Home செய்திகள் மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு

மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பு: மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்கைக்குடா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலை மூலம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் நிலையேற்படும் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா பகுதியில் ஆடைத் தொழிற்சாலைகளுக்கான நூல் சாயமிடும் தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலீட்டு வலயம் என்ற பெயரில் இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த சாயமிடும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த தொழிற்சாலை இந்தியாவிலேயே அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையின் பல பகுதிக்கும் கொண்டுசெல்லப்பட்டு அங்கும் அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதியாக மட்டக்களப்பில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்ற போதிலும் அவையனைத்தையும் தாண்டிய பாரிய ஆபத்துகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் சாயத்தினை சுத்திகரிக்கமுடியாது கடலுடன் கலக்கும் நிலையேற்படும் என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்பரப்பு முற்றாக பாதிக்கப்படும் நிலையேற்படுவதுடன் மீனவர்கள் தொழில் இழக்கும் நிலையேற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு தேவையான நீர் உன்னிச்சை குளத்திலிருந்தே பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இவ்வாறான தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கப்படும் போது பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை மாவட்டம் எதிர்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த தொழிற்சாலை கழிவுகள் குடிநீரையும் மாசுபடுத்தும் நிலையேற்படுவதுடன் எதிர்காலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் இப்பகுதி மக்கள் உள்ளாகும் நிலையேற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version