அரசியல் கைதி விடுதலை செய்யப்படாத போதும் விடுதலை என சிலர் தம்பட்டம் அடித்து அரசியல் செய்கிறார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதி விடுதலை செய்யப்படாத போதும் விடுதலை என சிலர் தம்பட்டம் அடித்து அரசியல் செய்வதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கண்டிப்பதாக அதன் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் தலைமையிலான தரப்பினருக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நல்ல செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அத்தகைய செய்தியை அரசு தரப்பினரால் உத்தரவாதப்படுத்தப்படாத நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 14 வருட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான கனகரத்தினம் ஆதித்தன் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அது சட்டமா அதிபர் திணைகளத்தினால் வழக்கு தொடர முடியாத நிலையில் மீள பெறப்பட்டுள்ளது. இது விடுதலை என ஒரு சிலர் தம்பட்டம் அடித்து அரசியல் செய்வதை  வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு ஆதித்தனுக்கு எதிராக இன்னுமொரு வழக்கிற்கு நாளும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் அரச தரப்பினரோடு இறுதியாக நடந்த சந்திப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கருத்து வெளியிட்ட சுமந்திரன் “மீண்டும் ,மீண்டும் பழைய கதையையே கூறிக் கொண்டிருக்கின்றனர். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் தாருங்கள்” என கேட்கின்றார்கள். “அதனை தயாரித்துக் கொடுப்போம்”எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அரசியல் கைதிகள் ஐந்து பேரின் விடுதலை தொடர்பாகவும் பேசப்படுகின்றது.யார் இந்த ஐந்து பேர் ?இவர்களை தெரிவு செய்யும் உரிமை யாருக்கு உள்ளது? எனவும் கேட்கின்றோம்.அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்த பின்னரே அரச தரப்பினரோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடல் வேண்டும். இல்லையெனில் அது அரசிற்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்து அவர்களை கரை சேர்க்கும் தரகு செயலாகவே நாம் கருதுகிறோம். இது இவ்வாறே அமையுமெனில் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தரப்பினருக்கு தமிழர்கள் ஜனநாயக ரீதியில் நல்ல பாடத்தை கற்பிப்பர்.

அதுமட்டுமல்ல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ள காணிகள் விடுவிக்கப்படல் வேண்டும், பலவந்தமாக காணாமலாக்கபட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டும் எனும் கோரிக்கை மிக நீண்ட காலமாக ஆட்சியாளரிடம் முன்வைக்கப்பட்ட போதும் அது செவிட்டு யானையின் முன்னால் ஊதிய சங்கொளியாகவே உள்ளது. இந்த நிலையில் மீண்டும் பட்டியல் தாருங்கள் என கேட்கின்றார்கள் இவர்கள் கொடுக்கப் போகின்றார்கள் என்றால் யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்.

நாம் ஜனாதிபதிக்கும், அரசிற்கும், தற்போது பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் கூறுவது உங்கள் அரசியல் திருவிழாக்களுக்காக அரசியல் கைதிகளை தோரணங்கள் ஆக்காதீர்கள்.

இவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டு துன்பங்களை அனுபவிப்பது உங்களின் பொங்கலுக்காகவும், உங்களின் சுதந்திர தினத்திற்காகவும் அல்ல. தன்மான அரசியலுக்காக,கௌரவமான அரசியல் சுதந்திரத்திற்காக என்பதை உணருங்கள். காலம் தாழ்த்தி என்றாலும் இதனை மதித்து அவர்களின் விடுதலையை உறுதி செய்யுங்கள். அவர்களை உதிரிகளாக விடுதலை செய்ய நினைப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகவும் இதனை செய்து தமிழர்களின் சாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் கூறுகின்றோம்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் வாடும் வசந்த முதலிலேயே விடுதலை செய்யப்படல் வேண்டும். அதற்கு மாற்றுக் கருத்து இல்லை.இவரது கைதுக்கு எதிராக கோஷம் எழுப்புபவர்கள் வீதியில் நிற்பவர்கள் ஒன்றை உணர வேண்டும். பயங்கரவாத தடை சட்டம் உங்களின் ஆதரவுடனேயே கடந்த 44 ஆண்டு காலமாக சிங்கக்கொடியின் ஆசிர்வாதத்துடன் பாதுகாப்பில் உள்ளது.

உங்களால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் தான் அரசியல் என நாம் கூறுகின்றோம். அவர்களே சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். 44 வருட காலமாக தமிழர்கள் அனுபவிக்கும் வேதனையை புரிந்து கொண்டு அரசியல் கைதிகளாக உள்ளவர்களையும் நிபந்தனை இன்றி விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை வையுங்கள். தமிழர்களுக்கான அரசியல் நீதியை வலியுறுத்துங்கள்.

அதுவே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். அதுவே உங்கள் போராட்டத்திற்கும் வலு சேர்க்கும் என்றார்.