண்டும்.இது காலத்தின் கட்டாயத் தேவை என்பதோடு அவசரமும் அவசியமுமாகும்.

Tamil News