Tamil News
Home செய்திகள் இந்திய உதவிப்பொருளில் காலாவதியான பால்மா?– உணவு ஆணையாளர் திணைக்களம் ஆராய்வு

இந்திய உதவிப்பொருளில் காலாவதியான பால்மா?– உணவு ஆணையாளர் திணைக்களம் ஆராய்வு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி பொருட்களில் காலாவதியான பால்மா பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஆராய்வதாக உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த பால்மா பொதிகள் 3 வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பதுளை உள்ளிட்ட சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளில் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி என்பன அழிந்துள்ளன. மேலும் சில பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளில், உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி என்பன குறிக்கப்படும் இடத்தில் “இந்த பொதி விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு பொதிக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த விடயம் தொடர்பில் உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி, தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டதன் பின்னரே மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் எந்தப்பொதியும் காலாவதியாகியிருக்கவில்லை. எவ்வாறாயினும் பசறை உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளப் பால்மா பொதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அதேநேரம், கிடைக்கப்பெற்றுள்ள உரிய தரத்திலான பால்மா பொதிகளை மக்களுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சகல பிரதேச காரியாலயங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version