Tamil News
Home செய்திகள் நீதியை நாடுவதற்கான சமத்துவத்தன்மையை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது – ஜுலி சங்

நீதியை நாடுவதற்கான சமத்துவத்தன்மையை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது – ஜுலி சங்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க தூதரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டக்கட்டமைப்பை சர்வதேச சட்டக்கட்டமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கடப்பாடுகளுக்கு அமைவானதாக மேம்படுத்துவதற்கு அவசியமான உதவிகளை நீதியமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய கட்டமைப்புக்களுடன் இணைந்து வழங்குவதன் மூலம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நீதியை நாடுவதற்கான சமத்துவத்தன்மையை உறுதிசெய்வதென்பது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாததாகும்.

அந்தவகையில் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான நீதியமைச்சின் முயற்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய வகையில் பயிற்சிகளை வழங்குவதற்கும், தொழில்நுட்பங்களை நவீனமயப்படுத்துவதற்கும், இலங்கையின் சட்டக்கட்டமைப்பில் பெண்களின் வகிபாகத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version