எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு

elle எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதி மிக்க காணிகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின்  முயற்சிகளை முறியடிக்க தம்முடன் இணைந்து  செயற்படுமாறு நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு சந்தர்ப்பமும் உருவாகும்.

மேற்குலக நாடுகளும், சக்திகளும் இலங்கையிலுள்ள எரிபொருள் வளங்களை கொள்ளையிடக் கங்கணம் காட்டித் திரிகின்றன. பொஸ்பேட் உள்நாட்டு உர உற்பத்தியாலையை வைத்துக் கொண்டு உள்நாட்டில் உரப் பற்றாக் குறையைச் சொல்கின்றனர்.

இதனையிட்டுக் கவலையடைகிறேன். இப்போதாவது இந்த நாட்டை எமது கைகளுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாட்டை ஒப்படைத்து, அழிவுகளே இன்று வரை எஞ்சியிருக்கின்றன.

அவற்றுக்கு தொடர்ந்தும் இடமளிக்கக் கூடாது. சுமார் 20 அரச நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன் துறையில் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யப் போகின்றார்கள். அதனால் தமிழ் மக்களும் எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

அண்மையில் கூட தமிழ் மக்கள் சிலர் என்னைச் சந்தித்ததோடு, இலங்கையிலுள்ள மலே பிரஜைகளும் என்னை சந்தித்திருக்கின்றனர். முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைய வேண்டும்.

அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளுக்கு அப்பாற் சென்று மூன்றாவது தரப்பு சக்தி யொன்றை உருவாக்கி அதனூடாக விடுதலைப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கம் தற்போது செயற்படும் விதத்தை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.