ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில்ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் என இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்.

கேள்வி – நீங்கள் வழக்கறிஞர் என்பதுடன், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றீர்கள். உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை மக்களுக்காகத் தாருங்கள்?

பதில் – அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். அத்துடன் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருக்கின்றேன். மக்கள் சிவிலுரிமைக் கழகம் என்ற இயக்கத்தில் தேசிய செயலாளரில் ஒருவராக நான் இருக்கின்றேன். இந்த இயக்கம் 1976களில் இந்தியாவில் சுதந்திரப்போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜனநாயகம், மனித உரிமைக்காக போராடும் ஒரு இயக்கம். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். நான் ஒரு எழுத்தாளராகவும் இருக்கின்றேன். நான் ‘சோளகர் தொட்டி’ என்ற ஒரு நாவலை எழுதியுள்ளேன். அத்துடன் ‘பெருங்காற்று’ என்ற சிறுகதைத் தொகுப்பு  ஒன்றையும் எழுதியுள்ளேன்.

மனித உரிமை செயற்பாடுகளில் நான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எங்கெல்லாம் மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றதோ அவர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி – நீங்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்கள் இந்திய முகாம்களில் படுகின்ற துன்பங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அவை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில் – ‘ஒரு கடல் இரு கரைகள்’ என்ற சிறுகதை ஆனந்த விகடனில் இரு வாரங்கள் வெளிவந்திருந்தன. அதற்கு எனது நண்பர் மருது அவர்கள் ஒரு ஓவியம் தீட்டியிருந்தார். அந்தக் கதையில் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் உயிர் பிழைப்பதற்காக தப்பித்து தோணியில் வந்த ஒரு வயதான தாயும், மகனும் இராமேஸ்வரம் கரையில்  இருக்கும் முகுந்தராயம் சத்திரம் என்னும் இடத்திற்கு வருகின்றார்கள். அங்கிருந்து அவர்கள் எப்படி இந்தியாவிலுள்ள முகாம்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்பதை என் கதை பேசுகின்றது. முகாம்களுக்கு மாற்றப்படும் முறை என்பது மனித கண்ணியங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறையாக இருந்தது.

போராளிகள் என்று சந்தேகிப்பவர்களை, அவர்கள் கைகளில் காப்புக் கட்டியிருந்தால், அல்லது துப்பாக்கி பிடித்ததற்கான அடையாளங்கள் இருந்திருந்தால், அவர்களை வேறு ஒரு முகாமிற்கு அனுப்பும் நடைமுறை இருந்தது. அந்த மகனின் கையில் துப்பாக்கி பிடித்து மரத்துப் போன அடையாளம் இருந்ததால், அவனைப் போராளி என்று முடிவு செய்து விசாரணையைத் தொடங்குகின்றது தமிழக காவல்துறை. அந்தத் தாயும் மகனும் பிரிக்கப்படுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இந்தியாவில்அந்த மகன் ஏற்கனவே போரினால் பாதிக்கப் பட்டவன்.  தாய் மண்டபம் அகதிகள் முகாமிற்கும், மகன் செங்கல்பட்டிற்கு அருகில் இருக்கின்ற போராளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்கும் மாற்றப்படுகின்றனர். தாய் படுக்கையில் விழுந்து விடுவாள். மகன் முகாமிலிருந்து ஒரு கடிதம் எழுதுவான். தாயே நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். எனக்காக ஒன்று செய். நீ சீக்கிரம் செத்துவிடு தாயே! என்று எழுதுவான். அதுதான் அந்தக் கதையின் இறுதியாக இருக்கும். அது அவலங்களைத் துயரங்களை வேறுபடுத்துகின்ற விடயங்களைச் சொல்கிறது. ஒரு அரசு, உணர்வில்லாமல் நடக்கின்றது. போராட்டக் களத்திலிருந்து வருகின்றவர்களை ஒரு நியாயம் இல்லாமல், மனித முகம் இல்லாமல், போராளி என்று முத்திரை குத்தப்பட்டு அவர்களை கடுமையாக நடத்துகின்ற ஒரு அவலத்தை அந்தக் கதை சொல்கிறது.

அது இணையத்தில் உள்ளது. தேடினால் கிடைக்கும். எனது ‘பெருங்காற்று’ என்ற சிறுகதைத் தொகுப்பிலும் வந்துள்ளது.

அடுத்த கதை பவானிசாகர் முகாமில் ஒரு குழந்தையாக வளர்க்கப்பட்ட சிறுவன். அவன் எதிர்கொள்ளுகின்ற அவலங்கள். அவன் எப்படி கல்லூரியில் படிக்கும் போதும் சரி மற்ற நேரங்களிலும் சரி. ஈழத்திலிருந்து வந்தவன் என்பதால் காவல்துறை போன்றவர்கள் அவனை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றியும், அவன் தனியார் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞனாகப் படிப்பான். ஆனால் அவன் தன்னை ஒரு வழக்கறிஞனாகப் பதிவு செய்ய முடியாது. இந்தியச் சட்டடங்களின்படி இந்தியர்கள் தான் வழக்கறிஞராகலாம். மற்றவர்கள் மாற முடியாது.

இங்கேயே பிறந்த குழந்தைகள் அகதியம் என்ற மோசமான நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவனுடைய தாயும், தகப்பனும் அகதிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். இவர்களும் அகதி என்று சொ்லப்படுகின்றார்கள். பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டு பெற்றெடுக்கின்ற குழந்தைகளும் அகதிகள் என்று சொல்லப்படுகின்ற ஒரு அவலநிலை இந்தியாவில் உள்ளது. மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள்.

அகதிகளைக் கண்ணித்துடன் நடத்தும் எந்தச் சட்டங்களும் இந்தியாவில் இல்லை. சட்ட ரீதியான உரிமையைக் கோர முடியாத நிலையில் ஈழத் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்ற பின்புலத்தில் அந்தக் கதை உருவாக்கப்பட்டது.

அத்துடன் 1916ஆம் ஆண்டு ஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி ‘டைகறிஸ்’ என்ற நாவலை எழுதியுள்ளேன். ஒரு இனப்படுகொலை நடக்கவிருப்பதற்கு முன்னராகவே அவர்களின் அடையாளங்கள் அழிக்கப்படத் தொடங்கிவிடும். இனப்படுகொலைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆர்மீனியர்களின் அடையாளங்கள் அழிக்கப்படத் தொடங்கி விட்டன. வழிபாடுகளைத் தடுப்பார்கள். கல்லறைகளை அழிப்பார்கள். download ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்1916இல் நடந்த ஆர்மீனியப் படுகொலைக்கு நியாயம் எதுவும் கிடைக்காத காரணத்தினால், இன்றுவரை துருக்கி அது போன்றதொரு படுகொலை நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஈழத்தில் எப்படி ராஜபக்ச, கோத்தபயா போன்றவர்கள் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றொழித்து விட்டு, இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மூடிமறைக்கிறார்களோ, அதேபோலத் தான் துருக்கி அரசாங்கமும் இதுவரை செய்துகொண்டிருக்கின்றது. 1916இல் ஆர்மீனியாவில் ஏறக்குறைய 15இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் ஒருவேளை இவர்களுக்கான நியாயம் கிடைத்திருக்குமேயானால், 30 ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப் போரில் நடந்த யூதப்படுகொலை நடந்திருக்க முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும்.

எப்பொழுதெல்லாம் அநீதிக்கு நியாயங்கள் கிடைக்கிறதோ அப்போது தான் அடுத்த அநீதி தடுக்கப்படும். ஈழத்தைப் பொறுத்தவரை 2009 முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்காத போது, உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இதுபோன்ற படுகொலைகள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைத்தான் எனது ஆர்மீனியப் படுகொலை குறித்த ஆய்வும், ‘டைகறிஸ் நாவலில் வருகின்ற கதைகளும் பூடகமான பல விடயங்களைச் சொல்கிறது. அந்த நாவலை உலகத் தமிழர்கள் வாங்கிப் படிக்க வேண்டும். அந்தப் புத்தகத்தின் விலை 550 இந்திய ரூபா.

உலகத்தில் உள்ள வரலாறுகள் எல்லாவற்றிற்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது என்று நான் பார்க்கிறேன். அன்று ஆர்மீனியர்கள் படுகொலைக்கு உள்ளானார்கள். இன்று ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவை எதற்கும் நியாயம் கிடைக்காது விட்டால், வரலாற்றில் எதிர்காலத்தில் மற்றொரு இனம் இதேபோன்ற தொரு படுகொலைக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்ற எச்சரிக்கையையும் அந்த நாவலில் சொல்லியுள்ளேன்.

கேள்வி – பல்வேறுபட்ட நாடுகளில் உலகத் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வழக்கறிஞராக, சிவில் சமூக ஆர்வலராக, ஒரு எழுத்தாளனாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் – நாம் ஒரு பரந்துபட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக இருப்பதாக நான் கருதுகின்றேன். ஒரு நீண்ட நெடிய வரலாறு நமது சமூகத்திற்கும், மொழிக்கும் இருக்கின்றது. உலகத்தின் தாய்மொழி என்று அதனை சொல்ல முடியும். வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் நாம். நம்முடைய நீண்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு நாம் சொந்தக்காரராக இருக்கின்றோம். உலகில் நாம் ஒற்றுமையான ஆதிக்குடிகளாக இருக்கின்றோம் என்ற ஒரு பரந்த நேசத்துடன், உலகத்தில் உள்ள எல்லா சமூகத்தையும் அரவணைக்கின்ற போக்கோடும், மாந்த நேயத்தை முன்னெடுக்கின்ற போக்கையும் கொண்டு செல்கின்றோம். அந்த வகையில் உலகத்தின் எந்த மூலையில் நாம் இருந்தாலும்கூட, எவ்வகையில் பிரிந்திருந்தாலும், எவ்வகையான வாழ்க்கைச் சூழலில் இருந்தாலும்கூட நம்முடைய தாய்மொழியாகிய தமிழ் நம்மை ஒன்று சேர்ப்பதாக இருக்கின்றது. எனவே நாம் ஒரு மிகச்சிறந்த ஆதித்தாயினுடைய குழந்தைகள்.

நம்முடைய மொழி என்பது அதுபோன்றதொன்று. நாம் ஒரு விசாலப் பார்வையால் இந்த உலகை விழுங்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். நமக்கு அநீதியை செய்தவர்களுக்குக்கூட நாம் நியாய ரீதியான, சட்ட ரீதியான தீர்வுகளுக்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் உலகத்தின் உச்சபட்சமான வீரத்தை காட்டிய சமூகம் நம்முடைய சமூகம். ஆனால் நம்மீது உலகின் பல நாடுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலால் நாம் பின்னடைவை சந்தித்த போதும், இந்த உலகத்தில் மானுடம் வெல்லும் என்ற அளவில் நமக்கான நியாயங்கள் இந்த உலகில் கிடைக்கும். அதற்காக நாம் தொடர்ந்து போராடுவோம். நாம் நம்முடைய அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, நம்டைய அடையாளங்களையும், நியாயங்களையும் கோருவதற்காக தொடர்ந்து இடைவிடாத ஒரு போராட்டத்தை தமிழர்கள் என்ற அளவிலே முன்னெடுப்போம். அதற்காக உலகத்தில் உள்ள எல்லா இனங்களையும், எல்லா அரசுகளையும் பெற்று, நாம் நம்முடைய அடையாளங்களைப் பாதுகாப்போம்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்