கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா

துரைசாமி நடராஜா

மலையகத்தின் சமகாலப் போக்குகள்: கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? மூக அபிவிருத்தியில் ஆளுமை மிக்க அரசியல் மற்றும் தொழிற்சங்க வகிபாகத்தின் அவசியப்பாடு  பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் காணப்படும் தொய்வு நிலை சமூக அபிவிருத்தியைக் கேள்விக்குறியாக்குவதோடு, உரிமை சார்ந்த விடயங்களை மழுங்கடிப்பிற்கு உள்ளாக்கி விடும் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்த வகையில், மலையகத்தின் சமகாலப் போக்குகள் இதற்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றன. அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் இப்போது வலுவற்ற போக்கினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மக்கள் பல்வேறு துறைகளிலும் நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அரசியல் தொழிற்சங்கங்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை மேலெழுந்து காணப்படுகின்றது.

அரசியல் உரிமைகள்உலகில் பின்தங்கிய சமூகங்கள் பலவுள்ளன. இச்சமூகங்கள் மேலெழும்புவதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொரோனா பேரிடர் இச்சமூகத்தினரின் நிலைமைகளை மோசமடையச் செய்துள்ளதோடு, பல்துறைகளினதும் பின்னடைவுக்கும் வித்திட்டுள்ளது. இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த நிலைக்கு ஒப்பானதாகும். இந்த வகையில் மலையக சமூகமும் கொரோனாவால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், சமூக அபிவிருத்தி தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளை முடுக்கிவிட வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு தேவையான பல அம்சங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கல்வி, பொருளாதாரம், அரச தொழிற்றுறைகளில் போதுமான உள்ளீர்ப்பு, வளமேம்பாடு எனப் பலவும் உள்ளடங்குகின்றன. இந்த வகையில் அர்த்தமுள்ள அர்ப்பணிப்புடன் கூடிய அரசியல் மற்றும் தொழிற்சங்க வகிபாகம் குறித்தும் அதிகமாக பேசப்படுகின்றது.

அரசியல் உரிமைகள்

1948 இல் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையும், பிரசாவுரிமையும் இனவாத ஐக்கிய தேசியக் கட்சியினால் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இச்சமூகத்தினரின் அரசியல் ஆளுமைகள், பிரதிநிதித்துவம் என்பன மழுங்கடிக்கப்பட்டதுடன், சமூக மேம்பாடு தடைப்பட்டிருந்தது. ஆட்சியில் உள்ள அரசுகள் இம்மக்கள் தொடர்பில் பாராமுகத்துடன் செயற்பட்டன. எனினும் 1988 இல் மீளவும் இந்த உரிமைகளை இந்திய வம்சாவளி சமூகத்தினர் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அரசியலில் கோலோச்சும் நிலைமை உருவெடுத்தது. உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றம் என்று மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தன. எனினும் இப்போது இந்த நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருக்கின்றது என்பதையும் கூறியாக வேண்டும். இதற்கு பல காரணங்கள் உள்ளபோதும், கட்சிகளின் அதிகரித்த தன்மை, முரண்பாடுகள் என்பன பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

1988ஆம் ஆண்டினைத் தொடர்ந்து மலையக அரசியல்வாதிகள் அரசியலில் கால்பதித்து வருகின்றபோதும், இவர்கள் தம்மைச் சார்ந்த மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகள் குறித்து  அதிருப்தியான அதிகரித்த வெளிப்பாடுகள் இருந்து வருவதையும் மறுப்பதற்கில்லை. பெரும்பான்மைக் கட்சிகளை மையப்படுத்தி, மலையக அரசியல்வாதிகள் கட்சித் தாவல்களை மேற்கொண்டு வருகின்றபோதும், இந்தக் கட்சித் தாவல்கள் மக்களுக்கு எந்தளவுக்கு சாதக விளைவுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளன என்று சிந்திக்கின்ற போது, திருப்தி கொள்ள முடியாதுள்ளது. மலையக அரசியல்வாதிகள் சுயநலவாத நோக்கில் அமைச்சுப் பதவிக்காகவும், தமது வாரிசுகளை அரசியலில் உள் நுழைப்பதற்காகவும் கட்சி மாறுவதையும், ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டு செயற்படுவதாக விமர்சனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில மலையக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது, இவ்விமர்சனங்களில் உண்மையில்லை என்று ஒரேயடியாக புறந்தள்ளி விடவும் முடியாதுள்ளது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாமலையக மக்கள் ஏனைய சமூகங்களைச் காட்டிலும் இன்று தாழ் நிலையில் உள்ளனர். நிலவுடைமை மற்றும் வீட்டுடைமைச் சமூகமாக இம்மக்கள் மேலெழும்ப வேண்டும் என்ற கோஷங்களும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றதே தவிர, இவையெல்லாம் பல சந்தர்ப்பங்களில் வெற்றுக் கோஷங்களாகவும், கோரிக்கைகளாகவும் முற்றுப் பெற்று விடுவதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெரும்பாலும் மேதின மேடைகளிலும், தேர்தல் காலப்பகுதிகளிலும் இவ்வாறாக மலையக மக்களின் பல்வேறு உரிமைகளையும் வலியுறுத்தி கோஷமெழுப்பப்படுகின்ற போதும், பின்னர் எல்லாம் புஷ்வாணமாகி விடுவது கடந்த கால அனுபவங்களாகும்.

மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளிடையே திட்டமிட்ட தூரநோக்குடன் கூடிய செயற்பாடுகள் இல்லாத நிலையே பெரும்பாலும் காணப்படுகின்றன. ஆய்வின் மூலம் அபிவிருத்தி என்ற எண்ணக்கரு தொடர்பில் இப்போது அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆய்வின்றேல் அபிவிருத்தி இல்லை என்பது முக்கியத்துவம் மிக்கதொரு கோட்பாடாக விளங்குகின்றது. இந்த வகையில், அனைத்துத் துறைகளிலும் மலையக மக்களின் சமகால நிலைமைகள் எத்தகையன? இவற்றை அபிவிருத்தி செய்வதற்கு எத்தகைய திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும்? இத்திட்டங்களின் உள்ளடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்? என்பன தொடர்பில் ஒரு ஆய்வு ரீதியான ஆவணங்கள் மலையக அரசியல்வாதிகளிடம் இருக்கின்றதா? என்ற சந்தேகமே மேலெழுகின்றது.

ஆய்வினை அடிப்படையாக வைத்து, நீண்ட கால மற்றும் குறுங்கால திட்டங்களைத் தயார் செய்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. எனினும் மலையக அரசியல்வாதிகள் இதிலிருந்தும் விலகிச் செல்கின்ற ஒரு போக்கே அதிகமாகக் காணப்படுகிறது. எதற்கெடுத்தாலும் தரவுகளின்றி எழுந்தமானமாகப் பேசுவதையே சில அரசியல்வாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாதக விளைவுகள் பெற்றுக் கொள்ளப்படாமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைவதற்கும், உரிய புள்ளி விவரங்கள் அல்லாத தொழிற்சங்கத் தரப்பினரின் பேச்சுவார்த்தைகளே முக்கிய காரணமாகும் என்று ஏற்கனவே பல வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல்ஒவ்வொரு சமூகமும் இன்று முன்செல்ல வேண்டிய பொறுப்புக்களை உணர்ந்து அதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. உலகமயமாக்கல் (globalization) நிலைமைகளை கருத்தில் கொண்டு, சமூகங்கள்  விரைவாக முன்னேற்றம் காணத் துடிக்கின்றன. தேசிய மற்றும் சர்வதேச நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ள அயராது அர்ப்பணிப்புடன் பாடுபடுகின்றன. இதற்கான வசதிகளையும், வாய்ப்புக்களையும் அரசியல்வாதிகள் முன்னின்று குறிப்பிட்ட  சமூகத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரையில், இந்நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது.

மக்களின் வாக்குகளால் அரசியல் பிரவேசம் செய்த பலர் தாமும் தமது குடும்பமும் வாழ உழைப்பதையே வழக்கமாகக் கொண்டு செயற்படுவதாக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மைகள் கசப்பானவை என்பதற்காக சில விடயங்களைக் கூறாமல் விட்டுவிட முடியாது. மலையக சமூகத்தில் தொடர்ச்சியாக அரசியல் பிரதிநிதித்துவங்கள் இருந்து வருகின்றன. எனினும் இப்பிரதிநிதித்துவங்களால் இம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட இன்னும் ஒரு உருப்படியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில் தொழிலாளர்களின் காவலனாக, காதலனாக  விளங்கின. கலங்கரை விளக்கம் என்று தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களைப் புகழ்ந்து பேசி இருந்தனர். ஆனால் இன்று தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதற்கு எந்தளவுக்கு குரல் கொடுக்கின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் விரிசல் போக்கு அதிகரித்து வருவதனை தொடர்ச்சியாகவே சுட்டிக்காட்டி வருகின்றேன்.

தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியலில் உள் நுழைவதற்கு தொழிற்சங்கங்கள் ஏணியாகி இருக்கின்றன. இதற்கான காய் நகர்த்தல்களையே தொழிற்சங்கங்கள் மேற்கொள்கின்றன. இந்நிலையில் மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புக்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. சுய நலத்துக்காக அப்பாவித் தொழிலாளர்கள் பிரித்தாளப்படுகின்றனர். அற்ப சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் அரசியல் தொழிற்சங்கவாதிகள், அவர்களை சகல துறைகளிலும் பலிக்கடாவாக்கி வருகின்றனர். பகடைக் காய்களாக்கியும் வருகின்றனர். இது தம்மை நம்பி வாக்களித்து அரசியலுக்கு அனுப்பி வைத்த  மக்களுக்கு அரசியல்வாதிகள் செய்கின்ற ஒரு மாபெரும் துரோகமாகும் என்பதையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கும் மத்தியில் மலையக மக்கள் சிந்தனைத் தெளிவுடனும், ஐக்கியத்துடனும் செயற்பட வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. தமது இருப்பிற்கு பல நிலைகளிலும் நெருக்கீடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இருப்பினையும் கலாசார ரீதியான அடையாளங்களையும்  உறுதிப்படுத்திக் கொள்ள முன்னின்று காத்திரமாக செயற்பட வேண்டியுள்ளது. இது தனி ஒரு மனிதனால் சாத்தியப்படக் கூடிய ஒரு விடயமல்ல.

சமூக நலனை மையப்படுத்திய ஒன்றிணைந்த கூட்டுச் செயற்பாடுகள் இதில் அவசியமாகும். இவற்றுள் மேல் நிலையில் உள்ள மலையக அரசியல்வாதிகள் கூடுதலாகவே தமது பங்களிப்பினை வழங்குதல் வேண்டும். இதை விடுத்து இப்போது சுயநல நோக்கில் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டு பின்னர் வருந்துவதால் எவ்வித நன்மையும் ஏற்படமாட்டாது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால், எவ்விதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்பதனை இவர்கள் நன்றாக விளக்கிச் செயற்படுதல் அவசியமாகும்.