பெண்களின் தொடர் போராட்டம் எதிரொலி: ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும்  வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப்அணியவில்லை என்று கூறி, மாஸா அமினி(22) என்ற இளம்பெண்ணை அறநெறி  காவல்துறையினர் கடந்த செப்டம்பர் 13-ம் திகதி கைது செய்து துன்புறுத்தியதில் அவர் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணியமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க  காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

மேலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அறநெறி காவல் துறையை ஈரான் அரசு இரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.