நுரைச்சோலை வழமைக்கு வரும்வரை தனியாரிடமிருந்து மின்சாரம்-கஞ்சன விஜேசேகர

இலங்கையின் மின்சார உற்பத்தியின் பிரதான மின் உற்பத்தி நிலையமாக கருதப்படும் நுரைசோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி இன்று செயலிழந்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழமைக்கு வரும் வரை தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றதினால், மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின் தடை நீடிக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

”கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, பெற்றுக்கொள்ளப்படும் ஃபேர்னஸ் எண்ணெய்யை, வெஸ்கொஸ்ட் மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணெயிலுள்ள கந்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றமையினால், அதனூடாக கிடைக்கின்ற ஃபேர்னஸ் எண்ணெய்யை மின் உற்பத்திக்காக பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக நினைக்கின்றேன்” என ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் குற்றச்சாட்டிற்கு, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் சட்ட ரீதியில் பதில் வழங்கும் என   மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்துள்ளார்.