தோட்டங்கள் கிராமங்களாக மாற்றம் பெற வேண்டும்- துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைப்பதன் ஊடாக அவர்கள் பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதற்கு வலுசேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் அண்மையில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தார்.எனினும் தோட்டங்கள்  கம்பெனிகளின் பொறுப்பிலுள்ள நிலையில் இதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் பலரும் கேள்வியெழுப்பி இருந்தனர்.அத்துடன் கம்பெனிகளிடமிருந்து  அரசாங்கம் காணிகளை மீட்டெடுத்து சிறு தோட்டங்களின்  நிலைமைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்நடவடிக்கை பயனுள்ளதாக அமையுமென்றும் இவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெருந்தோட்டத் தொழிற்றுறை இப்போது அழிவுப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.ஊதியப் பற்றாக்குறை, தொழில் நவீனத்துவமின்மை , கம்பெனியினரின் சர்வாதிகார முன்னெடுப்புக்கள், தொழிலாளர்கள் ஈடுபாட்டுடன் தொழிலை மேற்கொள்ளாமை, பராமரிப்புக் குறைபாடுகள், தொழிலாளர்களின் நகர்ப்புறம் நோக்கிய நகர்வுகள், கல்வி விருத்தி, இளைஞர்கள் வெள்ளைக் காற்சட்டை உத்தியோகத்தை நாடிச் செல்லும் போக்கு எனப்பலவும் இத்தொழிற்றுறையின் பின்தங்கிய நிலைமைக்கு அடித்தளமிட்டு வருகின்றன.

இதேவேளை தோட்டங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையும்   அண்மைக்காலமாக வீழ்ச்சி கண்டுள்ளமையும் தேரிந்ததேயாகும்.இதனடிப்படையில் 1980  இல் 541,971 தொழிலாளர்கள் தேயிலை பெருந்தோட்டங்களில் பதிவு செய்திருந்தனர்.இது 1985,இல் 458,617 ஆகவும், 2005 இல் 246,478 ஆகவும், 2010 இல் 212,826 ஆகவும், 2015 இல் 158,322 ஆகவும் காணப்பட்டது.எனினும் சமகாலத்தில் இவ்வெண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சுமார் ஒரு இலட்சத்து 40,000 ற்கும் குறைவான தொழிலாளர்களே பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்டவாறு தோட்டங்களில் பதிவு செய்து கொண்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளபோதும் அவர்கள் யாவரும் தோட்டங்களை விட்டு வெளியேறிவிட்டனர் என்று கூறிவிட முடியாது என்றும் பதிவுகளில் இருந்து விலகிக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் தோட்டங்களிலேயே வசிப்பதாககவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1985  இல் இலங்கையில் 231,650 ஹெக்டேயரில் தேயிலை பயிர்ச்செய்கை இடம்பெற்றது.பெருந்தோட்டப் பகுதிகளும் கணிசமாக இதில் உள்ளடங்கும்.எனினும் பிற்காலத்தில் பல்வேறு தேவைகளுக்காக பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் சுவீகரிக்கப்பட்ட  நிலையில் இது இனவாதத்தை மையப்படுத்திய முன்னெடுப்பு என்றும் சிலர் அடையாளப்படுத்தி இருந்தனர்.தேயிலை உற்பத்தியை பொறுத்தவரையில் 1945 இல் 125.6 மில்லியன் கிலோ கிராமாக  இருந்தது.இது 1965 இல் 228.6, 1974 இல் 204.5, 1978 இல் 198.9, 1986 இல் 211.3, 1990  இல் 233 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்டது.

பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் தேயிலை உற்பத்தி அதிகரித்து காணப்பட்டபோதும் பின்வந்த காலங்களில் சிறு தோட்ட உரிமையாளர்களின் கை ஓங்கி இருந்ததையே அவதானிக்க முடிந்தது.1995 இல் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 168.8 மில்லியன் கிலோ கிராமாகும்.இவ்வா்ண்டில் சிறுதோட்ட தேயிலை உற்பத்தி 111.3 மில்லியன் கிலோ கிராமாக இருந்தது.எனினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறுதோட்ட தேயிலை உற்பத்தி பெருந்தோட்டங்களை முந்திச்சென்றது.2000 மாம் ஆண்டில் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 100.1 , 2005 இல் 111.5, 2010 இல் 100.8, 2017 இல் 104 மில்லியன் கிலோ கிராமாகும்.இதேவேளை சிறுதோட்ட தேயிலை உற்பத்தி 2000 இல் 183.8, 2005 இல் 205.7, 2010 இல் 230.1, 2017 இல் 244 மில்லியன் கிலோ கிராம் என்றவாறு அமைந்திருந்தது.

இதேவேளை சிறுதோட்ட  சிற்றுடைமைகளின் பரம்பலும் தொடர்ச்சியாக அதிகரித்த போக்கினையே வெளிப்படுத்தி வந்துள்ளது.1983 இல் 75,769 ஹெக்டேரில் சிற்றுடைமை தேயிலை பரம்பல் காணப்பட்டது.1983 இல் கண்டி மாவட்டத்தில் சிறு தோட்டங்களின் பரப்பளவு 19,269 ஹெக்டேயர்களாகும்.

1994 இல் இம்மாவட்டத்தின் சிற்றுடைமை தேயிலை பரம்பல் 9733 ஹெக்டேயர்களாக காணப்பட்ட து.இந்நிலையில் 1983 இல் 75,769 ஹெக்டேயராக காணப்பட்ட   இலங்கையின் சிற்றுடைமை தேயிலை பரம்பலானது,  2014 இல் 132,335 ஹெக்டேயராக  அதிகரித்திருந்தமையும் நோக்கத்தக்கதாகும்..இவ்வாறாக ஒரு புறத்தில் பெருந்தோட்ட தேயிலை விளை நிலங்களின் பரப்பளவு கேள்விக்குறியாகி வந்த நிலையில் சிறு தோட்ட தேயிலை விளை நிலங்களின் பரப்பளவு வேகமான அதிகரிப்பினை வெளிப்படுத்தியது..இவற்றோடு அரசாங்கம் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கிய சலுகைகள், வரப்பிரசாதங்கள் உள்ளிட்ட  பல்வேறு காரணங்களால் சிறு தோட்டங்கள் தேயிலை உற்பத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டன.

அடையாளம் இழப்பு

” இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறை பிரித்தானியர் அறிமுகம் செய்ததில் இருந்து சுதந்திரம் அடையும்வரை 100 வீதம் பிரித்தானிய கம்பெனிகளின் கைவசமே இருந்தது.எனினும் சுதந்திரத்தின் பின்னர் அதன் உரிமத்தில் மாற்றம் கொண்டு வந்த நிலையில் 1972 இல் சிறு தோட்டங்கள் 25 வீதமாகவும், பெருந்தோட்டங்கள் 75 வீதமாகவும மாற்றம் பெற்றன. அதுவே 1992 இல் 50:50 என்றும், 2022 இல் 25 வீதம் பெருந்தோட்டங்களும் 75 வீதம் சிறு தோட்டங்களும் என்று மாற்றம் கண்டுள்ளன.

இந்நிலையில் 2050 ம் ஆண்டு ஆகும்போது இலங்கையில் பெருந்தோட்டங்கள் ஒரு வீதமாகவும, சிறு தோட்டங்கள் 99 வீதமாகவும் அமையுமாறு தேசிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

பெருந்தோட்டட மக்களை புறந்தள்ளி சிறு தோட்ட   முன்னெடுப்புக்கள் இடம்பெறுமிடத்து,  பெருந்தோட்ட மக்களின் அடையாளம், இருப்பு என்பன கேள்விக்குறியாகிவிடும்.தொழிலாளர்களின் இடப்பெயர்வு கலாசார ரீதியான மாற்றங்கள் மற்றும் சீர்கேடுகள் என்பவற்றுக்கும் வழி சமைப்பதாக அமைந்துவிடும்.

1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் ஏற்பட்ட வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை, அவ்வப்போது இடம்பெற்ற கலவரங்கள் போன்றவற்றால் பெரும்பாலான பெருந்தோட்ட மக்கள் வடமாகாணம் சென்று குடியேறினர்.இவர்கள் இலங்கை தமிழர்கள் செறிந்து வாழ்ந்த வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் குடியேறினர்.இந்நிலையில் காலப்போக்கில் இவர்கள் தமது இந்திய மற்றும் மலையக அடையாளங்களைக் கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்துவிட்ட ஒரு போக்கு தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் உள்ளன.

பெருந்தோட்டக் காணிகளை அங்கு வாழும் மக்களுக்கே பிரித்துக் கொடுத்து அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதன்  மூலமாகவே பெருந்தோட்டங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அண்மையில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தார்.இதனிடையே  தோட்டங்கள் கிராமமாக மாற்றப்பட வேண்டும் என்று கூறும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கிராமச் சூழலில் வெளியாரின் உள்ளீர்ப்பு இடம்பெறுமிடத்து அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்கிறார்.வாழையடி வாழையாக தோட்டத்தில் வாழ்பவர்களை வைத்து கிராமம் அமைக்கப்பட வேண்டும்.

பொருளாதார சக்திமயப்படுத்தலோடு  இந்நடவடிக்கை முன்னேடுக்கப்பட வேண்டும். இதனால் சாதக விளைவுகள் ஏற்படும்.மேலும் சிறு தோட்ட உரிமையாளர்களாக தொழிலாளர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்கு நானும் இணங்குகின்றேன்.ஆனால் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் தற்போது தோட்டங்கள் உள்ள நிலையில் மீண்டும் அரசாங்கம் அவற்றை பொறுப்பேற்று மக்களுக்கு நிலத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்.இதன் மூலமே பெரும்பான்மை சிறுதோட்ட உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் அனைத்து நன்மைகளையும் எம்மவர்களும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் ஓடி மறைகின்றன.எனினும் வரலாறுக்கேற்ப அவர்களின் வாழ்க்கை நிலைமைகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் திருப்தி கொள்ள முடியவில்லை.இம்மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை என்பன இன்னும் நிறைவேறாத ஒரு கனவாகவே இருந்து வருகின்றன.பொருளாதார அபிவிருத்தி என்பது சகல எழுச்சிகளுக்கும் உந்துசக்தியாக அமைகின்றது.

இந்நிலையில்   இம்மக்களின் பொருளாதார உரிமையும் கூட மழுங்கடிக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.பொருளாதார ஈட்டலுக்கான கதவுகள் அனைத்தும் மூடப்பட்டே காணப்படுகின்றன.வறுமை இவர்களை ஆட்டிப்படைக்கின்றது.கடந்த பத்து மாதங்களில் மட்டும்  40 இலட்சம் இலங்கையர்கள் அடகுவைத்த தங்க நகைகளின் பெறுமதி 19 ஆயிரத்து 300 கோடி ரூபா என்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள உள்ளிட்ட  குழுவினர் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

13 வணிக வங்கிகள்,10 அங்கீகாரம் பெற்ற பிரதான அடகு பிடிக்கும் நிலையங்களை மையப்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தங்க நகை அடகு வைத்தோர் பட்டியலில் மலையக  பெருந்தோட்ட மக்களும் அதிகமாகவே உள்ளீர்க்கப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மையாகும்.

இந்நிலையில் பெருந்தோட்ட மக்களின் பல்துறை அபிவிருத்தி கருதியும், காணியுரிமைக் கனவை நனவாக்கும் பொருட்டும் , அடிமை வாழ்வில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும்  சிறு தோட்ட உரிமையாளர்களாக தொழிலாளர்களை மாற்றம்‌பெறச் செய்தல் வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாகவே எதிரொலிக்கின்றது.

இதன் சாதக விளைவுகளை ஆராய்ந்து அதனை சாத்தியப்படுத்திக் கொள்ள அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பது  அவசியமாகும்.இதனால் மலையக சமூகம் தலை நிமிர்ந்து வாழும் நிலை உருவாகும்.