ஐரோப்பா.. 30 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ- 500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்

ஐரோப்பிய கண்டம் முழுவதும் வெப்பம் மற்றும் காட்டுத் தீயினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்தோடு 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் ஆண்டு முழுவதும் மிதமான காலநிலையே நிலவும். ஆனால் தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், வடக்கு பகுதியிலோ வெயில் சுட்டெரிக்கிறது. இவை அனைத்தும் பருவநிலை மாற்றத்தின் கோர விளைவுகள் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பிரிட்டனில் முதல் முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்களிடம் பயணங்களை தவிர்க்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் செயல்பட வில்லை.   மக்கள் நீர் நிலைகளை தேடியும் குளிர்ச்சியான பொருட்களை உண்டும் சூட்டை தணித்துக் கொள்கின்றனர்.

பிரான்சில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 50,000 ஏக்கரிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீ காரணமாக 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏத்தென்சில் பென்டெலி மலை சரிவுகளில் எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். 15 விமானங்களை பயன்படுத்தியும் தீயை அணைக்க முடியவில்லை என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. இதனால் பென்டெலி மலை அருகே உள்ள ஏராளமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.