இலங்கை அரசாங்கத்தின் டொலர் வேட்டை – பி.மாணிக்கவாசகம்

அரசாங்கத்தின் டொலர் வேட்டை

பி.மாணிக்கவாசகம்

இலங்கை அரசாங்கத்தின் டொலர் வேட்டை: இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள அந்நியச் செலவாணிக் கையிருப்பை அதிகரிக்கச் செய்வதற்காக அரசாங்கம் அலைமோதிக் கொண்டிருக்கின்றது.

இராணுவ வெற்றியையும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இனவாத, மதவாதப் போக்கையும் அரசியலுக்கான முதலீடாகக் கொண்டுள்ள ராஜபக்சக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் டொலர் கையிருப்பு மிக மோசமாகத்  தேய்வடைந்துள்ளது.

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தில் 700 பில்லியனாகப் பேணப்பட்ட அந்நியச் செலவாணியின் கையிருப்பு நாட்டின் அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்ய முடியாத அளவுக்குக் குறைவடைந்துள்ளது.

டொலர் கையிருப்பின் வீழ்ச்சியானது குறிப்பாக இரண்டு விடயங்களில் இந்த அரசாங்கத்தைத் திக்குமுக்காடச் செய்திருக்கின்றது. நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு மாத செலவைக்கூட அரசாங்கத்தின் இப்போதைய டொலர் கையிருப்பு போதாது என கூறப்பட்டுள்ளது. இதனால், இறக்குமதி இல்லையேல் நாடு மோசமான உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

மறுபுறத்தில் அந்நிய கடன்களை ஈடு செய்வதற்காக 2022 ஆம் ஆண்டில் 1.5 (ஒன்று தசம் ஐந்து) பில்லியன் டொலர்களைத் தேடியாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. இது கிட்டத்தட்ட இப்போதைய மிக மோசமாகக் குறைவடைந்துள்ள அந்நியச் செலவாணியின் தொகைக்கு ஈடானது என்று கூறப்படுகின்றது. இந்த இருமுனை நெருக்கடிகளை எதிர் கொள்வதற்காக டொலர் கையிருப்பை மீதப்படுத்திக் கொள்வதற்கும், டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்குமான முயற்சிகளில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றது.

இந்த வகையிலேயே இரசாயன விவசாய உள்ளீடுகளின் இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலவாணியை மீதப்படுத்தும் நோக்கத்தில் அவற்றின் இறக்குமதியை நிறுத்தியதுடன், விவசாயிகளுக்கு வழங்கி வந்த பசளை மானியத்தையும் திடீரென அரசு நிறுத்தியுள்ளது.

இரசாயன விவசாய உள்ளீடுகளின் இறக்குமதியைத் தடை செய்து விவசாயிகளை சேதனப் பசளையையும் சேதன முறையிலான பீடை ஒழிபபு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. ஆனால் இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு டொலர்கள் மீதமாகியதோ என்னவோ தெரியாது. ஆனால் இரசாயன விவசாய உள்ளீடுகளை அரசு வழங்க வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் விவசாயிகளும் பயிர்ச்செய்கையாளர்களும் வீதிகளில் இறங்கிப் போராடி அரசக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

அரசாங்கத்தின் டொலர் வேட்டைஇந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக பசளை இறக்குமதியில் தனியார் எவரும் ஈடுபடலாம் என்றும் அதற்கான மானியங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அரசு அறிவித்துள்ளது. அந்த மானியங்கள் சேதனப் பசளை உற்பத்திக்கும் பயன்பாட்டுக்கும் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபாய அறிவித்துள்ளார்.

பசளை இறக்குமதித் தடையுத்தரவையடுத்து, அந்நியச் செலவாணியில் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த பெருந்தோட்டத்துறையின் தேயிலை உற்பத்தியும் இறப்பர் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் அவற்றின் மூலம் கிடைத்து வந்த அந்நியச் செலவாணியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குளிக்கப் போய் சேறு பூசிய கதையாகவே முடிந்துள்ளது.

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு | Sankathi24
பசில் ராஜபக்ச

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காகப் புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவின் உதவியை நாடி புதுடில்லிக்கு மேற்கொண்ட நிதி சேகரிப்பு முயற்சியும் பலனளிக்கவில்லை என ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

வேறு வழிகளில் அந்நியச் செலவாணியைப் பெற்றுக் கொள்வதற்காக முயன்றுள்ள அரசு இரண்டு நடவடிக்கைகளை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது.

வெளி நாடுகளில் தமது அயராத உழைப்பின் மூலம் நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கின்ற டொலர்களை அதிகாரபூர்வமான வழிகளிலேயே தாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு கோரியிருக்கின்றது.

அத்துடன் கறுப்புச் சந்தை வழிமுறைகளின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புவதைத் தவிர்க்கும்படியும், அதிகாரபூர்வமான வழிகளின் ஊடாக பணம் அனுப்புபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அரச அறிவித்துள்ளது.

இதன் மூலம் சட்ட விரோதமாகக் கறுப்புச் சந்தையின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புகின்ற நடைமுறையை ஒழித்துக் கட்டுவதுடன், அந்நியச் செலவாணியை அதிகரிக்கச் செய்ய முடியும் என அரசு எதிர்பார்க்கின்றது.

அரசாங்கத்தின் டொலர் வேட்டைஇதனடிப்படையில் ஒரு டொலருக்கு 8 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்றும்போது சந்தைப் பெறுமதியிலும் பார்க்க ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்திற்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு மேலதிகமாகவே இப்போதைய 8 ரூபாய் அதிகரித்த கொடுப்பனவு பற்றிய அறிவித்தல் வெளியாகி உள்ளது.

இதற்கு மேலதிகமாக அதிகாரபூர்வ வழிமுறைகளின் ஊடாக பணம் அனுப்புபவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி வசதிகளும் டியுட்டி பிரி – வரிச்சலுகைகளும் செய்து கொடுக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் இல்லாமலில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் அதிகாரபூர்வ அந்நியச் செலவாணியின் வருகை கடந்த வருடத்திலும் பார்க்க இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 702.7 மில்லியன் டொலரில் இருந்து 353.2 மில்லியன் டொலராகக் குறைந்துவிட்டது. இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களின் இந்த வருமானம் முந்திய வருடத்தின் 9.3 வீதத்தில் இருந்து 4.6 வீதமாகக் குறைவடைந்துவிட்டது.

இந்தக் குறைவுக்கு போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்துடனான கறுப்புச் சந்தையின் செல்வாக்கே காரணம் என மத்திய வங்கியின் ஆளுனர் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்துக்கான கடன் செலுத்தல் தொகை 1.5 பில்லியன் டொலரை ஈடு செய்வதற்காக அரசு கொரோனா நோய்ப்பேரிடரினால் அடிபட்டுப்போயுள்ள உல்லாசப் பயணிகளின் வருகை மூலமான வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிச் செலுத்தும் செயற்பாட்டின் மூலம் முன்னேற்றமடைந்துள்ள நோய்த்தொற்று நிலைமையைச் சாதகமாகக் கொண்டு நாட்டின் முடக்க நிலை நீக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து உல்லாசப் பயணிகளின் வருகைக்காக நாட்டைத் திறந்துவிடுவது தொடர்பாகவும் அரசு முனைந்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் மூலமாக அந்நியச் செலவாணி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசாங்கத்திடம் உள்ளது.

மறுபுறத்தில் விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்திற்கு வீட்டிற்கு ஒரு பவுண் என்ற ரீதியில் தமிழ் மக்கள் கொடுத்த தங்கத்தையும், விடுதலைப்புலிகளின் வங்கிச் சேவையில் அடைவுச் சேவையின் மூலம் தமிழ் மக்களினால் அடைவு வைக்கப்பட்ட நகைகளையும் உள்ளடக்கிய விடுதலைப்புலிகளின் தங்கச் சுரங்கத்தின் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணலாம் என்ற நப்பாசையும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.

இந்த நப்பாசையின் வெளிப்பாடாகவே இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் தங்களிடம் இருந்த தங்க நகைகளையும் தங்கத்தையும் புதைத்துள்ளதாகக் கருதப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தங்க வேட்டைக்கான அகழ்வு வேலைகளை இராணுவம் முன்னெடுத்திருந்தது.

இதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு முல்லைத்தீவு நீதிபதியின் முன்னிலையில் இந்த அகழ்வு வேலைகள் பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இந்த அகழ்வுத் தேடலில் ஒரு பவுண் தங்கம் கூட கிடைக்கவில்லை என்றும் அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் தகவலகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில் திறைசேரி அதிகாரிகள் இந்த வருட முடிவுக்குள் அதாவது டிசம்பர் முடிவுக்குள் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக மோசமாக 16 வீதம் வீழ்ச்சி கண்டுள்ள அந்நியச் செலவாணியின் இருப்பை இந்த வருடம் முடிவடைவதற்குள் 3.5 பில்லியனாக அதிகரிக்கும் என்று திறைசேரி அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

மோசமான பொருளாதார நெருக்கடிக்கும், மோசமான அந்நியச் செலவாணி கையிருப்புக்கும் ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான அரசாங்கத்தின் இந்த டொலர் அதிகரிப்பு எதிர்பார்ப்பானது மந்திரத்தில் மாங்காயை வீழ்த்தியதாக முடியுமா அல்லது ஏமாற்றத்தில் முடியுமா என்பது தெரியவில்லை.

 

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad இலங்கை அரசாங்கத்தின் டொலர் வேட்டை - பி.மாணிக்கவாசகம்