ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இன்று இலங்கை வருகை

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு

5 பேர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு ஒன்று  இலங்கைக்கு  இன்று வருகை தருகின்றது.  

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமானது 2017ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

அதன் பின், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டு தீர்மானம் ஒன்று  நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில், இலங்கையின் நிலமைகளை நேரில் ஆய்வு செய்து. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்று இந்த குழு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

இதேவேளை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்மாக அமைத்துள்ள குழுக்களின் செயற்பாடுகளையும் அவற்றின் அறிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றிய துாதுக்குழுவிடத்தில் வெளிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 மில்லியன் டொலர்களுக்கான வர்த்தகத்துக்கான சலுகை வரி கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சட்டத்தரணியும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான ம்.ஏ சுமந்திரன், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய துாதுக்குழுவிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021