டீக்ரே போராளிகளைக் குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல்

எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல்


வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் என பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக  போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டீக்ரே.

2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், இராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

ஆனால் மத்திய அரசின் அதிகாரத்தை அவர் பெருக்குவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் டீக்ரேவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அபிய் அகமது அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார் அபிய் அகமது.

போர் முடிந்தவிட்டதாக அபிய் அகமது அறிவித்தாலும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், டீக்ரே போராளிகளைக் குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழுவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்யவும் இயலவில்லை.

11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 இலட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad டீக்ரே போராளிகளைக் குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல்