முடிந்தால் 13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்திக் காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்

WhatsApp Image 2021 12 12 at 12.11.32 PM 1 முடிந்தால் 13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்திக் காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்

முடிந்ததால் 13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்திக் காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மேலும் “..மகிந்த ராஜபக்ச ஏதோ 13ஐ விடவும் திறமான, தரமான, சமஷ்டி தீர்வு தர தயாராக இருப்பது போலவும், “அந்த கட்சி, இந்த கட்சி தலைவர்கள், சிலர் 13ஐ பற்றி பேசுவதன் மூலம் ராஜபக்ச சகோதரர்கள் தர இருக்கும் சமஷ்டி தீர்வை தடுக்கிறார்கள் என்ற சில தரப்பினரின் கருத்து முறையற்றது. 13ஐ கூட நீங்கள் அமுல் செய்யவில்லை என்றுதான் இலங்கை அரசை நாம் குற்றம் சாட்டுகிறோமே தவிர, 13 தான் தீர்வு என நாம் ஒருபோதும் கூற வில்லையே.13ம் திருத்தம் என்பது அர்த்தமுள்ள தீர்வு என எம்மில் எவர் எங்கே சொன்னார்கள்.?” என்றார்.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று  கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு   யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் மேலும் கூறுகையில்,

“ஈழத்தமிழ் மக்களையும், மலையக தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களாகிய நாம், தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகள் குறித்து எம்மத்தியில் சிரேஷ்ட தலைவராக உள்ள சம்பந்தன் ஐயாவின் தலைமையில் கூடி ஆராய்ந்துள்ளோம்.

இதன்போது 13 ஆம் திருத்தம் குறித்தே அதிகமாக பேசப்பட்டது. ஆனால் 13 ஆம் திருத்த சட்டம் தமிழ் மக்களின் இறுதி அரசியல் இலக்காக கருதப்படவில்லை. 13 ஆம் திருத்தம் குறித்து நாம் விசேடமாக கோரிக்கை விடவேண்டிய அவசியம் இல்லை. இது இலங்கை அரசியல் அமைப்பிற்குள் இருக்க வேண்டிய ஒரு சட்டமாகும்.

இதனை அமுல் படுத்தி காட்டுங்கள் என்பதே எமது கோரிக்கையாகும். 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்தி தமிழ் பேசும் மக்களின் மனங்களையும் இதயத்தையும் வென்று காட்டுங்கள் என்பதே அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் சவாலாகும்.

தமிழ் மக்களின் ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டமாக அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த சட்டம் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாகவே உள்ளே நுழைந்தது. ஆகவே, இந்திய அரசாங்கத்திற்கும் இதனை வலியுறுத்தும் பிரதானமான கடப்பாடு இருகின்றது. கட்சிகள் வேறுபட்டாலும் இந்திய அரசாங்கத்திற்கு இது குறித்த கடமைப்பாடு உள்ளது. அதேபோல் உலக உ நாடுகளுக்கும் இது குறித்த கடப்பாடு உள்ளது.

தேசிய பிரச்சினை உக்கிரமடைந்து அதன் மூலமாக கொடுமையான யுத்தம் இடம்பெற்ற வேளையில் உலக நாடுகள் ஒன்றுகூடி இந்தியாவும் சேர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு அதிகமாக உதவிகளை செய்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என்ற செய்தியை அவர்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றுவரை ஒன்றுமே நடைபெறவில்லை. ஆகவே இது குறித்த நியாயமான கோவம் எம்மிடம் உள்ளது. அதன் வெளிப்பாடே இதுவாகும்.

ஆகவே இந்தியாவிற்கும், உல நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் நாம் கூறுவது என்னவென்றால், அரசியல் அமைப்பில் இருக்கும் இந்த சட்டத்தையாவது முதல் கட்டமாக நீங்கள் அமுல்படுத்தி காட்டுங்கள் என கூறுகின்றோம். இந்த கோரிக்கையில் 13ஆம் திருத்தமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மொழி உரிமை, குடிப்பரம்பல் அழிப்பு, தேசிய ஒருமைப்பாடு குறித்தும், முஸ்லிம் மக்களின் மீதான தாக்குதல்கள், இன கலாசார அங்கீகாரம், மலையக மக்களின் குடியுரிமை குறித்தும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையிலும், யுத்தத்தில் ஈடுபட்ட பலர் இன்று அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும்  பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ள நிலையில் அவர்களால் ஆணையிடப்பட்டு சிறு சிறு வேலைகளை செய்த பலர் சிறைக்குள் வாடிக்கொண்டுள்ளனர்.

அவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். 11 இளைஞர்களை கொழும்பில் கடத்தியதாக முன்னாள் கடற்படை தளபதிக்கு, அவர் சம்பந்தமான வழக்கு விசாரணைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என்றால், மிருசிவில் படுகொலையில் ஈடுபட்ட குற்றத்தில் தண்டனை வழங்கப்பட முன்னாள் இராணுவ வீரருக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது. பிரியந்த குமார்விற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை கேட்கும் நீங்கள் இலங்கை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அநியாயம் செய்தவகளுக்கு ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றீர்கள் என்பதே எமது கேள்வியாகும்” என்றார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad முடிந்தால் 13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்திக் காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்