Home செய்திகள் பல்வேறு வழிமுறைகளில் விரிவு பெற்றுள்ள காலிமுகத்திடல் போராட்டம்

பல்வேறு வழிமுறைகளில் விரிவு பெற்றுள்ள காலிமுகத்திடல் போராட்டம்

விரிவு பெற்றுள்ள காலிமுகத்திடல் போராட்டம்

விரிவு பெற்றுள்ள காலிமுகத்திடல் போராட்டம்

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி காலிமுகத் திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒன்பது நாட்களையும் கடந்து தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.

சிங்கள மக்களுக்கு மிகவும் முக்கிய தினங்களாகிய சித்திரைப் புத்தாண்டு அன்றும், மறுநாளும்கூட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகத் தமது குரல்களை எழுப்பி இருந்தார்கள்.

அதேபோன்று சித்திரைப் புத்தாண்டு தினத்தைப் புனித நாளாகக் கொண்டாகின்ற தமிழ் மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தன்னெழுச்சி பெற்ற இந்த, மக்கள் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் தமது பங்களிப்பை நல்கி வருகின்றார்கள்.

அரச தலைவர்களாகிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் பண்டிகை தினங்களில் கூடிய அளவில் எதிர்ப்பு கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தது. நாட்டைத் தின்ற ராஜபக்சக்கள் என்ற கோசம் ஜனாதிபதி செயலகத்தின் வாயிலில் விண் அதிரும் வகையில் எழுப்பப்பட்டது.

கலைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு வகைகளில் அரசுக்கு எதிரான பாடல்களைப் பாடுவதும் இந்தப் போராட்ட களத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். காலிமுகத் திடலில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தினால் சேருகின்ற குப்பைகள் நேர்த்தியாக பொலித்தீன் பைகளில் சேகரிக்கப்பட்டு சுகாதார நிலைமையும் பேணப்பட்டு வருகின்றது.

இதிலும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப் படங்களை அந்த பைகளில் ஒட்டியிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ராஜபக்சக்களின் அரசியல் அடையாளமாகிய சிவவப்பு சால்வையையும் அந்த குப்பைப் பைகளுக்குக் கட்டியிருந்த காட்சியும் அங்கு இடம்பெற்றிருக்கின்றது.

காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் ஊடாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நிபந்தனைகள் சிலவற்றை பிரதமருடைய அழைப்புக்கு எதிராக போராட்டக்காரர்கள் அறிக்கை வடிவில் வெளியிட்டிருந்தனர்.

தாங்களும் பிரதமருடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதைத் தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள காலிமுகத் திடலில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள ‘கோஹோம் கோத்தாகம’ என்ற கிராம வடிவிலான தளத்தில் பேச்சுவார்த்தைக்கென ஓரிடமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் மேசையொன்றும் நாற்காலியொன்றும் வைக்கப்பட்டு பிரதமருக்கான இடம் என்ற அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டிருக்கின்றது.

சித்திரைப் புத்தாண்டு பண்டிகையின்போது நீராடல், உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டுதல், புத்தாடை அணிதல், உணவருந்துதல், கைவிசேடம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் அவற்றுக்கென குறிக்கப்பட்ட நல்ல நேரத்திலேயே சிங்கள மக்கள் மேற்கொள்வார்கள்.

அதேபோன்று வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காகத் தமது வாகனங்களை வெளியில் எடுப்பதும், புத்தாண்டு பிறப்பையடுத்து முதன் முதலாக பணி இடங்களுக்குச் செல்வதும் குறிப்பிட்ட நல்ல நேரத்திலேயே இடம்பெறும். அத்தகைய இறுக்கமான கலாசார வழக்கங்களைக் கொண்டுள்ள போதிலும், இந்த சித்திரைப் புத்தாண்டு தினத்திலும் காலிமுகத் திடலுக்குப் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

சித்திரைப் புத்தாண்டு தினப் பண்டிகையை எத்தகைய கடினமான நிலைமைகளிலும் கொண்டாட வேண்டும் என்ற மரபு ரீதியான கலாசாரத்தைப் பின்பற்றும் வகையில் காலிமுகத்திடலில் பண்டிகைக் கொண்டாட்டங்களும் இடம் பெற்றிருந்தன. பண்டிகைக்கான உணவுகளைப் இல்லத்தரசிகள் பலரும் வீடுகளில் தயாரித்து காலிமுகப் போராட்டக் களத்திற்குக் கொண்டு வந்து அனைவருடனும் பகிர்ந்து உண்டு பண்டிகையைப் பலரும் கொண்டாடியும் அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர்.

Exit mobile version