சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்- கண்டுகொள்ளாத இந்திய அரசு

சர்வதேச அகதிகள் நாள்

சர்வதேச அகதிகள் நாள்

வரும் 20ம் திகதி   உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. “எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை” என்பது ஐ.நா.வின் அகதிகள் தினத்தின் முழக்கமாகும்.

இதில் இந்தியாவிலும் பல்வேறு காலங்களில் அகதிகள் வந்துள்ளனர். இந்திய அரசும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது. வங்கதேசம், திபெத், இலங்கை, மியான்மர் எனப் பல்வேறு நாட்டு அகதிகள் இந்தியாவில் தற்போது உள்ளனர். ஆனால் அகதிகள் பாதுகாப்பிற்கென்று இந்தியாவில் தனியான சட்டங்கள் எதுவும் கிடையாது. பொதுவாக தெற்காசிய நாடுகள் எங்குமே அகதிகளுக்கான சட்டங்கள் இல்லை  என்பதும் உண்மை.

தமிழகத்தில் சுமார் 50,000  இற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கூடுதலாகப் பேசவேண்டிய தேவையும் உள்ளது.

“இந்தியாவில் எந்த வகை அகதிகளுக்கும் எந்தவித உரிமையும் இல்லை. இந்திய அரசு அகதிகள் தொடர்பான எந்தப் பன்னாட்டு உடன்படிக்கையிலும் ஒப்பமிடவில்லை. அகதிகள் தொடர்பான உள்நாட்டுச் சட்டமும் கிடையாது. அரசின் பார்வையில் அகதிகள் அனைவரும் சட்டப் புறம்பான குடியேறிகளே. இந்தியா அகதிகள் தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்று மதிக்கவும் உள்நாட்டுச் சட்டம் இயற்றவும் கோரிப் போராட வேண்டும்” என என்பது நீண்டகாலமாக உள்ள கோரிக்கையாக உள்ளது” என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர்   தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு ஜூன் 09ம் திகதி திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள்  தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை  நடத்தியிருந்தனர்.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் இந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தில் தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் இந்தப் போராட்டத்தின் போது,  சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழரை சித்திரவதை செய்வது ஏன்? கருணை அடிப்படையில் எங்களை எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவிடுங்கள்.   சிறு சிறு குற்ற வழக்குகளில் தீர்வு இன்றி தண்டனைக் காலத்திற்கும் மேலாக சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளோம் போன்ற கோசங்களையும் அவர்கள் எழுப்பியிருந்தனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் தூக்கமருந்து சாப்பிட்டும், தங்களை கத்தியால் அறுத்துக்கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்களும்  நடைபெற்றன.

இந்த போராட்டத்தையடுத்து எல்லை கடந்து இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்கு முடிவுற்று தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஏனையவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 20ம் திகதி மீண்டும்  சிறப்பு  முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து தொடர்கின்றனர். இதில் சிலரின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 20.05.2022 அன்று ஆரம்பித்த  நம்   உண்ணாநிலைப் போராட்டம் 23வது நாளை எட்டியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பத்துப் பேரோடு தொடங்கிய போராட்டம், தற்பொழுது 22 பேராக  அதிகரித்துள்ளது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்கள். அதில் இரண்டு பேரின் நிலை மிகமிக மோசமாக உள்ளது. நாங்கள் தமிழக  முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கை, சிறப்பு முகாமில் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலங்கள்  தண்டனை காலமாக கருதப்பட  வேண்டும். இங்கு இருப்பவர்களை ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும்”என்பதே என்றனர்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாம் அகதிகளின் போராட்டம் மற்றும் அவர்களின் விடுதலையின் தாமதம் குறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தை அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்று கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்கள், தமிழகத்தை நோக்கி உயிரை காப்பதற்காக வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களை இந்திய ஒன்றிய அரசினுடைய அதிகாரிகள், அவர்கள் மீது சந்தேகப்பட்டு சில நபர்களை சிறப்பு முகாம்களில் அடைத்தார்கள்.

குறிப்பாக பூவிருந்தவல்லி, செங்கல்பட்டு, செய்யாறு, திருச்சி, இராமநாதபுரம், போன்ற இடங்களில் அவர்கள் சிறப்பு முகாம்களை அமைத்தார்கள். தற்போது பூவிருந்தவல்லி, செங்கல்பட்டு, செய்யாறு போன்ற சிறப்பு முகாம்கள் மூடப்பட்டன. திருச்சியிலும், இராமநாதபுரத்திலும் சிறப்பு முகாம்கள் இன்றும் இயங்கி வருகின்றன.

இந்த இரண்டு முகாம்களிலும் அதிகமாக திருச்சி சிறப்பு முகாமில்தான் அதிகமான ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

இது திருச்சி மத்திய சிறையின் வளாகத்திற்கு உள்ளேயே இருக்கிறது. இன்று சந்தேகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கின்ற, இந்த மக்களை விசாரணை நடத்தி அவர்களை தங்களுடைய குடும்பத்தோடு இணைந்து வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு இங்குள்ள மக்கள் தொடர்ந்து பல்வேறு காலகட்டத்தில் இந்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

தற்போது நடைபெறுகின்ற இந்த உண்ணாவிரத போராட்டம் கடந்த மாதம் மே இருபதாம் திகதி தொடங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது.

இதில் ஆறு நபர்கள் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு நபர்கள், தொடர்ந்து இதை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு மேலும் ஆறு நபர்கள் சேர்ந்து பத்து நபர்கள் தொடர்ந்து இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றிய அரசு இதை பற்றி எந்தவித கவலையும் படாமல் செவிடன் காதில் சங்கு ஊதியது போல, இருக்கிறது. ஒரு அரசிடம் இருக்கக்கூடிய அமைப்புகளை பயன்படுத்தி இந்த மக்கள் குற்றம் புரிந்தவர்களா? இல்லையா? என்று ஒரு தீர்ப்பு வழங்கி அவர்களை செய்வதற்கு இந்த அரசு தயாராக இல்லை என்று சொன்னால், உண்மையிலேயே இந்த அரசு தமிழர்களை ஒரு பாராமுகத்தோடுதான்அணுகுகிறது.

பிரச்சனைகளை அன்றன்றைக்கு தீர்த்து அவர்களுக்கு ஒரு எதிர்கால வாழ்க்கையை உருவாக்கி கொடுக்காமல் அழிப்பது மனித உரிமை மீறலாகும்.

இதனை ஒன்றிய அரசு திட்டமிட்டு நடத்துகிறது. எந்த விசாரணையும் நடத்தாமல் இருபது ஆண்டுகளாக, முப்பது ஆண்டுகளாக ஒரு சிறையில் இருப்பது மனித குலத்திற்கு எதிராக செய்கின்ற மிகப் பெரிய குற்றமாகும். இது ஒரு இனப்படுகொலையும் ஆகும். ஏனென்றால், தன்னிடம் இருக்கக்கூடிய அமைப்புகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஒரு நீதி வழங்குவதற்கு தயங்குவதும், மறுப்பதும், ஒரு இனப்படுகொலைக்கு சமமாகும். அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

நடுவண் அரசினுடைய வெளியுறவு கொள்கையில் தெளிவாக இருந்தால் இவர்கள் மீது சந்தேகத்தை தீர்த்து தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி கொடுக்க வேண்டும்.

இந்த மக்களை குடும்பத்திலிருந்து பிரித்து வைத்து ஒரு சுகம் காணுவது மகிழ்ச்சி அடைவது, மனித இனத்திற்கு விரோதமான ஒரு செயலாகும். ஆனால் இதைத்தான் ஒன்றிய அரசு திட்டமிட்டு செயல்படுவதை பார்க்கிறோம்.

ஏனென்றால், இதெல்லாம் கண்டுகொள்வதே கிடையாது. இதையெல்லாம் தீர்க்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படுவது கிடையாது.

 ஆகவே அப்படிப்பட்ட ஒரு மனநிலையோடு வாழ்வதுதான் இந்த ஒன்றிய அரசினுடைய நோக்கமாகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பல்வேறு இயக்கங்களும் தொடர்ந்து இதனை வன்மையாக கண்டிக்கின்றன. இதனை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே ஒன்றிய அரசு தயவுசெய்து இதில் கவனம் செலுத்தி உடனடியாக அந்த மக்களை விடுவிப்பதற்கு வேண்டிய வழிமுறையை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்“ என்று குறிப்பிட்டுள்ளது.

Tamil News