Tamil News
Home ஆய்வுகள் நெருக்கடியை உருவாக்கப்போகும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு-அகிலன்

நெருக்கடியை உருவாக்கப்போகும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு-அகிலன்

“கடன் குண்டு 2026 இல் வெடிக்கும்” என எச்சரித்திருக்கின்றாா் உதய கம்மன்பில. சா்வதேச நாயண நிதியத்தின் கடனுதவி தொடா்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை அவா் விடுத்தாா்.

நாணய நிதியத்தின் கடனுதவியுடன் பொருளாதாரப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பினா் காட்டிக்கொண்டிருக்கும் நிலைமையில், உதய கம்மன்பில் இவ்வாறு தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.  உண்மையில் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது, மற்றொரு குண்டு வெடிக்கத்தான் போகின்றதா?

கடந்த வருடத்தில் ஏற்பட்டதைவிடவும் மோசமான நிலைமை 2026 இல் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருக்கும் கம்மன்பில, அதற்கான காரணங்களையும் முன்வைத்திருக்கின்றாா்.

“தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் ஒருதுளியேனும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால், 2026 இல் கடன் குண்டு வெடிக்கும்” என்பதுதான் அவரது கருத்து.

“ரூபாய் இல்லாமல் அல்ல, டொலர் இல்லாத காரணத்தால்தான் ஐ.எம். எப் வேலைத்திட்டத்துக்கு சென்றுள்ளீர்கள். எனினும், இந்த உடன்படிக்கை முழுவதிலும் ரூபாய் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. டொலர் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.

ஒரு வருடத்துக்கு இறக்குமதி செலவுக்காக மட்டும் 22 பில்லியன் டொலர் செலவாகிறது. கடன் செலுத்துவதற்காக 7 பில்லியன் டொலர் தேவைக்கப்படுகின்றது. ஆகையால், மேலும் கடனாளியாவதை தவிர, டொலர் பிரச்சினைக்கு இதில் தீர்வு இல்லை” என்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இந்த உடன்படிக்கை தொடா்பில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் உருவாகியிருக்கின்றது என்பதை அவரது உரை வெளிப்படுத்துகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் உள்ளடங்கும் தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரிக்கை முன்வைத்த போதும், மார்ச் மாதத்தில் உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இறுதி அனுமதி வழங்கும் வரையில் அது தொடர்பான தகவல்கள் முன்வைக்கமுடியாது என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இன்று வரை முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது ஒரு மா்மமாக நீடிக்கிறது என்பதுதான் எதிா்க்கட்சிகளின் கருத்து.

இந்த நிலையில் ஜனாதிபதி வெளியிட்ட புதிய தகவல் ஒன்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

“கடன் மறுசீரமைப்பின் போது வெளிநாட்டுக்கடன்கள் மட்டுமன்றி, உள்நாட்டுக் கடன்களும் மறுசீரமைக்கப்படும்” என ஜனாதிபதி தனது நாடாளுமன்ற உரையில் கூறியிருக்கின்றாா். இதற்கு எதிா்க்கட்சிகள் ஒவ்வொரு விதமான விளக்கத்தை கொடுத்து மக்களை அச்சமூட்டிக்கொண்டுள்ளன.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பின் போது உள்நாட்டு கடன் உள்ளடங்காது என்று நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் அடிக்கடி கூறியிருந்தாா்கள். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பரந்துபட்ட வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் இப்போது கூறியுள்ளார். ஜனாதிபதியும் இதனைத்தான் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்றாா்.

இது தொடா்பில் மேலதிக தகவல்களை ஜனாதிபதி வெளியிடாமலிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. எதிா்க்கட்சிகள் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த அதனைப் பயன்படுத்துகின்றன.

“இவ்வாறான நடவடிக்கைகளின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதனை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? இது தொடர்பான முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன?”  என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியிருக்கின்றாா் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ.

“அரசாங்கம் தற்போது இணங்கியுள்ள விடயங்களை செயற்படுத்தும் போது பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு அவசியமாகும்” என்றும் அவா்  வலியுறுத்தியிருக்கின்றாா்.

அரசாங்கத்துக்கு இன்று அதிகளவு உள்நாட்டு நிதி வளத்தைக் கொடுக்கக்கூடியதாக இருப்பது ஊழியா் சேமலாப நிதியமும், ஊழியா் நம்பிக்கை நிதியமும்தான். அதனால்தான், அவற்றில் அரசாங்கம் கைவைக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குவதில் எதிா்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வெற்றிபெறுகின்றன.

அவற்றில் கைவைத்தால் பாரிய மக்கள் கிளா்ச்சி ஒன்று வெடிக்கும் என்பது ரணிலுக்குத் தெரியும்.

இந்த நிலையில், “உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்புச் செய்தல்” என ஜனாதிபதி எதனைக் குறிப்பிடுகின்றாா். அதன்மூலமாக எவ்வாறான நிலை ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளா் கலாநிதி எம்.கணேசமூா்த்தியிடம் கேட்டோம். அதற்கு அவரளித்த பதிலை இங்கு தருகிறோம் –

“இலங்கைக்கு இரண்டுவிதமான கடன்கள் உள்ளன. ஒன்று வெளிநாட்டுக் கடன்கள். இரண்டாவது உள்நாட்டுக் கடன்கள். உள்நாட்டுக் கடன்களைப் பொறுத்தவரையில் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்கள். இரண்டாவது ஊழியா் சேமலாப நிதி, ஊழியா் நம்பிக்கை நிதி போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட பணம். வங்கிகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடன்களைப் பொறுத்தவரையில் ரூபாவாகப் பெற்ற கடன்களும் உள்ளது. டொலரில் பெற்ற கடன்களும் உள்ளன. இப்போது வெளிநாட்டுக் கடன்களை அரசாங்கம் மறுசீரமைப்பு செய்யும் போது, வெளிநாட்டவா்கள் இதனை நீங்கள் உள்நாட்டிலும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றாா்கள்.

உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமாக இருந்தால், கடன்களைக் கொடுத்த வங்கிகள், மற்றும் ஈ.பி.எப்., ஈ.ரி.எப். போன்ற நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச வேண்டும். இதனை அரசாங்கம் செய்ய முற்படும்போது ஈ.பி.எப்., ஈ.ரி.எப். போன்வற்றுக்கான வட்டியில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்டவா்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனைவிட கடுமையான ஒரு நிலை ஏற்பட்டால், இந்த நிதியங்களிலிருந்து  அதன் உறுப்பினா்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதி வெட்டிக் குறைக்கப்படலாம். ஆக, நேரடியாக பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான்.

வங்கிகளைப் பொறுத்தவரையில் நிலையான வைப்புக்களில் உள்ள தொகைக்கான வட்டியில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் சென்றால், வங்கிகள்தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும்.

இதில், அரசாங்கத்துக்கு கடன் வழங்கிய அத்தனை நிறுவனங்களும் ஒன்றில் கால நீடிப்புக்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அல்லது கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு பகுதியைக் குறைப்பதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும்.

இதில் ஒரு சின்ன பிரச்சினை வந்தாலும் இது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். உதாரணமாக வங்கியில் வைப்புச் செய்தவா்கள் அவற்றை மீளப் பெறுவதற்கு முற்பட்டால், வங்கிகளில் பெருமளவில் திரவத் தன்மை குறைவடையும். இவ்வாறான நிலையில் முழு வங்கித்துறையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலை விட வேறு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் இல்லை. இதனால் நிச்சயமற்ற தன்மை ஒன்று ஏற்படலாம். உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை மிகவும் கவனமாக – நிதானமாக செய்ய வேண்டும்.”இவ்வாறு கூறுகின்றாா் கலாநிதி கணேசமூா்த்தி.

மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வைக்காண்பதில் மேலும் கடன்களைப் பெறுவதில் மட்டும் வெற்றிபெற்றிருக்கும் அரசாங்கத்தினால்,   கடனிலிருந்து மீள்வதற்கான செயற்திட்டங்களில் எந்த வெற்றியையும் பெறவில்லை.

வெளிநாட்டு முதலீடுகளை எதிா்பாா்த்தளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடா்ந்தும் பல தடைகளும், நடைமுறைப் பிரச்சினைகளும் உள்ளன.  இதனால், புலம்பெயா்ந்த மக்களும் முதலீடுகளைக் கொண்டுவருவதில் தயங்குகின்றாா்கள்.

இந்த நிலையில் சா்வதேச நாணய நிதிய கடன்கள் மட்டும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீா்த்துவிடவில்லை. நிலைமை மேசமாகுமா இல்லையா என்பதை அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகா்வுகள்தான் தீா்மானிக்கும்!

Exit mobile version