சீன – தமிழர் உரையாடல் வளர்ச்சியிலேயே ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் இலகுவில் வெல்லப்படலாம்

இலக்கு மின்னிதழ் 139இற்கான ஆசிரியர் தலையங்கம்

தலையங்கம் 2 சீன – தமிழர் உரையாடல் வளர்ச்சியிலேயே ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் இலகுவில் வெல்லப்படலாம்

இலங்கைத் தீவில் சீனா தனது இறைமையுள்ள பகுதிகளை உருவாக்கப் பொருளாதார வளர்ச்சிக்காக அனுமதிக்கிறோம் என்ற நியாயப் படுத்தலுடன், சிறீலங்கா, பாராளுமன்றச் சட்டவாக்கங்கள் மூலம் அனுமதிக்கிறது.

இருதரப்பு இணக்க உடன்பாட்டு வழியான அனைத்துலக உடன்படிக்கை முறைமை களுக்கு ஏற்பச் செய்யப்படும் நாடுகளுக்கு இடையிலான உடன் படிக்கையாக அல்லாமல், சீனத் தரப்பு நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தரப்பு அனைத்துலக உடன் படிக்கைகளைச் சிறீலங்கா தானே விரும்பிச் செய்கிறது.

இதனால் இலங்கைத் தீவில் சீனாவின் இருப்பையும், சீன இறைமையின் செயற் பாட்டையும் அனைத்துலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்பதற்கான, அனைத்துலகச் சட்ட முறைமைகளைச் சிறீலங்கா இயல்பாகவே தடைசெய்து கொள்கிறது.

இந்நிலையை சிறீலங்கா விரும்பி உருவாக்குவதன் வழி, சீனாவின் குடியேற்ற நாடாக இலங்கைத் தீவை சிறீலங்கா தானே விரும்பி மாற்றியமைத்து வருகிறது.

இதனால், கோவிட்டுக்குப் பின்னரான உலகின் புதிய ஒழுங்கு முறையில், சீனா சிறீலங்காவைத் தளமாகக் கொண்டு, இந்துமா கடல் மேலான இந்தியப் பிராந்திய மேலாண்மையையும், அமெரிக்க மேலாண்மையையும் மாற்றி அமைத்துத், தனது மேலாண்மையை வலுப் படுத்தும் என்பது உலக அரசியலில் திகைப்பும், தகைப்பும் தரும் விடயமாக உள்ளது.

சீனாவின் இறைமையை இலங்கைத் தீவில் உருவாக்கிப் பாதுகாத்தல் என்பது, இன்றைய  சிறீலங்கா அரசாங்கத்திற்குச், சிங்களவர் தமிழர் உள்ளடங்கிய இலங்கை மக்களின் இறைமையைப் பேணிப் பாதுகாத்தல் என்பதை  விட அதி முக்கியமான தேவையாக ஏன் மாறியுள்ளது என்பது, ஆராயப்பட்டாலே, சிறீலங்கா சீனாவின் குடியேற்ற வாத நாடாக மாறி வருவதைத் தடுப்பதற்கான அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவான ஒரு முறைமையை உருவாக்கலாம்.

இதற்குச் சுருக்கமான பதில் ஈழத் தமிழர்களின் இறைமையை ஆக்கிரமிக்கவே சீன இறைமையை சிறீலங்கா ஏற்று வருகிறது என்பதேயாகும். 1950களில் தொடங்கப்பட்ட சிங்கள ஆட்சி யாளர்களின்  இந்தத் தந்திரோபாயம் இன்று வரை தொடர்கிறது.

மேற்குலகின் பிரித்தானியாவின் நெருக்கமானவராக மலையகத் தமிழர், ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்காமலே, பிரித்தானியாவை இலங்கைக்குச் சுதந்திரம் வழங்க வைத்த அதே சேனநாயக்காவே, கொரிய யுத்தத்தில் சீனா இரப்பர் வழங்கலைச் செய்வதற்கு இலங்கை விமானத் தளத்தை கொடுத்து, மேற்குலக எதிர்ப்பு அரசியலையும் தொடங்கினர். சேனநாயக்க குடும்ப ஆட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் என்றுமே இந்த இரட்டை அரசியல் போக்கு தொடர் கதையாக உள்ளது.

கேம்பிரிஜ்ஜில் பட்டதாரியான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்காவே ரஸ்ய சார்பு ஆட்சியாக தனது ஆட்சியை மாற்றினார். அவரின் மனைவி சிறிமாவோ பண்டார நாயக்காவே இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துச் சீன சார்பு நாடாக சிறீலங்காவை உருவாக்கினார்.

இன்று ராசபக்ச குடும்ப ஆட்சியாளர்களில்,  அண்ணன் மகிந்த இந்திய இணக்கப் பாட்டாளராகவும் தம்பி பசில் அமெரிக்கக் குடியுரிமையுடனான சிறீலங்காவின் நிதி அமைச்சராகவும், அரச தலைவர் கோத்தபாய சீனாவின் இறைமை ஏற்பாளராகவும் திகழ்ந்து, அனைத்து நாடுகளின் ஆதரவையும், ஈழத் தமிழர்களின் இறைமையை இல்லா தொழிக்கும் தங்கள் ஈழத் தமிழின அழிப்பு ஆட்சிக்குப் பெற்று வருகின்றனர்.

இது சுருக்கமான இலங்கையின் அரசியல் எதார்த்தம்,  ஈழத் தமிழரின் இறைமையினை உலக நாடுகளும், உலக அமைப்புக்களும், ஈழத் தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அங்கீகரிக்காத வரை, சிறீலங்காவின் ஆட்சியாளர்கள், உலகின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலான வற்றைச் செய்யும் ஆட்சியாளர்களாகத் தொடர்ந்து கொண்டு இருப்பார்கள்.

இந்த உண்மையை ஈழத் தமிழர்களின் இறைமைக்கு அச்சுறுத்தலாகக் கறுப்பு யூலை இனஅழிப்பு ஏற்படுத்தப் பட்ட 38ஆவது ஆண்டின் அதே யூலை மாதத்து கறுப்பு யூலை வாரத்தில் உலகுக்குத் தெளிவு படுத்துவது உலகத் தமிழினத்தின் தலையாய கடமையாக உள்ளது.

அதே வேளை இலங்கையில் சீனாவை எதிர் கொண்டு ஈழத் தமிழர்கள் வாழ வேண்டுமென்ற அரசியல் எதார்த்தம் சிறீலங்காவால் உருவாக்கப்பட்டு விட்டது.  இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் “இலங்கையின் பன்முக பின்புலத்துடன் சீனாவின் ஊடாட்டத்தை நோக்குகையில், நாட்டின் இனத்துவ மற்றும் மத பல்வகைமையை அது அலட்சியம் செய்வது போன்று தோன்றுகிறது” எனக் கூறிய கருத்து முக்கியமான எச்சரிப்பாகின்றது.

அவர் தொடர்ந்து “தமிழர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க சீனர்கள் விரும்பினால் நாங்கள் வேறுபட்ட இன மத குழுக்களைக் கொண்ட நாட்டவர் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் முற்றிலும் சிங்கள பௌத்த நாட்டவரல்ல. என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் வெறுமனே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அக்கறையுடன் சம்பந்தப் பட்டதல்ல. தமிழர்கள் சீனாவை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் என்றால், எங்களை அவர்கள் இலங்கையர்கள் என ஏற்றுக் கொள்கிறார்களா என்றும் தெரிய வில்லை” எனக் கூறியுள்ளார்.

இதன்வழி சீனர்கள் குறித்த தமிழரின் அறிவு வளர்க்கப் பட வேண்டும் – சீனர்களுக்கு தமிழர்களின் இலங்கையில் உள்ள இருப்புநிலை குறித்த அறிவு வளர்க்கப்பட வேண்டும். இந்த சீன தமிழர் உரையாடலின்மையே சீனா தமிழர்களையும் தமிழர்கள் சீனாவையும் எதிர் கொண்டு வாழ்வதற்கான தடையாக உள்ளது என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். எனவே சீன – தமிழர் உரையாடல் தாயகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர்களால் முன்னெடுக்கப் பட வேண்டும். இந்த உரையாடலின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர் அரசியல் உரிமைகளை வென்றெடுத்தல் இலகுவாக்கப் படலாம் என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021