இலங்கை-கல்கமுவவில் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல்

எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கல்வீச்சு

கல்கமுவ கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் கற்களால் தாக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக அதிக நேரம் வரிசையில் காத்திருந்த போதும் எரிபொருள் தீர்ந்து விட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு சிறிதளவு எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளதாக நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், வரிசையில் நின்றவர்கள் மீதமுள்ள அனைத்து எரிபொருளையும் கேட்டுள்ளனர்.

கடும் வெயில் காரணமாக, அந்தக் கும்பல் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதனைத் தடுக்கச் சென்ற காவல்துறையினரால் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அட்டன் நகரில் எம்.ஆர். நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு பின்னர் குறித்த எரிபொருள் நிலையத்துக்கு இன்றைய தினம் பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை முதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெற்றோலை பெறுவதற்கு பலர் இரவு – பகலாக வரிசைகளில் காத்திருந்த நிலையில், இன்று திடீரென வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் வரிசைக்குள் புகுந்து பெற்றோல் பெறுவதற்கு முயற்சித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்களிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Tamil News