துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.