Tamil News
Home செய்திகள் உலக மனித நேய நாள் –“இனவாத சாக்கடையில் மூழ்கிப் போயுள்ளவர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பார்களா?”

உலக மனித நேய நாள் –“இனவாத சாக்கடையில் மூழ்கிப் போயுள்ளவர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பார்களா?”

தனிமனித நிம்மதியும், பொது அமைதியும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ”உலக மனித நேய நாள் வரும் 19ம் திகதி ” உலகளவில்  நினைவு கூறப்படுகின்றது.

இந்நிலையில்,இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையடுத்து  கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி  காலி முகத்திடலில் பெரும் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு , அது ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. ஆனால், குறித்த போராட்டத்தின் போதும், கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி, ரணில் பதவியேற்றப் பின்பும் காலி முகத்திடல் போராட்டத்தை ஒடுக்கும்  நோக்கோடு  அரச பயங்கரவாதம் ஏவப்பட்டு அது வன்முறையாக மாறியது. அதன் தொடர்ச்சியாக கொழும்பு கடற்கரை, நகரின் சில பகுதிகளில் அடையாளம் காணப்படமுடியாத பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டர். மேலும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அது குறித்து  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  சிங்கள இன சகோதரர் தம்மிக்க சிறிவர்தன  இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி,

* கேள்வி :-

இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது அரசின் மனிதாபிமானத்திக்கு எதிரான நடவடிக்கைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

* பதில் :-

ஒரு ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு தடையில்லை. ஜனநாயகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஊழலற்ற நிலையினை தோற்றுவிப்பதற்கும் போராட்டங்கள் உந்துசக்தியாக அமைகின்றன. எமது போராட்டம் நியாயமானது என்பதோடு போராட்டத்தில் ஈடுபட்டமை க்கும் நியாயமான காரணம் இருந்தது.

இலங்கையில் ராஜபக்ஷாக்களினால் முன்னெடுக்கப்பட்ட அராஜக, ஊழல்மிக்க ஆட்சியின் காரணமாக நாடு பல்வேறு வழிகளிலும் பின்னடைவை சந்தித்திருந்தது. நாட்டு மக்கள் ஒரு வேளை சோற்றுக்கே அல்லாடும் நிலையில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடியது. அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வரிசைகளிலேயே இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த கொடூரமும் அரங்கேறி இருக்கின்றது.

ராஜபக்ஷாக்கள் டொலர்களை சுருட்டிக் கொண்ட நிலையில், இறக்குமதி டொலர் இல்லாத நிலையில் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் பணவீக்கம் இரட்டிப்பாகி இருந்தது.நாட்டில் நிலவிய எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக தொழிற்றுறைகளும் பாடசாலைகளும் முடக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. மந்தபோஷணையும் அதிகரித்தது.

எனவே இவற்றில் இருந்தும் நாட்டை மீட்டெடுத்து அரசியலில் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தவும், ஊழலுக்கு பெயர்போன ராஜபக்ஷாக்களை அரசியலில் இருந்து விரட்டியடிக்கவும் நாம் உறுதி பூண்டு காலிமுகத்திடலில் எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். எம்முடன் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள் கை கோர்த்துக் கொண்டு வரலாறு படைத்தனர். நாம் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் ஜனநாயக மரபுகளைத் தழுவியே எமது போராட்டத்தை முன்னெடுத்தோம். எந்தவொரு உயிர் உடைமை சேதத்தையோ ஏற்படுத்த நாம் முனையவில்லை. எனினும் எமது போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு சார்பான சில விஷமிகள் உட்புகுந்து எமது நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைந்தனர். எனினும் எம்மிடம் இவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மே ஒன்பதாம் திகதி அரசுக்கு சார்பான காடையர்களை காலிமுகத்திடலிலுக்கு ஏவிவிட்டு சக இளைஞர்களை தாக்குகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதனால் எமது இளைஞர்கள் சிலர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழப்புகளையும் நாம் சந்திக்க வேண்டி இருந்தது.எனினும் மாறாக நாம் அராஜக பாணியில் செயற்படவில்லை.எமது போராட்டத்தின் உக்கிரத்தின் விளைவாக பிரதமராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ வீடு செல்ல நேர்ந்தது.நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் அரசியலில் இருந்து துரத்தியடித்தோம்.

இதனிடையே சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எமது நியாயமான போராட்டத்திற்கு பெரிதும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

போராட்டத்தின் அழுத்தம் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிட்டியது.அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளிலேயே நடுநிசியில் எமது இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் பல இளைஞர்கள் காயமடைந்தனர். இது ஒரு அராஜகமான நடவடிக்கையாகும். இதனைத் தொடர்ந்து  போராட்டத்திற்கு தலைமை  வகித்த அல்லது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பட்டியல் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.ராஜபக்ஷாக்களின் தயவுடன் ஜனாதிபதியாகியுள்ள ரணில் அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது வெளிப்படையாகும். இதேவேளை அவசர கால சட்டமும் தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ளது.இச்சட்டத்தை பயன்படுத்தி ஜனநாயகத்திற்காக போராடிய இளைஞர்களை நசுக்குவது எவ்விதத்திலும் நியாயமாகாது.

அரசின் கையாலாகாத தனத்தையே இது வெளிப்படுத்துகின்றது. கைது  நடவடிக்கைகளாலோ அல்லது அச்சுறுத்தல் மூலமோ எம்மை அடக்கி ஒடுக்கிவிட முடியாது.நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையேல் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடையலாம்.

 * கேள்வி :-

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்துலக நாடுகளின் பங்களிப்பு காத்திரமாக இருந்ததா?

* பதில்:-

இளைஞர்களின் போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஒடுக்க முனைந்த சந்தர்ப்பங்களில் எல்லாம். அனைத்துலக நாடுகள் இதனை கண்டித்துப் பேசி ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு எவ்விதமான இடையூறுமில்லாது இடமளிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது ஒரு சிறப்பம்சமாகும். அத்தோடு இன்னும் சில நாடுகளில் இளைஞர் மீதான தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் என்பவற்றைக் கண்டித்து மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பினலயும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இது அந்நாடுகள் இலங்கை இளைஞர்களின் செயற்பாடுகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவுள்ளது.குறிப்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங, பிரித்தானிய தூதுவர் உள்ளிட்ட பலரும் இளைஞர்கள் மீது இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும்  “ஒடுக்கல்”நடவடிக்கைகளை  உடனடியாகவே கண்டித்துப் பேசி இருந்தனர்.

உலகின் மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தன.இலங்கை அரசின் இளைஞர் போராட்ட ஒடுக்கல் நிலைமையானது பல்வேறு பாதக விளைவுகளையும் எதிர்காலத்தில் தோறுவிக்கக்கூடுமென்றும் இவ்வமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அத்தோடு  இத்தகைய நடவடிக்கைகள் இலங்கைக்கான உதவி வழங்கலை தாமதப்படுத்தும் அல்லது இல்லாது செய்யுமென்றும் சுட்டிக்காட்டி இருந்தமையும் தெரிந்த விடயமாகும். இத்தகைய செயற்பாடுகளை நாம் மனதார பாராட்டுகின்றோம்.

அனைத்துலக நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகளால் இலங்கை அரசாங்கம் இளைஞர்களுக்கு எதிராக திட்டமிட்டிருந்த செயற்பாடுகளை சுருட்டிக் கொள்ள நேர்ந்துள்ளது என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவுபடுத்து விரும்புகின்றேன்.

இதேவேளை அறிக்கைகள் மற்றும் ஒன்று கூடி எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதற்கு அப்பால் ஆக்கப்பூர்வமான சில நடவடிக்கைகளையும் அனைத்துலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும்.குறிப்பாக பொருளாதாரத் தடை குறித்த அழுத்தங்களை அனைத்துலக நாடுகள் இலங்கையின் மீது பிரயோகிகாகலாம். இதன் மூலமாக இலங்கை நேர்வழியில் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அத்தோடு ஊழல்வாதிகளை கைது செய்து அவர்களிடமுள்ள பணத்தினை அரசுடைமையாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.எனவே இதனை சாத்தியமாக்கிக்கொள்ள அனைத்துலக அழுத்தமானது மிகமிக அவசியமாகியுள்ளது என்பதும் நினைவு கூறத்தக்கதாகும்.

* கேள்வி :-

இலங்கையில் எவ்வாறு எல்லா மக்களுக்குமான மனிதாபிமான ஆட்சியை உருவாக்கலாம்?

* பதில் :-

இது ஒரு முக்கியமான கேள்வியாகும்.இலங்கையில் பல்லின மக்கள் வாழுகின்றனர்.பன்மைக் கலாசாரம் இங்கு சிறப்புற்று காணப்படுகின்றது.

இந்நிலையில் எல்லா மக்களும் எல்லா உரிமைகளையும் சமமாக பெற்றுக் கொள்ள வழி செய்தல் வேண்டும்.சமகால இலங்கையில் இந்த நிலைக்கு இடமில்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும். மக்களின் உரிமைகள், மனிதாபிமான ஆட்சி குறித்து நாம் பேசுகின்றபோது அரசியல் யாப்பு தொடர்பாக சில விடயங்களை குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது. பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் பன்மைக் கலாசாரத்துக்கு வலு சேர்க்கப்படுவதென்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.

அரசியல்யாப்பு இனம், மொழி, மதம் என்று ஒரு பக்கச்சார்பாக அல்லாது பக்கச்சார்பற்ற முறையில் அமைந்திருத்தல் வேண்டும்.ஆனால் இலங்கையில் இந்நிலைமையைக் காண முடியவில்லை.சமகாலத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பு 1978 ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் முன்வைக்கப்பட்டது.

இந்த யாப்பு ஐக்கியத்துக்கு வலுசேர்க்காமல் நாட்டில் பிளவுகளும், விரிசல்களும் தலைதூக்குவதற்கு அடித்தளமாகி இருப்பதாக விமர்சனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

யாப்பில் இருபதுக்கும் அதிகமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் கூட இத்திருத்தங்களும் எதிர்பார்த்த சாதக விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. எனவே நாட்டு மக்கள் ஐக்கியத்துடன் கை கோர்க்கக்கூடிய, சகல இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய, பின்தங்கிய மலையக மக்கள் உள்ளிட்டோருக்கு விசேட ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இனவாத சாக்கடையில் அரசியல்வாதிகள் மூழ்கிப் போயுள்ளன நிலையில்  இலங்கையில் இது சாத்தியமாகுமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் யாப்பு குறித்து நாம் பேசுகின்றபோது இந்தியாவின் அரசியல் யாப்பினை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். இறைமையுள்ள சுதந்திர இந்தியாவின் அதிகாரம், சக்திகள் மற்றும் அரசாங்கத்தின் மூலங்கள் யாவும் மக்களிடமிருந்தே தோன்றுகின்றன என்பதை யாப்பு வலியுறுத்தும் நிலையில் மக்களாட்சி, மனிதாபிமான ஆட்சிக்கும் அது வலுசேர்ப்பதாகவுள்ளது. மேலும் ” இந்தியா ஒரு இறைமையுள்ள சமதர்ம, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாகும். இது நாட்டின் சகல பிரசைகளின் நீதியையும், சுதந்திரத்தையும்,சமத்துவம் மற்றும் தோழமையையும் பாதுகாக்கும்” என்று யாப்பு வலியுறுத்துகின்றது. இத்தகைய வெளிப்பாடுகள் இலங்கையின் அரசியல் யாப்பிலும் உள்ளடக்கப்பட்டு செயல்வடிவம் பெறச் செய்வது அவசியமாகும்.

இதேவேளை யாரும் எவருக்கும் அடிமையில்லை.எந்தவொரு இனமும் இன்னொரு இனத்திற்கு அடங்கிப் போகவேண்டிய அவசியமும் கிடையாது என்றும் தம்மிகக சிறிவர்தன மேலும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version