மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையும் புற்றுநோயும் (பகுதி 2) தமிழில்: ஜெயந்திரன்

“மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை விதிப்பதற்கு ஈராக் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தலையிடியாக இருக்கின்றன” என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத குர்திஷ்தான் பிரதேச அரசைச் சார்ந்த ஓர் அதிகாரி கருத்துத் தெரிவித்தார்.

குர்திஷ்தான் பிராந்திய அரசு மேற்கொள்ளும் எண்ணெய் ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கென, ஒரு புதிய, அரச, எண்ணெய் நிறுவனத்தை தாபிக்க ஈராக்கிய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தது. ஏர்பிலுக்கும் பாக்தாத்துக்கும் இடையே இவ்விடயம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து, இறுதியாக இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

‘எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பாக குர்திஷ்தான் பிராந்திய அரசு மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை’ என்று 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஈராக்கிய நடுவண் அரசின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு குர்திஷ்தான் பிரதேச அரசு தனது முழுமையான எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறது.

குர்திஷ்தான் பிரதேச அரசுக்கும் ஒரு வீட்டோ அதிகாரத்தைக் கொடுத்து, எண்ணெயைச் சந்தைப்படுத்துவதற்கான அரச நிறுவனமான சோமோ (SOMO) என்ற நிறுவனத்தை மறுசீரமைப்புச் செய்வதனூடாக, பிரதேச ரீதியிலான கருத்துவேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஈராக்கிய அரசு இணங்கியுள்ளதாக குர்திஷ்தானின் உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன.

குர்திஷ்தான பிரதேச அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையை முற்றாக இல்லாமற் செய்வதற்கான காலக்கெடுவாக 2024ம் ஆண்டை தேர்வு செய்வதாக, கடந்த டிசம்பர் மாதம் ஈராக்கிய அரசு அறிவித்தது. புதிய எண்ணெய் நிறுவனம் தாபிக்கப்பட்டதன் பின்னர் 2024 காலக்கெடுவுக்குள் குர்திஷ்தான் பிரதேச அரசும் உள்ளடங்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சுற்றுச்சூழல் அமைப்பான இஆர்சி (ERC) இவ்விடயத்தைத் தெளிவுபடுத்த ஈராக்கிய அரசைத் தொடர்பு கொண்டது. ஆனால் ஈராக்கிய அரசு இவ்விடயம் தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

உலக வங்கியின் தரவுகளின் படி பூகோள ரீதியாகப் பார்க்கும் போது, ரஷ்யாவே மிகவும் அதிகமான இயற்கை வாயுவை எரித்தழிக்கிறது. 2020ம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி, 24.88 பில்லியன் கன மீற்றர் வாயுவை ரஷ்யா எரித்தழிக்கிறது. ரஷ்யாவுக்கு அண்மித்ததாக ஈராக் 17.37 பில்லியன் கன மீற்றர் வாயுவை எரிக்கிறது.

ஆனால் ரஷ்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சராசரியாக ஈராக்கிலுள்ள மக்களே, வாயுவை எரித்தழிக்கும் மையங்களுக்கு மிக அண்மையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஈராக்கிலுள்ள 1.19 மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் எரித்தழிக்கும் பத்து மையங்களுக்கு ஒரு கிலோ மீற்றர் ஆரைக்குள் வசிப்பதாக 2018ம் ஆண்டு ஒக்ரோபரிலிருந்து நாம் கண்டறிந்திருக்கின்றோம். ரஷ்யாவைப் பொறுத்தவரையில் ஆக 275,000 மக்கள் மாத்திரமே அதே காலத்தில் அதே அளவு வாயுவுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள்.

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மக்கள் வாழும் நகரங்களுக்கு மிகத் தொலைவாகவே ஆட்டிக் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஈராக்கைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்கள் வாயுவை எரித்தழிக்கும் மையங்களுக்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்திருக்கின்றன.

மேலதிக வாயுவை எரித்தழிக்கும் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் இடையே போதிய கால இடைவெளியை ஏற்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தாங்கள் எரித்தழிக்கும் வாயுவின் அளவைக் கணிசமாகக் குறைத்து, குறிப்பிட்ட வாயுவை சேகரிக்கவும் அதனை விற்பனை செய்யவும் ஒரு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு சில நாடுகளில் பெருநிறுவனங்கள், எரித்தழிக்கும் போது வெளியிடப்படும் புகை, நகரங்களையும் கிராமங்களையும் சென்றடைவதைத் தடுப்பதற்காக, பல்வேறு வடிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஈராக்கைப் பொறுத்தவரையில், வேறு சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது போன்று,  அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வதற்கான எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் அங்கு இவ்வாறான செயற்பாடுகளுக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது.

“பொதுவாக, இயற்கை வாயுவைச் சேகரித்து, அதனை வீடுகளை வெப்பமாக்குவது போன்ற செயற்பாடுகளில் பயன்படுத்துகிறோம். ஆனால் ஈராக்கிலோ அவை வீணான உற்பத்திப்பொருளாகக் கருதப்பட்டு எரித்தழிக்கப்படுகிறது” என்று பேராசிரியர் குஷிங் தெரிவித்தார்.

சக்தியை வழங்கும் செயற்பாடுகள் திடீரென்று வளர்ச்சியடைந்ததன் காரணமாக, இந்த வாயுவைச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கோ அல்லது வாயுவைச் சேகரிப்பதற்கோ உரிய வளங்கள் பெறப்பட்டிருக்கவில்லை.

புற்றுநோய் அதிகரிக்கும் வீதம்

“கோவிட் – 19 பெருந்தொற்றினால் எப்போது இந்தப் பிரதேசம் பாதிக்கப்பட்டதோ, அப்போது தான் எவ்வளவு அதிக எண்ணிக்கையானோர் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள்” என்று ஈராக்கின் சுற்றுச் சூழல் நிபுணரான றெபின் மொஹமட் கருத்துக் கூறினார்.

கவர்கொஸ்க் அகதிகள் முகாமில் பணிபுரிபவர்கள் போன்று, வட ஈராக்கின் குர்திஷ் பிரதேசத்தின் கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், இவ்வாறான நோயாளர்களை எப்போதுமே ஏர்பிலில் அடிப்படைச் சுகாதார வசதிகள் உள்ள ஒரு மருத்துவமனைக்கே அனுப்பினார்கள். ஆனால் எரிபொருள் விலையுயர்வின் காரணமாக பெரும்பாலான மக்களால் இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

“ தொடர்ச்சியாக நடைபெற்ற பல போர்கள், பொருளாதாரத் தடைகள், நிதி வழங்கல் குறைபாடுகள் என்பவற்றுடன் 30 ஆண்டுகாலம் இவ்விடயங்கள் கவனிக்கப்படாமல் இருந்ததன் காரணத்தினால், ஈராக்கிலுள்ள அரச சுகாதாரப் பிரிவின் தரம் மிகவும் குறைந்துவிட்டது”‘  என்று ‘ஈராக் மையத்தில் அமைதியை ஏற்படுத்துவோம்’ என்ற ஒரு அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

“சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மேம்பாட்டுக்காக நிதிப் பங்களிப்பை பெருநிறுவனங்கள் செய்வதற்கான அழுத்தத்தை ஈராக்கிய அரசு அந்த நிறுவனங்களுக்குக் கொடுப்பதில்லை” என்று மொஹமட் மேலும் கூறினார்.

“அடுத்த பத்து வருடங்களில் நிலைமை மேலும் மோசமாகும்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலரான சேலா செயிட் கொரான் தெரிவித்தார். “இப்போது ஏற்படுத்தப்படும் சேதம், இன்னும் பத்துப் பதினொரு வருடங்களில் எண்ணெய் வயல்கள் இன்னும் அதிகமாக ஏற்படுத்தப்படும் பட்சத்தில் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாயு எரித்தழிக்கும் நிலையங்களின் காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். இந்த நிலைமை எங்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்குகிறது” என்று மொஹமட் கருத்துத் தெரிவித்தார்.

வட ஈராக்கில் குர்திஷ் பிராந்திய அரசினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தில்  உள்ள எண்ணெய் வயல்களில் அநேகமாக ஒவ்வொன்றிலும் 20 வீதப் பங்கை குறிப்பிட்ட பிராந்திய அரசு கொண்டிருக்கிறது. தனக்கான எண்ணெய் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் பணியை பதவியில் உள்ள முதல் அமைச்சர் மஸ்ரூர் பர்ஸானியின் தலைமையில் இயங்கும் இந்த அரசு தானே முன்னெடுத்து வருகிறது.

இக்குறிப்பிட்ட விடயம் தொடர்பாகக் கேள்வியை எழுப்பிய போது அதிகாரிகள் நேரடியாக இக்கேள்விக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை.

“அருகாமையில் உள்ள வீதியில் நடைபெறும் போக்குவரத்தின் காரணமாக வளி மாசடைவதே இதற்குக் காரணம்”  என்று ஏர்பிலில் உள்ள கபாட் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் காசிம் மிராணி, வாயு எரித்தழிக்கும் நடவடிக்கையின் கனாகனத்தைக் கணக்கெடுக்காமல் கூறினார்.

“பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி, 2023இல் வாயு எரித்தழிக்கும் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதில் குறிப்பிட்ட அரசு உறுதியாக இருக்கின்றது” என்றும் “முதல் அமைச்சர் தானே இந்தக் கொள்கையை  ஊக்குவிக்கிறார்” என்றும் கூறினார். ஆனால் அதே நேரம் வாயு எரித்தழிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளுகின்ற பெருநிறுவனங்கள் தொடர்பாக புதிய வருடத்தில் எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

இது இவ்வாறிருக்க, குறிப்பிட்ட பிராந்தியத்தில் பொதுமக்களின் ஆரோக்கியம் தொடர்பான தரவுகளை வெளியிடுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பிராந்திய அரசு உறுதியான உத்தரவுகளைகளைப் பிறப்பித்திருக்கிறது. வாயு எரித்தழிக்கும் நடவடிக்கையில் எவ்வாறு அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க முன்னர் உடன்பட்டிருந்த பல மருத்துவர்களும் சுகாதார அதிகாரிகளும், கடைசிநேரத்தில் தமது முடிவை மாற்றியதால் அவர்களது கருத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. “அப்படிக் கருத்துத் தெரிவித்தால் அது தமக்கு ஆபத்தாக முடியும்” என்று பலர் கூறினார்கள். வாயு எரித்தழிக்கும் நடவடிக்கை தொடர்பாக தாம் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தால், அகதி முகாம்களிலிருந்து தாம் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகின்ற அதே நேரம், மருத்துவ அதிகாரிகளோ அது தமது தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறார்கள்.

பெருநிறுவனங்களில் ஒன்றான கார் (KAR) குழுமத்தின் வாயு எரித்தழிக்கும் நிலையங்கள் இவ்வருடத்தின் தொடக்கத்தில் ஒளிப்படப்பிடிப்புக்கு உள்ளாகின. வாயுவை எரித்தழிக்கும் செயன்முறை மூலம் தாம் எவ்வளவு வாயுவை இழக்கிறார்கள் என்றோ அல்லது கால இடைவெளிவிட்டு வாயுவை எரித்தழிப்பது தொடர்பாகத் எவ்வாறான திட்டங்களை தாம் வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாகவோ அவர்கள் எந்தவிதமான தகவலையும் வெளியிடுவதில்லை.

கால இடைவெளி விட்டு எரித்தழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கொள்கையை 2023இல் அமுல் நடத்துவதில் தாம் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என குர்திஷ்தான் பிராந்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் இந்த அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பெருநிறுவனங்கள், தமது செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், கடந்த இரண்டு வருடங்களிலும் வாயு எரித்தழிக்கும் நடவடிக்கையை எவ்வாறாக மேற்கொண்டனவோ அவ்வாறே நடப்பு ஆண்டிலும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக இஆர்சி மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்கு குர்திஷ்தான் பிராந்திய அரசினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தில் இயங்குகின்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு, 18 மாதகால அவகாசத்தை வழங்கி, அந்த அரசின் இயற்கை வளங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றுகின்ற கமல் அற்றோஷி ஒரு ஆணையைப் பிரகடனம் செய்தார். 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் இந்த அவகாசம் முடிவடைகின்றது.

அந்தக் காலக்கெடு இப்போது கடந்துசென்றுவிட்டது என்றும் அந்தக் கட்டளை இன்னும் அமுலில் இருப்பதாகவும், அதே நேரம் உரியமுறையில் நியாயப்படுத்திய நிறுவனங்களுக்கு சிறிய அளவில் காலநீட்சி வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் வெளிநாட்டு ஊடக விவகாரங்களுக்குத் தலைமை தாங்குகின்ற லோக் கவூரி தெரிவித்தார்.

இது அதிகமான செலவைக் கொண்டிருக்கின்ற ஒரு திட்டம் என்றும் அதே நேரம் இந்தத் திட்டத்திற்குக் காத்திரமான வடிவமைப்பும் திட்டமிடலும் அவசியமானது என்பதுடன் திட்டம் நீண்ட காலம் எடுக்கும் என்றும் கவூரி கருத்துத் தெரிவித்தார்.

இது எவ்வாறிருப்பினும் மேற்படி ஆணையை வெளியிட்ட அமைச்சரான கமல் அற்றோஷி இயற்கை வளங்களுக்கான அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். இடைக்காலத்தில் மின்சக்தி அமைச்சரான கமல் மொஹமட் சாலியினால் இந்த வெற்றிடம் நிரப்பப்படுகிறது.

குர்திஷ்தான் பிராந்திய அரசுக்குரிய பிரதேசத்தில் அண்மையில் நிறைவு செய்யப்பட்ட எரித்தழிக்கும் வாயுவிலிருந்து சக்தியைப் பெறும் திட்டம் எதிர்காலத்துக்கான வழியைக் காட்டலாம். அக்றெக்கோ என்ற சக்தி நிறுவனத்தினால் கட்டப்பட்ட இந்த மையம் எரித்தழிக்கும் நடவடிக்கையை மூன்றில் ஒரு பங்கால் குறைத்திருக்கிறது.

அகதிகளுக்கென ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான முகாம்களை அரசு உருவாக்கும் என்று உள்ளுரில் வாழுகின்ற மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நிலைமை மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன, பலருக்கு இந்த இடத்தில் தொடர்ந்து வசிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் எவையும் இல்லை என்பதே உண்மையாகும்.

எமது மூதாதையர்கள் இங்கு தான் வாழ்ந்தார்கள். அத்துடன் இந்த நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். எனவே இங்கு தான் நாங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். துரதிட்டவசமாக இதற்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம் என்று குரான் தெரிவித்தார்.

சொந்தப் பெயர்கள் இங்கு பயன்படுத்தப்படவில்லை.

நன்றி: அல்ஜஸீரா