இந்தியத் தூதுவருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

இந்தியாவின் உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோருடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போதைய இந்திய உதவித் திட்டத்தினூடான வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கிழக்கிலுள்ள இந்திய நிறுவனங்கள், தமது நலன்புரிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கிழக்கிலுள்ள நலிவடைந்த மக்களுக்கு வழங்க இந்தியத் தூதரகம் உதவி செய்ய வேண்டு​மென்று இதன்போது ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

மேலும், Alliance Air சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு விமான நிலையங்களுக்கு நீடிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தைப் போன்று கிழக்கிலும் இரயில் பாதையை மேம்படுத்துவதற்கும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கிழக்கில் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.