எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி – சிறிமதன்

IMG 20210807 WA0029 எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி - சிறிமதன்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.

கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொது முடக்கத்தால் முடங்கிப் போயின.

கிராமம், நகரம், வசதி படைத்தவர்கள், ஏழைகள் என 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல்
உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக்கியுள்ளது.

கல்வி கற்கும் முறைகளில் காலந் தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. கற்றல், கற்பித்தல் எனும் நேரடி வகுப்பறை நிகழ்வில் ஆசிரியரும் மாணவரும் இணைந்து செயல்படுவர். இந்நிலை இன்றைய நோய் தொற்று சூழலில் கல்வி இணைய வழியில் கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தகவல் தொழில் நுட்பப் பெரு வளர்ச்சியால் உலகமே ஒரு சிறிய கைப்பேசிக்குள் அடங்கி விட்டது எனலாம்.

தற்போது நம் நாட்டில் பாடசாலை கல்வி செயற்பாடுகள் மெய்நிகர் வழியூடாக நடை பெறுகின்றது. இவ் கல்வி முறை வசதி படைத்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பயன்படும் அதே வேளை இன்னொரு பக்கத்தில் ஏழை மாணவர்களின் கல்வி மறுக்கப்படுவதாக அமைகின்றது. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வி பெறும் வாய்ப்பில் ஏற்றத் தாழ்வுகள் உருவாகியுள்ளது.

இணையதளம் மூலம் கல்வி கற்பது கல்வியில் புதிய போக்காக உருவெடுத்து இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது எப்படிப்பட்டதாக இருக்கும்?

பொருளாதார ரீதியாக பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ள ஒரு நாட்டில்  இப்படிப்பட்ட தவறான அணுகு முறைகள் மாணவர்களுக்கு வெவ்வேறு அனுபவங்களை உண்டாக்கலாம்.

இலங்கையில் அதிகமான மாணவர்களுக்கு ஸ்மாட் கைபேசிகளும் இணையதள இணைப்பு இல்லாத சூழலில் இணையம் வாயிலாக கல்வி கற்பது என்பது நோய்த்தொற்று பரவலுக்கு பிந்தைய உலகில் எந்த அளவுக்கு மாணவர்களை சென்றடையும் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

மக்கள் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்காலக் கல்வியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு தேவையான அடிப்டை தேவைகளாக இணையதளத் தொடர்பு, கணினி அல்லது ஸ்மாட் போன் முதலான வசதிகள் தேவையாகிறது.

அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு ஏழைக் குடும்பத்தால் ஸ்மாட் கைபேசிகளும் அதற்கான இணைய கொடுப்பனவுகளையும் எவ்வாறு செலுத்த முடியும்

ஸ்மாட் தொலைபேசி எல்லா மாணவர்களிடம் இருக்காது. அப்படியே இருந்தாலும் இணைய இணைப்பு எல்லா நேரமும் கிடைக்காது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களால் இணைய வழியில் கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. அதனால் கல்வியில் ஏற்றத் தாழ்வு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. ஸ்மாட் தொலைபேசி இல்லாத காரணத்தால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்யும் சூழல் தற்போது நடந்து வருகிறது. உலகில் 82.6 கோடி மாணவர்களிடம் கணினி வசதி இல்லை, 70.6 கோடி மாணவர்களுக்கு இணையதள வசதி இல்லை என்ற யுனெஸ்கோவின் அறிக்கை, இணையவழி கல்விக்கான சமத்துவ மின்மையைக் குறிக்கிறது.

கொரோனா நோய் தொற்றால் நாடு முடங்கி போயிருந்தாலும் கல்வி புலத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு இவ் காலம் பொற்காலமாகவே இருக்கின்றது தனியார் வகுப்புக்கள் என்ற போர்வையில் சில ஆசிரியர்கள் பாடசாலையில் தம்மிடம் கல்வி கற்கும் மாணவர்களை பிரத்தியோக மெய்நிகர் வகுப்புக்களில் பங்குபற்றுமாறு அவர்களை கட்டாயப்படுத்துவதுடன் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் அதிக கட்டணங்களை கொடுத்து இவ் இணைய வகுப்புக்களில் பங்குபெறச் செய்கின்றனர். ஆனால் ஏழை மாணவர்கள் பணம் இன்மையால் தங்கள் கல்வியை கற்க முடியாத சூழலில் இருக்கின்றார்கள்.

கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். ஆனால் இன்றைய சூழலில் கல்வி ஏழைகளுக்கு  எட்டாத உயரத்தில் உள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021