“காதலில் விழுங்கள்” -மாணவர்களுக்கு விடுமுறை அளித்த சீனாவின் ஒன்பது கல்லூரிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வசந்த காலத்தை வெளியே சென்று கொண்டாட வசதியாக தங்களது மாணவர்களுக்கு  விடுமுறை அளித்திருக்கிறது.

ஃபேன் மீ (Fan Mei) கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை விடுமுறையில் செல்லலாம் என அந்த குழுமம் மார்ச் 23ஆம் திகதியன்று அறிவித்தது.

சீனாவில் ஏப்ரல் 5ஆம் தேதி கிங்மிங் திருவிழாவாக அறியப்படுகிறது. அதையொட்டி சீனாவில் இந்நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ‘கல்லறை சுத்தம் செய்யும் தினம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.

இதையொட்டியே இந்த கல்லூரிகள் விடுமுறையை நீட்டித்து வசந்த கால விடுமுறை என்று அறிவித்து இருக்கிறது.

“மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வசந்த கால விடுமுறையை வழங்குகிறது,” என்று மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்வி கல்லூரியின் துணை முதல்வர் லியாங் குவோஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

“கல்லூரியை விட்டு வெளியே செல்லுங்கள், இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வசந்த காலத்தின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துங்கள்,” என மாணவர்களிடம் கல்லூரி தெரிவித்துள்ளது.

ஃபேன் மீ குழுமத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அனைத்தும் விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கான பயிற்சியை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு பல விமசர்சனங்களை தோற்றுவித்துள்ளது. காதலிக்க விடுமுறை அளித்த கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், இந்த அறிவிப்பின் மூலம் குறைந்து வரும் சீனாவின் மக்கள் தொகையும், குழந்தை பிறப்பு விகிதமும் அதிகரிக்கக்கூடும் என சீனாவின் ட்விட்டர் பதிப்பான வெய்போவில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி  – பிபிசி தமிழ்