Home ஆய்வுகள் தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

674 Views

துரைசாமி நடராஜா

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக் கட்ட பங்களிப்பினை நல்குகின்ற பெருந்தோட்டத் தொழிற்றுறை, இன்று புறக்கணிக்கப் பட்ட நிலையில் இருந்து வருவது வருந்தத்தக்க ஒரு விடயமாகும். இந்நிலைக்கு நிறுவனங்களின் ஆதிக்கம் ஒரு புறமிருக்க கொரோனாவின் மேலெழும்புகை  போன்ற சமகால சூழ்நிலைகளும் வலுச் சேர்த்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையின் இதயத்தைப் போல ஒரு காலத்தில் பெருந்தோட்டத் தேயிலைத் தொழிற்றுறை விளங்கியது. அதிகமான பரப்பில் தேயிலை உற்பத்தி இடம்பெற்ற நிலையில், அதிகமான தொழிலாளர்களும் இத்தொழிற்றுறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுழைத்து வந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும். அந்நியச் செலாவணி உழைப்பில்  தேயிலையின் வகிபாகம் கணிசமாகவே இருந்து வந்துள்ள போதும், அண்மையில் அதில் ஒரு வீழ்ச்சிப் போக்கினையும் காண முடிகின்றது. 1959 இல் அந்நிய செலாவணி உழைப்பில் 59.6 வீதத்தையும், 1974 இல் 39.1 வீதத்தையும், 1987 இல் 25.9 வீதத்தையும், 1990 இல் 24.9 வீதத்தையும் தேயிலை கொண்டிருந்தது. இவற்றில் மலையகத்தின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. எனினும் ஆடைத் தொழிற்றுறை, சுற்றுலாத் துறை என்பவற்றின் மேலெழும்புகை தேயிலையின் வருமானத்தில் வீழ்ச்சிப்  போக்கினை ஏற்படுத்தி இருந்தமையும் தெரிந்த விடயமேயாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை விளை நிலங்கள் முன்னதாக அதிக பரப்பினைக் கொண்டதாக இருந்தது. எனினும் விளைநிலப் பரப்புகள் படிப்படியாக கீழிறங்கி இருந்தன. அபிவிருத்தி என்னும் போர்வையில் பெருந்தோட்டக் காணிச் சுவீகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்களின் தாபிப்பு, இனவாதத்தை மையப்படுத்தி தமிழர்களின் இருப்பையும் செறிவையும் சிதைக்கும் காய் நகர்த்தல்கள், அடையாளத்தை மழுங்கடிக்கும் ஏற்பாடுகள் இவற்றின் காரணமாக அநேகமான பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் பறிபோயுள்ளன.

இதனால் தேயிலைத் தொழிற்றுறை மலையகத்தில் வீழ்ச்சி கண்டு வருவதோடு தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைவடைந்துள்ளன. சில தோட்டங்களில் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களே வேலை வழங்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையானது தொழிலாளர்களின் வருவாயில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. இதேவேளை தேயிலைத் தொழிற்றுறை முன்மாதிரி யானதாகவும், கவர்ச்சியானதாகவும் இல்லாததன் விளைவாக இளைஞர், யுவதிகள் இத்தொழிற்றுறையை நாடிச் செல்லாது ஒரு புறக்கணிப்பு நிலையில் இருந்து வருவதையும் கூறியாக வேண்டும். இந்நிலை தொடருமானால், இத்துறையின் எதிர் காலம் மேலும் மோசமடையக் கூடும் என்றும் நம்பப் படுகின்றது.

1980ஆம் ஆண்டில் தேயிலைப் பெருந் தோட்டங்களில் 541,971 தொழிலாளர்கள் பதிவு பெற்ற தொழிலாளர்களாக இருந்தனர். இந்நிலை 1990 இல் 408,784 ஆகவும், 2000 இல் 277,886 ஆகவும், 2010 இல் 212,826 ஆகவும் இருந்தது. 2015 இல் 158,322 ஆக இத்தொகை மேலும் வீழ்ச்சி கண்டது. தேயிலைத் தொழிற்றுறையில் நிலவிய கெடுபிடிகள், கம்பனியினரின் அடக்கு முறைகள், உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை போன்ற பல காரணிகள் இத்துறையில் இருந்தும் தொழிலாளர்கள் விலகிச் செல்வதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன. தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் கடந்த காலத்தில் தொழிற் சங்கங்கள் பலவும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தன.

இதனடிப்படையில் பல்வேறு இழுபறிகளின் பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. எனினும் ஆயிரம் ரூபா நாட்சம்பளமாக பெற்றுக் கொடுக்க ப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. தோட்டங்களில் இதுகாலவரை இடம்பெற்று வந்த தொழிலாளர்சார் நலனோம்பு நடவடிக்கைகள் பலவும் கேள்விக் குறியாகியுள்ளன. நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலைத் கொழுந்தின் அளவினை கூட்டு ஒப்பந்தத்தையும் மீறி சில தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக அதிகரித்துள்ளன. இது தொழிலாளர்களுக்கு ஒரு பேரிடியாக இருந்து வருகின்றது.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிற்றுறை இன்று சகல மட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சிறு தோட்டத் தேயிலை  உற்பத்தி யாளர்களுக்கு கணிசமான சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. உரமானியங்கள், கிருமிநாசினிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சலுகைகள், தேயிலைத் தொழிற்றுறை அபிவிருத்திக்கான கடன் வசதிகள், தேயிலைக்கான கணிசமான விலை எனப்பலவும் இதில் உள்ளடங்கும். எனினும் பெருந்தோட்டங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே வழிநடாத்தப்படுகின்றன.

இத்தகைய பாராமுகங்களினால் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி  மெதுமெதுவாக கீழிறக்கம் கண்டு வருகின்றது. இதனடிப்படையில் நோக்குகையில் 1995 இல் மொத்தமாக 280.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி இலங்கையில் இடம்பெற்ற நிலையில் பெருந்தோட்டங்களில் 168.8 மில்லியன் கிலோ கிராமும், சிறு தோட்டங்களில் 111.3 மில்லியன் கிலோ கிராமும் என்று தேயிலை உற்பத்தி இடம் பெற்றிருந்தது. 2005ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்களில் 111.5 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி இடம் பெற்ற நிலையில் சிறு தோட்டங்களில் 205.7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி இடம் பெற்றிருந்தது.

இதேவேளை 2017 இல் பெருந்தோட்டங்களில் 104 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தியும், சிறு தோட்டங்களில் 244 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தியும் இடம் பெற்றது. இவ்வாறாக சிறு தோட்டங்கள் இலங்கையின் தேயிலை உற்பத்தியில் ஆழமாக கால் பதித்துக் கொண்டுள்ள நிலையில், பெருந்தோட்டங்கள் சீந்துவாரின்றி நாதியற்ற நிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் பெருந்தோட்டத் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சமூகக் கட்டமைப்பு

இதேவேளை தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சமூகக் கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், தபால் ஊழியர்கள் என்று பல தொழிற்றுறைகளிலும் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஈடுபட்டு வருகின்றனர். இதைவிட பிரபல வர்த்தகர் களாகவும் நகர்ப்புறங்களில் இச்சமூகத்தினர் கொடி கட்டிப் பறக்கின்றனர். இப்படியெல்லாம் பார்க்கையில் இவர்களின் சமூகக் கட்டமைப்பு வேகமாக மாற்றத்திற்கு உள்ளாகி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இது பேருந்தோட்டத் தேயிலைத் தொழிற்றுறைக்கு பாரிய ஒரு அடியாகும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

 இதேவேளை சமகாலத்தில் கொரோனாவின் ஆதிக்கம் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. சுமார் நாற்பத்தைந்து இலட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருபது கோடிக்கும் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தொழிற்றுறைகள், பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை என்பவற்றில் கொரோனா கடும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையினை கொரோனா அதிகமாகவே பாதித்துள்ளது.

இதனடிப்படையில் மலையக மக்கள் கொரோனாவால் அதிகரித்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி, சுகாதாரம், மருத்துவம், சமூக நிலைமைகள் எனப் பலவும் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. ஏற்கனவே இத்துறைகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த நிலையில் சமகால நிலைமைகள் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த ஒரு நிலைக்கு தள்ளி இருக்கின்றது. இவற்றில் இருந்தும் மேலெழும்புவதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்பது தெரியாதுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு

கொரோனாவின் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. கூடித் தொழில் புரியும் நிலைமையில் உள்ள தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன. எனினும் கம்பனியினரோ அல்லது நிர்வாகமோ தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பினை கருத்தில் கொள்வதாக இல்லை. இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு கருதி முகக் கவசம், மேலங்கிகள், கையுறைகள் உள்ளிட்ட பல உபகரணங்களையும் கம்பெனிகளும் தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலை மேலெழுந்துள்ளது. இதிலிருந்தும் இவர்கள் விலகிச் செல்ல முடியாது. உற்பத்தி மற்றும் இலாபம் என்பவற்றினை மட்டுமே மையப்படுத்தி தொழிலாளர்களை நகர்த்திச் செல்வதை விடுத்து அவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி என்று பல விடயங்கள் தொடர்பிலும் இவர்கள் உரிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

இது ஒரு புறமிருக்க கொரோனா தொற்றினால் பல தொழிலாளர்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில தொழிலாளர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இன்னும் பல தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கு உணவு மற்றும் ஏனைய உதவிகள் உரியவாறு பெற்றுக் கொடுக்க ப்படவில்லை எனவும் இதனால் இவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கமும் நிர்வாகமும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதோடு கூட்டுறவு சங்க பணத்தில் இருந்து ஒரு தொகையினையும் பாதிக்கப்பட்டவர்களின் நன்மை கருதி வழங்க வேண்டும் என்றும் மேலும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.

இறுதியாக நோக்குகையில் புறக்கணிப்பு நிலைமைகள், கொரோனாவின் சமகால போக்குகள் என்பன பெருந்தோட்டத் தொழிற்றுறையையும், மக்களையும் அதளபாதாளத்தில் தள்ளி வருகின்றன. இவற்றில் இருந்தும் இவர்களை மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வதன் ஊடாக பலவித நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

 

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version